Tamil Sanjikai

அமெரிக்கா நாட்டில் தற்போது குளிர்காலம் என்பதால் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், மத்திய அமெரிக்காவில் நேற்று முதல் கடும் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டு சிரமம் அடைந்து வருகின்றனர். சாலைகளில் பனி சூழ்ந்து காணப்படுவதால் வாகனங்களை இயக்க முடியவில்லை. முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மத்திய மேற்கு மாநிலங்களில் பனிப்புயல் காரணமாக இன்று 10 அங்குலம் அளவிற்கு பனிப்படலம் படர வாய்ப்பு இருப்பதாகவும், சில மாநிலங்களில் 12 அங்குலம் அளவிற்கு பனிப்படலம் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று பனிப்புயல் வடமேற்கு மாநிலங்களை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பனிப்புயல் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் 1600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சிகாகோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிகபட்சமாக 770 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 15000 விமானங்கள் மிகவும் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. பனிப்புயல் தாக்கும் என அறிவிக்கப்பட்ட மாநிலங்களில் 1.4 கோடி மக்கள் வசிக்கின்றனர். கடுமையான காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கன்சாஸ், மிசவுரி, நெப்ரஸ்கா, அயோவா மாநிலங்களில் 2 கோடி மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

0 Comments

Write A Comment