பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக பாரீசில் போராட்டம் நடத்தியதோடு, அரசு மற்றும் தனிநபர்களின் சொத்துகளை சூறையாடி, வன்முறையில் ஈடுபட்ட 400 பேரை பிரான்ஸ் போலீசார் கைது செய்தனர்.
பிரான்சில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான வரி உயர்வையும், அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தையும் கண்டித்துத் தலைநகர் பாரீசில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், நேற்று நடந்த போராட்டத்தின் போது சாலையோரங்களில் நின்றிருந்த கார்களையும் தீவைத்துக் கொளுத்தி போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
துணிக்கடைகளில் புகுந்து கொள்ளையடித்த போராட்டக்காரர்கள், தனிநபர்களின் ஆடம்பர வீடுகள் மற்றும் உணவகங்களையும் அடித்து நொறுக்கி, தீவைத்தனர். போராட்டக்காரர்களின் வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீசார், கண்ணீர்ப்புகைக் குண்டு வீசி அவர்களை விரட்டியடித்தனர்.
இதையடுத்து, மீண்டும் வன்முறை நிகழாமல் தடுப்பதற்காக, அதிபர் இமானுவேல் மேக்ரான் அமைச்சரவையை கூட்டி ஆலோசனை நடத்தினர். இதனிடையே, போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டு, அரசு மற்றும் தனி நபர்களின் சொத்துகளை சேதப்படுத்திய சுமார் 400 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் 249 இடங்களில் தீவைத்துள்ளதாக கூறியுள்ள போலீசார், கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
0 Comments