இந்தியாவின் பணக்கார மனிதர்களில் ஒருவராக பெயர் பெற்ற விஜய் மல்லையாவின் மொத்த கடன் மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேல் இருக்கிறது. கிங்ஃபிஷர் பீர் உற்பத்தி ஆலையை நடத்திவந்த மல்லையா, பிறகு கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தை தொடங்கினார். போர்ஸ் இந்தியா பார்முலா ஒன் அணியின் இணை நிறுவனராகவும் தனது தொழில் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார். கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் கடன் தொகை அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த 2012-ஆம் ஆண்டு அந்நிறுவனத்தை நடத்துவதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது.
9,000 கோடி ரூபாய் வாராக்கடன் தொடர்பாக, மதுபான தொழிற்சாலை அதிபர் விஜய் மல்லையாவின் இந்திய பாஸ்போர்ட் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2016-ஆம் ஆண்டு நாட்டைவிட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அவரை இந்தியாவுக்குக் கொண்டுவர இந்திய அரசு சட்டரீதியான பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பாக லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில், விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மேற்கொண்டு பிரிட்டன் வெளியுறவுச் செயலரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
அண்மையில்,மல்லையா தனது டுவிட்டர் செய்தியில், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. நான் ஒரு ரூபாய் கூட கடன் வாங்கவில்லை. கடன் பெற்றது கிங் ஃபிஷர் விமான நிறுவனம்தான். உண்மையில் தொழிலில் நஷ்டம் எதிர்பாராமல் ஏற்பட்டது. கடனுக்கு உத்தரவாதம் வழங்குவது என்பதற்காக, நான் ஏமாற்றினேன் என்று கூறக்கூடாது. நான் மூல கடன்தொகையை திருப்பிக் கொடுக்கிறேன் என்ற முன்மொழிவை கொடுத்திருக்கிறேன். அதை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தீர்ப்பு வெளியான இன்றில் இருந்து 14 நாட்களுக்குள் விஜய் மல்லையா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். அதற்குள் மேல்முறையீடு செய்யாவிட்டால், நீதிமன்ற தீர்ப்பை மல்லையா ஏற்றுக் கொள்வதாகக் கருதப்பட்டு அவர் 28 நாட்களுக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று தெரிகிறது.
0 Comments