அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமகன்களுக்கு பொது மருத்துவ இன்சூரன்ஸ் வழங்குவதற்காக 1960ஆம் ஆண்டுல் மருத்துவ திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், ராணுவ வீரர்கள் என 11 கோடி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் விரிவடைந்துள்ளது.
எனினும் இந்த இன்சூரன்ஸ் முறையில் மறைமுகமாக பல மோசடிகள் நடப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இதற்காகவே கடந்த 2007–ம் ஆண்டு மருத்துவ மோசடி தடுப்புப் படை ஒன்று அமைக்கப்பட்டது. இதன்மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டு, சுமார் 4 ஆயிரம் பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவில் மருத்துவ இன்சூரன்ஸ் துறையில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்திருப்பதை அந்நாட்டு நீதித்துறை கண்டுபிடித்துள்ளது.
நூற்றுக்கணக்கான நோயாளிகளை ஏமாற்றி 1.2 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 ஆயிரத்து 309 கோடி) மோசடி செய்யப்பட்டதாகவும், இந்த மோசடி தொடர்பாக 24 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ பொதுக்காப்பீடு இன்சூரன்ஸ் திட்டத்தில் இடம்பெற்றுள்ள முதியவர்கள் அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கு மணிக்கட்டு, முழங்கால் மூட்டு மற்றும் பாதிக்கப்பட்டுள்ள உடலின் மற்ற பாதிக்கப்பட்ட பாகங்களை மாற்று அறுவைசிகிச்சை அளிப்பதாக திட்டம் அறிவிக்கப்பட்டது.
பிலிப்பைன்ஸ் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இயங்கும் ஒரு சர்வதேச டெலிமார்க்கெட்டிங் சந்தையின் மூலம் இத்திட்டம் விளம்பரப்படுத்தப்பட்டது. இதில் ஈர்க்கப்பட்டு நூற்றுக்கணக்கான நோயாளிகள் இத்திட்டத்தில் இணைந்தனர்.
இந்த மோசடிக்காரர்கள் பணத்திற்காக டாக்டர்கள், நோயாளிகளை நேரடியாக சந்திக்காமலே தேவையான உறுப்புகளைப் பரிந்துரைத்ததாக தெரிகிறது. இந்த மோசடியில் இருந்து கிடைத்த முழு வருமானமும் சர்வதேச அளவில் நடத்தப்படும் போலி நிறுவனங்களுக்கு சென்றன.
இந்த மோசடியை அரங்கேற்றிய நபர்கள் தங்களுக்கு கிடைத்த கோடிக்கணக்கான பணத்தை கொண்டு அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் ஏராளமான ஆடம்பர சொகுசு பங்களாக்கள், விலை மதிப்புமிக்க கார்கள், உல்லாச கப்பல்கள் உள்ளிட்டவற்றை வாங்கி குவித்தனர்.
பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் மருந்து நிறுவன நிர்வாகிகள், மருத்துவ உபகரண கருவிகளை தயாரிக்கும் பெருநிறுவனங்களின் முதலாளிகள் மற்றும் பல டாக்டர்கள் இந்த மோசடியில் அங்கம் வகித்துள்ளனர். இந்த மோசடியால் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.8 ஆயிரத்து 309 கோடி) தொகை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய புலனாய்வு போலீஸ்துறையின் உதவி இயக்குநர் ராபர்ட் ஜான்சன் கூறுகையில், ‘‘அமெரிக்க வரலாற்றில் ஒரு மாபெரும் மருத்துவ முறைகேடு இன்றோடு முடிவுக்கு வந்துள்ளது’’ என கூறினார்.
தெற்கு கரோலினாவைச் சேர்ந்த அரசு வக்கீல் ஷெர்ரி லிடன், ‘‘இந்த மோசடியின் காரணமாக, மருத்துவக் காப்பீட்டின் தொகை மேலும் உயரும். இந்த சுமை வரிசெலுத்துவோரின் தலையில் தான் விழும்’’ என்றார்.
0 Comments