ரஷ்ய கடல் பகுதியில் 2 எரிபொருள் கப்பல்கள் தீ பிடித்து விபத்துக்குள்ளாகின. இதில் இந்தியர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளான 2 கப்பல்களிலும் தான்சானியா நாட்டுக்கொடி பறந்துள்ளது. ஒரு கப்பலில் திரவ இயற்கை எரிவாயும் (எல்.என்.ஜி.) மற்றொரு கப்பலில் காலியான டாங்க்கும் இருந்துள்ளது. ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எரிபொருள் மாற்றம் செய்தபோது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கேண்டி என்ற பெயர் கொண்ட ஒரு கப்பலில் 17 பேர் இருந்துள்ளனர். அவர்களில் 8 பேர் இந்தியர்கள். ஏனையோர் துருக்கி நாட்டைச்சேர்ந்தவர்கள் ஆவர். விபத்துக்குள்ளான இன்னொரு கப்பலின் பெயர் தி மேஸ்ட்ரோ. அதில் 15 பேர் இருந்தனர். அவர்களில் துருக்கி நாட்டை சேர்ந்தவர்கள் 7 பேர். இந்தியாவை சேர்ந்தவர்கள் 7 பேர். இதேபோன்று லிபியா, ரஷ்யாவை சேர்ந்தவர்களும் தி மேஸ்ட்ரோவில் இருந்துள்ளனர்.
தீ விபத்தில் மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த இடத்தில் மோசமான வானிலை காணப்படுவதால் உயிரிழந்தவர்களின் உடல்களையும், கப்பலில் சிக்கித் தவிப்பவர்களையும் மீட்பதில் சிக்கல் நிலவுவதாகவும், மீட்பு பணிகளை தொடங்குவதற்காக ரஷ்ய கடலோர பாதுகாப்பு படை மற்றும் விமானங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
0 Comments