Tamil Sanjikai

அக்டோபர் 11 அன்று, சீன அதிபர் ஜி பிங்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ளனர். தற்போது அமெரிக்க-சீனா வர்த்தகப்போர் நடைபெறும் இக்கட்டான சூழலில், இது ஒரு முறைசாரா பேச்சுவார்த்தை என்றாலும் இருநாடுகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

முறைசாரா சந்திப்பு என்கின்ற காரணத்தினால் முன்கூட்டியே எந்தத் திட்டமிடலும் இருக்காது. இரு அதிபர்களும் மனம்விட்டு வெளிப்படையாகப் பேசிக்கொள்ள இது ஒரு வாய்ப்பாக இது அமையும். கடந்த 2018, ஏப்ரலில் சீனாவின் உஹானில் நடந்த முதல் சந்திப்பு, டோக்லாம் பிரச்னையின் சூட்டைத் தணிக்க உதவியது. இந்த மாநாடு நடைபெறுவதற்கு முன்னரே, `காஷ்மீரில் 370 பிரிவு நீக்கிய பிரச்னையை எடுக்கமாட்டேன்' என மோடியும், `காஷ்மீர் இரு நாட்டுப் பிரச்னை' என்று ஜிங்பிங் அறிவித்ததும் ஒரு வெற்றிதான்.

இந்தியா சீனா இடையேயான கல்வி கலாசார உறவுகள் பல்லாண்டு கால பழைமையானது. அந்தக்காலத்தில் கடாரம் கொண்ட ராஜேந்திர சோழன் சீனாவுடன் வணிகம் நடத்தியுள்ளார். இந்திய சீன கலாசார உறவு கி.மு 1500-ல் தொடங்கியது. ஒன்று முதல் மூன்றாம் நூற்றாண்டு வரை புத்த பயணிகள், மேதைகள், ஆய்வாளர்கள் பட்டுப்பாதை வழியாக சீனா சென்றுள்ளனர். இந்தியா, லூயாங்க் என்ற பகுதியில் புத்தர் கோயில் கட்டிக்கொடுத்திருப்பதும், யுவான் சுவாங் நினைவிடம் நாலாந்தாவில் அமைந்ததும் இருநாட்டு கலாசாரத்தின் வெளிப்பாடே.

தொடக்கத்தில் அரசியல், கலாசார ரீதியாக இந்தியா-சீனா, இருநாடுகளுக்கும் இடையே இருந்த உ றவுகள் சுமுகமாகவே இருந்துவந்தது. முதல் முதலில், இந்தியாதான் சீனாவின் புதிய கம்யூனிச அரசை அங்கீகரித்தது. மேலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் சீனா நிரந்தர அங்கத்தினராவதற்கு ஆதரவு தெரிவித்தவர், முன்னாள் பிரதமர் நேரு. பின்னர் இருநாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பிணக்குகள் அதன் உறவுகளைச் சிதைத்தன. இன்றுவரை சீனா-இந்திய-திபெத் எல்லைப்பிரச்னை ஒரு முள்ளாகவே இருந்துவருகிறது.

திபெத் தலைவர் தலாய் லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்ததை சீனா கடுமையாக எதிர்த்தது. கடந்த 1962 போருக்குப்பின் இருநாடுகளின் பகை மேலும் அதிகரித்தது. பின்னர், ஜனதா கட்சித் தலைவர் மோரார்ஜி தேசாய் ஆட்சிக் காலத்தில் சீனாவுடனான உறவு புதுப்பிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி காலத்தில் வர்த்தக உறவு ஓரளவிற்கு மேம்பட்டது. பிரதமர் நரசிம்மராவ் இருநாடுகளுக்கிடையேயான எல்லைப் பிரச்னைகளை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவந்தார்.

எல்லைப்பிரச்னை, ஊடுருவல் என பல பிரச்னைகள் இரு நாடுகளின் உறவில் விரிசலை ஏற்படுத்தியிருந்தாலும், வாஜ்பாய் பிரதமரான பின் இரு நாடுகளும் மோதல் போக்கை கைவிட்டு, சமாதானமாக செயல்படத்தொடங்கின. சிக்கிம் இந்தியாவுடன் இணைந்ததை சீனா ஏற்றுக்கொண்டதும், திபெத்தை இந்தியா அங்கீகரித்ததும் இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

வர்த்தக மேம்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடக்கலாம் என்று தெரிகிறது. அமெரிக்க-சீனா வர்த்தகத்தில் ஏற்பட்டிருக்கும் இடைவெளியை இந்தியா நிரப்ப முடியும் என்றும் கருதப்படுகிறது. மொத்தத்தில், சீன-இந்திய உறவை மேலும் பலப்படுத்தும் என நம்பப்படுகிறது.

