Tamil Sanjikai

விசா மோசடி விவகாரத்தில், குடிபெயர்வுத்துறை விதிகளை மீறியதாக 129 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்திற்கு முதல் முன்னுரிமை கொடுத்து, 129 மாணவர்களின் உதவிக்காக இந்திய தூதரகம் 24 மணி நேர ஹாட்லைன் வசதி ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவில் பயில்வதற்காக மாணவர்களுக்கு எஃப்1 விசா வழங்கப்படுகிறது. இத்தகைய வெளிநாட்டு மாணவர்களுக்கு தற்காலிகமாக பணிவாய்ப்பு பெறுவதற்காக சிபிடி ((Curricular Practical Training - CPT)) என்ற அனுமதியும் வழங்கப்படுகிறது. கல்வி பயில்வதற்காக முறையாக விசா பெற்று சென்ற மாணவர்கள், குறிப்பிட்ட படிப்பை முடித்து, அமெரிக்காவிலேயே பணிபுரிவதற்காக பணி விசாவுக்காக காத்திருப்பது உண்டு.

இந்த இடைப்பட்ட காலத்தில் தொடர்ந்து அமெரிக்காவில் தங்கியிருப்பதற்காக பல்கலைக்கழகங்களில் குறிப்பிட்ட படிப்புகளுக்கு பதிவு செய்துகொள்வதும் உண்டு. அந்த வகையில், ஃபார்மிங்டன் பல்கலைக்கழகத்தில் பல மாணவர்கள் பதிவு செய்துகொண்டுள்ளனர். ஆனால் இந்த ஃபார்மிங்டன் பல்கலைக்கழகம் என்பது, விசா மோசடிகளையும் குடிபெயர்வு விதி மீறல்களையும் கண்டறிவதற்காக உள்நாட்டு பாதுகாப்புத்துறையால் போலியாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு ரகசிய நடவடிக்கையாகும்.

இந்த ரகசிய நடவடிக்கை குறித்து அறியாமல், விசா மோசடியில் ஈடுபட்டதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 பேர் கடந்த வாரத்தில் கைது செய்யப்பட்டனர். எஃப்1 விசா முறையை முறைகேடாக பயன்படுத்தி, சுமார் 600 மாணவர்களை அமெரிக்காவிலேயே தங்கவைப்பதற்காக மோசடியில் ஈடுபட்டதாக இந்த 8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஃபார்மிங்டன் பல்கலைக்கழக ஸ்டிங் ஆபரேசன் எனப்படும் இந்த ரகசிய நடவடிக்கையின் தொடர்ச்சியாக, இந்தியாவை சேர்ந்த 129 மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வகுப்புகள் ஏதும் நடைபெறாது, வகுப்புகளில் தாங்கள் கலந்துகொள்ளப் போவதில்லை எனத் தெரிந்தே இவர்கள், பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துகொண்டு கட்டணம் கொடுத்திருப்பதாக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். நியூஜெர்சி, அட்லாண்டா, ஹூஸ்டன், மிச்சிகன், கலிஃபோர்னியா, லூசியானா, வடக்கு கரோலினா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தவறான முறையில் மாணவர் என்ற அந்தஸ்தில் அமெரிக்காவில் தங்கியிருப்பதற்காக போலிப் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துகொண்டுள்ளனர் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், கைது செய்யப்பட்டவர்கள் போலிப் பல்கலைக்கழகம் என தெரியாமல் சேர்ந்துவிட்டதாகவும், தவறுகளை கண்டறிவது என்ற பெயரில் அதிகாரிகள் மோசமான ஒரு முறையை பின்பற்றியிருப்பதாகவும் குடிபெயர்வு வழக்குகளுக்காக வாதாடும் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 129 இந்திய மாணவர்களும் விசாரணையின் முடிவில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, 129 இந்திய மாணவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்திற்கு முதல் முன்னுரிமை கொடுத்து தூதரகத்தின் மூலம் நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் 129 மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உதவி செய்வதற்காக ஹாட்லைன் தொலைபேசி வசதியையும் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் ஏற்படுத்தியுள்ளது. தூதரக முறையில், மாணவர்களை அணுகுவதற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஸ்குமார் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment