Tamil Sanjikai

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இருந்து 330 கி.மீ. தொலைவில் புக்யாக் என்ற இடத்தில் உள்ள அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலையும் குறிவைத்து நேற்று முன்தினம் ஆளில்லா விமானம் மூலமாக தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதனால் அங்கு தீப்பிடித்து எரிந்தது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதாக சவுதி அரசு தெரிவித்தாலும், சுமார் 50 லட்சம் பீப்பாய் எண்ணெய் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு ஏமனில் இருந்து செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பு ஏற்றனர்.

ஆளில்லா விமான தாக்குதலை தொடர்ந்து எண்ணெய் உற்பத்தியை 50 சதவீதமாக குறைத்திருப்பதாக சவுதி அரேபியா நேற்று அறிவித்தது. இந்த நிலையில், எண்ணெய் விலை 10 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை சந்தை நிலவரப்படி கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் பிரெண்டு கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 60.15 அமெரிக்க டாலராக இருந்தது. அதன்பின்னர் 12 சதவீதம் உயர்ந்து, ஞாயிற்றுக்கிழமை 70.98 டாலராக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களிலும் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

0 Comments

Write A Comment