Tamil Sanjikai

இலங்கையில் கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் பலர் தேவாலயங்களில் இறைவழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கொழும்பு நகரின் 3 கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் 3 ஓட்டல்களில் இன்று காலை 8.45 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

கொழும்புவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், கடலோர நகரான நெகோம்போவில் உள்ள புனித செபாஸ்டியான் ஆலயம் மற்றும் பட்டிகலோவாவில் உள்ள ஆலயம் ஒன்றிலும் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.

இதேபோன்று ஷாங்கிரிலா, தி சின்னமோன் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய 3 ஓட்டல்களிலும் 3 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவத்தில் இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளதாகவும் . 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பலி எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது.

குண்டுவெடிப்பு சம்பவத்தினை அடுத்து ஆலயங்களில் இருந்த மக்கள் பலர் அலறியடித்து தெருக்களில் ஓடினர். சம்பவம் அறிந்து போலீசார் அங்கு உடனடியாக சென்று காயமடைந்தவர்களை மீட்டனர். ஆம்புலன்சு வண்டிகளும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. ஆலயங்களை சுற்றிலும் ஆயுதமேந்திய போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கொழும்பு நகரில் பல்வேறு இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த தாக்குதல்களுக்கான காரணம் தெரியவரவில்லை. எந்தவொரு அமைப்பும் இதற்கு இதுவரை பொறுப்பேற்கவில்லை. இதுபற்றி மத்திய வெளிவிவகார துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், கொழும்பு நகரில் உள்ள இந்திய தூதரிடம் பேசி வருகிறேன். நிலைமையை உற்று நோக்கி வருகிறோம் என தெரிவித்து உள்ளார்.

0 Comments

Write A Comment