பிரான்ஸ் நாட்டில் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி உயர்வுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்திய நிலையில், வரியைக்குறைக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. பெட்ரோலியப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரியை குறிப்பிட்ட சதவிகிதம் பிரான்ஸ் அரசு உயர்த்தியது. முதலில் சமூக வலைதளங்கள் மூலமாக தொடங்கிய அரசுக்கு எதிரான பிரசாரம், போராட்டமாக மாறியது. பாரீஸ் உள்ளிட்ட பல நகரங்களில் மக்கள் திரண்டு வந்து அரசுக்கு எதிராக போராடி வந்தனர்.
கடந்த மூன்று வாரங்களாக நடந்த போராட்டம் சில நாட்களில் வன்முறையாக மாறியது. யெல்லோ வெஸ்ட் என்ற எதிர்ப்பு குழுவினர் பெயரில் நடந்த போராட்டத்தில் பாரிஸ் மற்றும் புறநகர் பகுதிகளில் கார்கள், கட்டிடங்களுக்கு தீவைக்கப்பட்டது. வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், கடைகளில் பொருட்கள் சூறையாடப்பட்டன. விலையுயர்ந்த பொருட்கள் கலவரக்காரர்களால் கொள்ளையடிக்கப்பட்டன. 1968-ஆம் ஆண்டுக்கு பிறகு பிரான்சில் நடைபெற்ற மோசமான கலவரமாக இது கருத்தப்படுகிறது. தொடர்ந்து 2 நாட்கள் நீடித்த கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் தண்ணீரை பீச்சியடித்தும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் நடவடிக்கை எடுத்தனர். இதில் பலர் காயமடைந்த நிலையில் கலவரத்தில் ஈடுபட்டதாக இதுவரை 400-க்கும் மேற்பட்டோரை பாரிஸ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள மேலும் பலரை தேடி வருகின்றனர். நெருக்கடி நிலையை அமல்படுத்த அரசு முடிவுக்கு வந்த அளவுக்கு மோசமான சூழல் நிலவியது. இதனால், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது யார்? என்பதே தெரியாததால் பேச்சுவார்த்தைக்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது போராட்டத்தில் 3 பேர் பலியான நிலையில், சர்வதேச அளவில் இவ்விவகாரம் பேசப்பட்டதால் வேறு வழியின்றி பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியைக் குறைக்க முடிவுக்கு வந்துள்ளது.
0 Comments