Tamil Sanjikai

காஷ்மீரில் புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் ராணுவத்தினரை இந்தியா அடித்து விரட்டியது. அப்போது இரு நாட்டு போர் விமானங்களும் பரஸ்பரமாக தாக்கிக் கொண்டன.

இதில் பாகிஸ்தான் விமானம் தாக்கப்பட்டு விழுந்தது. கிடைத்த விமான பாகங்களை ஆய்வு செய்த இந்திய ராணுவத்தினர், தாக்குதலுக்கு பாகிஸ்தான் எப்.16 போர் விமானத்தையும், AMRAAM ஏவுகணையையும் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர். ஆனால் பாகிஸ்தான் இதனை மறுத்து வருகிறது. ஆனால் கைப்பற்றப்பட்ட பாகங்களிலுள்ள வரிசை எண், குறியீடு உள்ளிட்ட சில ஆதாரங்களை வைத்து இது எப்.16 ரக போர் விமானம் என்பதை உறுதியாக கூறிய இந்தியா, அமெரிக்காவிற்கும் ஆதாரங்களை அனுப்பி வைத்தது.

எப்16 ரக போர் விமானத்தை உள்நாட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், மற்ற நாடுகள் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடாது என்ற ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கியது. ஆனால் ஒப்பந்த விதிகளை மீறி தற்போது எப்16- ரக போர் விமானத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியதாக இந்தியா குற்றம் சாட்டியது.

ஆனால், இந்தியாவின் குற்றச்சாட்டை மறுக்கும் வகையில், அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ”ஃபாரீன் பாலிசி” என்ற செய்தி இதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் பிரபலமான இந்த இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில், அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் சமீபத்தில் பாகிஸ்தான் வசம் உள்ள எப். 16 ரக விமானங்கள் எத்தனை உள்ளது என்பதை எண்ணி பார்த்ததாகவும், இதில், அமெரிக்காவால் வழங்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையில் எதுவும் குறையவில்லை.

எப்.16 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இந்தியாவின் குற்றச்சாட்டிற்கு நேரடியாக முரண்படும் வகையில், இந்த தகவல் உள்ளது” என்று நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி இந்த தகவலை உறுதிப்படுத்தியதாகவும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக இது பற்றி எந்த கருத்தையும் கூறவில்லை.

0 Comments

Write A Comment