Tamil Sanjikai

முதலாம் உலகப்போர் நூற்றாண்டு நினைவுநாளை முன்னிட்டு பிரான்ஸில் உலகத் தலைவர்கள் பங்கேற்ற சிறப்பு மாநாடு நடைபெற்றது. 1914- ம் ஆண்டு ஆஸ்திரிய இளவரசர் பிரான்சிஸ் பெர்டினான்டு என்பவரை செர்பியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சுட்டுக் கொன்றார்.

அதனைத் தொடர்ந்து ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் இரண்டு பிரிவாகப் பிரிந்து நடத்திய போர் தான் முதலாம் உலகப் போர் எனப்படுகிறது. 1914-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி தொடங்கிய இந்தப் போருக்கு, உலகைப் புரட்டிப்போட்ட வரலாறு உண்டு . நப்பு நாடுகளான பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவை ஒரு தரப்பிலும், மைய நாடுகளான ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி, இத்தாலி ஆகியவை எதிர் தரப்பிலும் நின்று போரிட்டன. இந்தப் போரில் இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்த இந்தியாவும் கலந்து கொண்டது. இந்திய தரப்பில் கிட்டத்தட்ட 20 லட்சம் வீரர்கள் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் சென்று போரிட்டனர்.

இந்தப் போர்தான் குதிரைப்படை, யானைப்படை என்று இருந்த நிலையை மாற்றியது . இந்தப் போரில்தான் முதன் முதலாக நவீன ஆயுதங்கள், பயன்படுத்தப்பட்டன. விமானம்தாங்கி போர்க்கப்பல்கள் அறிமுகமாகியது .

1918-ம் ஆண்டு முடிந்தது. பல லட்சம் பேர் கொல்லப்பட்ட இந்தப் போரின் நூற்றாண்டு விழா தற்போது நடந்து வருகிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில்தான், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் புதின், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் மற்றும் இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட ஏறத்தாழ 70 உலக நாடுகளின் தலைவர்கள் அணிவகுத்த பிரமாண்ட விழா நடந்தது.
கொட்டும் மழையில் குடை பிடித்தபடி போர் நினைவுச்சின்னம் சென்று தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

முதலாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான பேச்சு வார்த்தை, பாரீஸ் நகரில் ஒரு சொகுசு ரெயிலில் நடைபெற்றது. அதை நினைவுகூரும் விதத்தில்தான் உலகப்போர் நிறைவு 100 ஆண்டு நினைவு தினம், அங்கு சிறப்பாக நடத்தப்பட்டது.

முதல் உலகப்போரில் வீர மரணம் அடைந்த 74 ஆயிரம் இந்திய வீரர்களின் நினைவாக பிரான்சில் லாவென்டீ நகரில் நிறுவப்பட்டுள்ள 7 அடி உயர வெண்கல சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நகரில்தான் கடைசியாக 2 இந்திய வீரர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன என்பது வரலாற்றுத் தகவலாக அமைந்துள்ளது. இதே போன்று பிரான்சில் இந்திய வீரர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடங்களில் மேலும் 56 சிலைகள் நிறுவப்படுகின்றன.

இந்த விழாவில் பேசிய பிரான்ஸ் அதிபர் மேக்ரான், “அமைதிக்காக உலக தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.ஒருவருக்கு ஒருவர் எதிராக அச்சம் கொண்டிருப்பதைவிட, நாம் நம்பிக்கை வளர்ப்போம்” என அழைப்பு விடுத்தார்.

0 Comments

Write A Comment