Tamil Sanjikai

கோவை சரவணம்பட்டி அருகே மனைவியின் வாட்ஸ் ஆப் சாட்டிங்கை பார்த்து விரக்தி அடைந்த கணவர் ஒருவர், தனது மகனுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தடம் மாறிய பயணத்தின் விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

கோவை சரவணம் பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் அர்ஜூன். இவர் சொந்தமாக டெயிலர் கடை ஒன்றை நடத்தி வந்தார். இவரது மனைவி அலமேலு, தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிகிறார்.. இவர்களுக்கு 9 ஆம் வகுப்பு படிக்கிற வயதில் மகன் இருக்கும் நிலையில் அலமேலு வீட்டில் இருக்கும் நேரத்தில் வாட்ஸ் ஆப்பில் நண்பர்களுடன் சாட்டிங் செய்து வந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் புதன்கிழமை அலமேலு வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது வீட்டுக்குள் அர்ஜுனனும், அவரது 13 வயது மகனும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

வீட்டில் இருந்து தேனில் கலந்த சாணிப்பவுடர் மற்றும் அர்ஜுனன் கைப்பட எழுதிய தற்கொலை கடிதம் போன்றவற்றை கைப்பற்றினர்.

முதலில் தனது மகனுக்கு சாணிப்பவுடரை தேனில் கலந்து சாப்பிடக்கொடுத்து விட்டு, உயிர் பிழைத்துக் கொள்ளக்கூடாது என்று இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் அந்த கடிதத்தில் எழுதியிருந்த வரிகள் தந்தை மகன் தற்கொலைக்காண காரணத்தை விவரிப்பதாக இருந்தது.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சென்று வரும் தனது மனைவி அலமேலுவுக்கு, வாட்ஸ் ஆப்பில் நிறைய நண்பர்கள் இருந்ததாகவும் அதில் ஒரு ஆண் நண்பருடன் அலமேலு நீண்ட நேரம் சாட்டிங்கில் ஈடுபட்டு வந்ததை கண்டு அர்ஜுனன் அலமேலுவை கண்டித்துள்ளார். ஆனால் அலமேலு கணவனின் பேச்சை கேட்கவில்லை என்று கூறப்படுகின்றது.

சம்பவத்தன்று இரவு மனைவி அலமேலு அந்த நபருடன் சாட்டிங்கில் ஈடுபட்ட வாட்ஸ் ஆப் பதிவுகளை வாசித்து பார்த்த அர்ஜூனன் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். தடம் மாறி பயணித்த தனது மனைவியே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது போல அந்த வாட்ஸ் ஆப் உரையாடல்கள் இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் விரக்தி அடைந்து அர்ஜுனன் தனது மகனுடன் சேர்த்து தனது உயிரையம் மாய்த்துக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மனைவியுடன் சரி செய்ய இயலாத அளவிற்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டால் நீதிமன்றத்தை நாடி சுமூகமாக பிரிந்து செல்வதை விட்டு. உயிரை மாய்த்துக் கொள்வது கோழைத்தனமான முடிவு என்று மனோதத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதே நேரத்தில் வாட்ஸ் ஆப் என்பது தகவல் பறிமாற்றத்துக்கான செயலி என்றும் அதில் ரகசியமானது என்று ஒன்றும் இல்லை என்று கூறும் சைபர் கிரைம் காவல்துறையினர் நாம் பதிவு செய்யும் ஒவ்வொரு புகைப்படமும், பதிவுகளும் வாட்ஸ் ஆப் நிறுவன ஊழியர்களால் எளிதாக பார்க்க இயலும், அதனால் பிறர் பார்வைக்கு அவை எளிதாக செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரிக்கின்றனர்.

வாட்ஸ் ஆப் சேவையை அளவோடு பயன்படுத்தினால் பிரச்சனை இல்லை, எப்போதும் கையில் செல்போனுடன் வாட்ஸ் ஆப் சாட்டிங்கில் மூழ்கி புது புது நண்பர்களுடன் உரையாடினால் அது குடும்பத்தில் என்ன விதமான விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த சோக சம்பவமும் ஒரு சான்று..!

0 Comments

Write A Comment