Tamil Sanjikai

வீடு தான் பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடம் என ஐ.நா. அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு உலக அளவில் பெண்கள் தங்களின் கணவன், பெற்றோர், சகோதரர்களால் ஆணவக் கொலை, வரதட்சணை பிரச்சினையால் உறவினர்களாலும் அதிகமாக கொல்லப்பட்டுள்ளனர். எனவே பெண்கள் வாழ்வதற்கு அவர்களது வீடு ஆபத்தான இடம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டு மட்டும் உலக அளவில் 50 ஆயிரம் பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதாவது கடந்த ஆண்டில் நாள் ஒன்றுக்கு 137 பெண்கள் என ஒரு மணிநேரத்துக்கு 6 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட அனைவரும் அவர்களது கணவர், முன்னாள் கணவர், குடும்ப உறுப்பினர்கள் அல்லது பெற்றோர்களால் கொல்லப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 25-ஆம் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பெண்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற வன்முறைகள் குறித்த அறிக்கையை ஐ.நா.வின் போதை மருந்து மற்றும் குற்றத்தடுப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டில் இருந்து 2017-ஆம் ஆண்டு வரை பெண்கள் தங்களின் கணவர், குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்ட விகிதாச்சாரத்தின் அளவு அதிகரித்துள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 5 ஆண்டுளில், போதை மருந்து மற்றும் குற்றங்கள் தடுக்கும் பிரிவுக்கு சுமார் 87,000 புகார்கள் வந்துள்ளதாகவும், அவற்றில் 58 சதவிகிதம் வழக்குகளில் தங்கள் குடும்ப உறுப்பினர்களே குற்றவாளிகளாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 34 சதவிகிதம் வழக்குகளில் தங்களின் கணவர், காதலன் மற்றும் நண்பர்களின் மூலம் மட்டுமே கொலை செய்யப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

0 Comments

Write A Comment