ஈராக் நாட்டின் மொசூல் நகரில் குர்து இன மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். இவர்கள் நேற்று முன்தினம் நவுரூஸ் என்று அழைக்கப்படும் குர்து புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடினர்.பிரபல சுற்றுலா தலத்துக்கு சென்று புத்தாண்டை கொண்டாடுவதற்காக 150-க்கும் மேற்பட்டோர் பெரிய படகு ஒன்றில் டைகரிஸ் ஆற்றில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஆற்றில் நீர் வரத்து அதிகமாக இருந்த நிலையில், சற்றும் எதிர்பாராத வகையில் படகு திடீரென தலைகீழாக கவிழ்ந்தது. அதனால் படகில் இருந்த அனைவரும் ஆற்றில் விழுந்து தத்தளித்தனர். நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.
தகவல் அறிந்து மீட்பு படகுகள் செல்வதற்குள் பெண்கள், குழந்தைகள் உள்பட 40 பேர் பரிதாபமாக இறந்தனர். நீரில் மூழ்கி மாயமான 100-க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.
இதில் மேலும் 60 பேர் பிணமாக மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது. அதேசமயம் 55 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற இந்த கோர விபத்து அந்நாட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
0 Comments