ஆனாலும், காஷ்மீரின் ஒருபகுதியாக அக்சாய் சின்னை சீனா ஆக்கிரமித்திருந்தது, அருணாசலப்பிரதேசத்தின் தவாங் பகுதியின் மீது உரிமை கோரியது, சமீபத்தில் டோக்லாம் பகுதியை ஆக்கிரமித்தது, சீனா ராணுவத்தை குவித்தது, அங்கே விரிவாக்கப்பணிகள் செய்து, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது என பல நிகழ்வுகள் விரிசலை ஏற்படுத்தின. பட்டுப்பாதை திட்டமும் இந்தியாவுக்கு எதிரானதுதான். காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தானுக்கு சாதகமாக நடந்து கொண்டதும் இந்தியாவை ஆத்திரமூட்டியது. ஆனாலும், இந்தியா சளைக்கவில்லை. காஷ்மீர் பிரச்னையில் சர்வதேச அரங்கில் இந்தியா அனைத்து எதிர்ப்புகளையும் முறியடித்து சாதித்து காட்டியது.

இத்தனை அரசியல் பிரச்னைகள், அதிகாரப்போட்டிகளைக் கடந்து, இருநாடுகள் இடையே வர்த்தகம் தொடர்ந்து பெருகி வந்தது. கடந்த 2001-ல் உலக வர்த்தக ஒப்பந்தத்தில் சீனாவும் இந்தியாவும் கையொப்பமிட்டபின் வர்த்தகம் பலமடங்கு பெருகியது. இன்று சீனா, இந்தியாவின் ஒரு மிகப்பெரிய வர்த்தக பார்ட்னர்.

இன்று சீனா இந்தியாவைவிட பலமடங்கு வளர்ந்துவிட்டது. சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1,000 லட்சம் கோடி. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட ஐந்து மடங்கு அதிகம். அதன் ஏற்றுமதி வர்த்தகம் 175 லட்சம் கோடி, இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியைவிட 8 மடங்கு அதிகம். சீனாவின் இறக்குமதி இந்தியாவின் இறக்குமதியைக் காட்டிலும் 4 மடங்கு அதிகம்.

தற்போது இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் 100 பில்லியன் டாலரை நெருங்கியுள்ளது. சுமார் 1000 சீன நிறுவனங்கள் இந்தியாவில் சுமார் எட்டு பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளன. இந்தியாவின் ஏற்றுமதி சீனாவின் ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்குதான்.

இந்தியா சீனாவுக்கு வைரம், பருத்தி நூல், இரும்புத்தாது, தாமிரம், மற்றும் ரசாயனங்களை ஏற்றுமதி செய்கிறது. இந்தியாதான் சீனாவுக்கு வைரம் ஏற்றுமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடு. அதேபோல, சீனாவின் முக்கிய ஏற்றுமதி நாடுகளில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது. ஏழு இந்திய வங்கிகள் சீனாவில் செயல்படுகின்றன. கடந்த 2017ல் இ-பிசினஸ் விசா வழங்குவது இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்திய-சீனா வர்த்தகம், சீனாவுக்குத்தான் மிகவும் சாதகமாக இருக்கிறது. சீனாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் பல பொருள்கள் அதிநவீனமில்லாத நுகர்பொருள்கள் மட்டுமே. பெரும்பாலானவை உள்நாட்டில் சுலபமாக உற்பத்தி செய்யக்கூடியவை. மேம்பட்ட தொழில் நுட்பங்களைத் தருவதில்லை. உள்நாட்டில் எளிதாக உற்பத்தி செய்யக்கூடிய பொருள்களையே சீனா இந்தியாவுக்கு விற்கிறது. சீனா இந்தியாவிடம் மூலப்பொருள்களை பெற்றுக்கொண்டு மலிவான பொருள்களை இந்தியாவின் தலையில் கட்டுகிறது என்ற ஆதங்கம் இந்தியாவுக்கு எப்போதும் உண்டு.

இதில் சமநிலை காணவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தற்போது சீனா உட்பட, 16 பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தத்துக்குத் தயாராகி வருகிறது இந்தியா. அமெரிக்காவுக்கு வெளியே இருக்கும் சந்தையை நோக்கும்போது இந்தியாதான் சீனாவின் முதல் டார்கெட்.

0 Comments

Write A Comment