Tamil Sanjikai

சீன தூதரகத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 2 போலீசார் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்களை அடுத்து கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அதையடுத்து, பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 35 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் பழங்குடியின மாவட்டமான அவுராக்சாய் மாவட்டத்தில் சிறுபான்மை ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்குள்ள கலயா பகுதியில் உள்ள ஷியா வழிபாட்டுத் தலத்தை ஒட்டியுள்ள மார்க்கெட்டில் இன்று காலை வழக்கம்போல் ஏராளமான மக்கள் பொருட்கள் வாங்க வந்து சென்றுக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இதில் பொதுமக்கள் நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டனர். இதனால் அருகில் உள்ள கடைகளும் சேதமடைந்தன. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். 35-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தாக்குதல் நடந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் வேறு வெடிகுண்டுகள் பதுக்கப் பட்டுள்ளதா? என சோதனை நடந்து வருகிறது. இந்த தாக்குதலுக்கு மாகாண முதல்வர் மெஹ்மூத் கான் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த மாகாணம் அமைதியாக இருப்பது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை என அவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

0 Comments

Write A Comment