Tamil Sanjikai

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏமன் நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2018-ஆம் ஆண்டு அக்டோபர் வரை சுமார் 85,000 குழந்தைகள் பலியாகி உள்ளனர் எனும் அதிர்ச்சி தகவல் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. ஏமனில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போரின் காரணமாகவும், கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாகவும், 5 வயதிற்குட்பட்ட சுமார் 85,000 குழந்தைகள் உயிரிழந்து இருக்கக்கூடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஏமன் நாட்டில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கையானது பிரிட்டனின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்ஹாமில் உள்ள இருக்கும் அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கைக்கு சமம் என்று 'சேவ் தி சில்ட்ரன்' (Save the children) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 1,40,000 குழந்தைகளுக்கு தேவையான உணவு வழங்கியுள்ளதாகவும், போரின் மூலம் ஏற்பட்ட நெருக்கடியின் தொடக்கத்தில் இருந்து ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு 78,000-க்கும் அதிகமான குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏமனில் உள்ள குழந்தைகளுக்கு உதவ உலகநாடுகள் முன்வர வேண்டும் எனவும் சேவ் தி சில்ட்ரன் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஏமனில் 14 மில்லியன் மக்களுக்கும் மேல் பஞ்சத்தின் பிடியில் சிக்கியுள்ளதாக கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது. மேலும் ஏமன் நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பல்வேறு முயற்சிகளை ஐநா சபை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment