Tamil Sanjikai

தென்கொரியாவில் உள்ள மிகப்பெரிய நாய்கள் வதைமுகாமை இடிக்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்கொரியா தலைநகர் சோலின் தெற்கே அமைந்துள்ள சங்னாம் நகரில் உள்ள டெப்யோங்-டாங் நாய்கள் வதைமுகாம் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் பூங்கா உருவாக்கப்படும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த முகாமில் ஆறு நாய்கள் வதைக்கூடங்கள் செயல்பட்டு வந்தன.

தென்கொரியாவில் ஆண்டு தோறும் சுமார் பத்து லட்சம் நாய்கள் இறைச்சிக்காகக் கொல்லப்படுகின்றன. இந்த வழக்கத்தை நிறுத்த வேண்டும் என விலங்குகள் நல செயல்பாட்டாளர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் தென்கொரியர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவாக இருந்த நாய்க்கறியை, உண்ணும் வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

தற்போது, இது ஒரு வரலாற்றுத் தருணம். நாடு முழுவதும் உள்ள பிற நாய்கள் வதைக்கூடங்களை மூட இது வழிவகுக்கும் என கொரிய விலங்குகள் நல ஆர்வலர்கள் எனும் அமைப்பு கூறியுள்ளது. வதைகூடங்களில், நாய்களைக் கொல்ல மின்சாரம் பாய்ச்சும் இயந்திரம், கத்திகள், ரோமங்களை நீக்கும் கருவிகள் ஆகியவற்றைப் பார்க்கவே பயங்கரமாக இருந்ததாக ஹியூமேன் சொசைட்டி இன்டர்நெஷனல் எனும் அமைப்பு கூறியிருந்தது.

ஆண்டு தோறும் கோடைக் காலத்திலும் தென்கொரியாவில் உணவுத் திருவிழா நடத்தப்பட்டு, அதில் நாய்களின் இறைச்சியில் செய்யப்பட்ட பலவிதமான உணவு வகைகள் பரிமாறப்படும். ஆனாலும், அதைவிட கோழி இறைச்சியில் செய்யப்படும் கோழிக் கறி சூப் உள்ளிட்டவற்றை விரும்பும் தென்கொரியார்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சோலில் நாய் இறைச்சி விற்பனை உணவகங்களின் எண்ணிக்கை 1500க்கும் அதிகமாக இருந்தன. கடந்த 2015-ஆம் ஆண்டு அவற்றின் எண்ணிக்கை 700 அளவுக்கு குறைந்தன. தென்கொரிய மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு சதவீதத்தினர் நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். நாய்கள் வதைகூடங்களை முறைப்படுத்த தென்கொரியாவில் இப்போதுவரை சட்டங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment