Tamil Sanjikai

அமெரிக்காவில் கெண்டக்கி மாகாணத்தில் உள்ள லாஸ் வில்லே நகரத்தில் சுவாமிநாராயண் என்ற இந்துக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர், அங்குள்ள சாமி படங்கள் மீது கருப்பு பெயிண்ட்டை வீசியும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் சேதப்படுத்தியுள்ளனர்.

மேலும், கோவிலில் இருந்த இருக்கை ஒன்றில் கத்தி ஒன்றை குத்தியபடி விட்டுச்சென்றுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமைக்குள் இச்சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என கூறப்படுகிறது. லாஸ் வில்லே நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மத்தியில் இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றத்தை வெறுப்பு குற்ற சம்பவமாக கருதி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்துக்கு லாஸ் வில்லே நகர மேயர் கிரேக் பிஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது ஒன்றும் புதிதல்ல, கடந்த ஆண்டுகளிலும் நடைபெற்றுள்ளன. கடந்த ஏப்ரல் 2015-ல் வடக்கு டெக்ஸ்சாஸில் உள்ள இந்து கோவில் சேதப்படுத்தப்பட்டது. பிப்ரவரி 2015-லும் கெண்ட் மற்றும் சீயாட்டில் உள்ள இந்து கோவில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது.

0 Comments

Write A Comment