Tamil Sanjikai

டைம்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2020ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியலில், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இடம் பெற்றுள்ளது.

ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியீடு, ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம், அறிவுசார் சொத்துரிமை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் டைம்ஸ் நிறுவனம், உலகளவில் தலை சிறந்த உயர் கல்வி நிறுவனங்களின் பட்டியலை தரவரிசைப்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2020ம் ஆண்டுக்கான பட்டியலை டைம்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டது.

அதில், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முதல் இடத்தையும், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் 2ம் இடத்தையும் பிடித்துள்ளது.

அதனைத்தொடர்ந்து 3-வது இடத்தில் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் உள்ளது. முதல் 10 இடங்களில் அமெரிக்காவை சேர்ந்த 7 உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் இங்கிலாந்தின் 3 உயர்கல்வி நிறுவனங்கள் மட்டுமே மாறி மாறி இடம் பிடித்துள்ளன.

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம், இந்தூர் ஐ.ஐ.டி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் தரவரிசை பட்டியலில் 300 முதல் 400 இடங்களுக்கு பின்தள்ளப்பட்டுள்ளன. இதேபோல் மும்பை, டெல்லி, கோரக்பூர் ஐ.ஐ.டிகள் 400 முதல் 500வது இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளன. காந்திநகர், ரூர்கி ஐ.ஐ.டிகள் மற்றும் மும்பை கெமிக்கல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியன 500 முதல் 600 இடங்களில் உள்ளன.

இதேபோல், சென்னை, புவனேஸ்வர், கான்பூர், கவுஹாத்தி ஹைதராபாத் ஐ.ஐ.டி.க்களும், கோவை அம்ரிதா விஷ்வ வித்யாபீடம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், புனேயின் இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை 600 முதல் 800 இடங்களில் உள்ளன.

அதுமட்டுமல்லாது, இதுவரை பட்டியலில் இடம் பெறாமல் இருந்த சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கோவை வேளாண் பல்கலைக்கழகம், திருச்சி என்.ஐ.டி, வேலூர் வி.ஐ.டி, தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம், கோவை பி.எஸ்.ஜி பல்கலைக்கழகம், சென்னை எஸ்.ஆர்.எம். உள்ளிட்ட 54 கல்வி நிறுவனங்கள் இந்த பட்டியலில் புதிதாக இடம் பெற்றுள்ளன.

0 Comments

Write A Comment