இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை நடந்து வருவதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் நேற்று இரவு முதல் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
முதலில் கொழும்பு அருகேயுள்ள புட்டாளம், குருநெங்களா மற்றும் கம்பகா ஆகிய இடங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அங்கு கிறிஸ்தவ குழுக்கள் மசூதிகள் மற்றும் முஸ்லிம்களுக்கு சொந்தமான இடங்களில் தாக்குதல் நடத்தியதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இந்த 3 மாவட்டங்களிலும் நாளை காலை 6 மணி வரைக்கும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். நாடு முழுவதும் இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு இருக்கும் என்று காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்கு சொந்தமான இடங்களில் ஆங்காங்கே வாகனங்களுக்கு சில குழுக்கள் தீ வைத்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஹெட்டிப்போளாவில் சில கடைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக வதந்திகள் பரவாமல் இருக்கவும், வன்முறைகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக ஃபேஸ்புக், வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலை தளங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருப்பதாகவும் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
0 Comments