திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பிரிட்டோ. இவரது வீட்டின் அருகே விவசாய பணிகளுக்காக சொந்த நிலத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறு சரியாக மூடப்படாமல் விடப்பட்டது.
இதனிடையே, நேற்று முன்தினம் பிரிட்டோவின் 2வது மகனான சுஜித் வில்சன் (வயது 2) ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். முதலில் 26 அடி ஆழத்தில் இருந்த அவனை மீட்கும் முயற்சியில் தோல்வி ஏற்பட்டது. பின்னர் சுஜித் 70 அடி ஆழத்திற்கும், பின்பு 80 அடி ஆழத்திற்கும் சென்றது மீட்பு பணியில் தொய்வை ஏற்படுத்தியது.
இந்நிலையில், 100 அடி ஆழத்திற்கு சென்ற அவனை மீட்பதற்காக ரிக் இயந்திரம் உதவியுடன் மற்றொரு குழி தோண்டப்பட்டு வருகிறது. 40 மணிநேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 30 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டு உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நானும் ஒரு குழந்தையோட தகப்பன். அந்த வகையில் என்னால் சுர்ஜித் பெற்றோரின் வலியை உணர முடியுது. அந்த குழந்தை உயிர் பொழச்சு வரணும். உன் தாய்ப்பால்ல வீரம் இருக்கு, கண்ணு நிச்சயம் வருவ நீ. தம்பி நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான தீபாவளி. எழுந்து வா தங்கமே. வேதனையோடு ஒரு தீபாவளி என்று தெரிவித்து உள்ளார்.
0 Comments