Tamil Sanjikai

கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அதிகமான ஆறுகளைக் கொண்ட இந்தியாவில் இதுவரை நீர் வழிப்போக்குவரத்து பெரிதும் பயன்படாமல் இருக்கிறது. அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் அளவு மிகவும் குறைவு. தற்போது அமெரிக்காவில் 21 சதவீத சரக்குகள் நீர்வழிப்போக்குவரத்தில் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், இந்தியாவில் 0.1 சதவீத சரக்குகள் மட்டுமே நீர்வழிப்போக்குவரத்து மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்தை மேம்படுத்த ‘இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையம்’ என்ற அமைப்பு கடந்த 1986-ம் ஆண்டு முதல் உத்தரபிரதேசத்தில் உள்ள நொய்டாவை தலைமை இடமாகக் கொண்டு தொடங்கப்பட்டது. இது இந்தியாவில் போக்குவரத்திற்கென சட்டப்படி அமைக்கப்பட்ட வாரியம். இதன் மண்டல அலுவலகங்கள் பாட்னா, கொல்கத்தா,கவுஹாத்தி, கொச்சி ஆகிய இடங்களிலும், துணை அலுவலகங்கள் அலஹாபாத், வாரணாசி, பகல்பூர், பராக்கா மற்றும் கொல்லம் ஆகிய இடங்களில் உள்ளன. இந்திய உள்நாட்டு நீர் வழி ஆணையம், நாட்டில் உள்ள ஆறுகள், கால்வாய்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, புதிய நீர் வழிப் போக்குவரத்து திட்டங்களை வடிவமைத்தது. நாட்டில் உள்ள ஆறுகள், கால்வாய்கள், உப்பங்கழிகள், நீரோடைகள் ஆகியவற்றை பயன்படுத்தி இந்த உள்நாட்டு நீர்வழிகளைப் போக்குவரத்துத் திட்டங்களை உருவாக்குகின்றன.

தமிழகத்தைப் பொறுத்த வரையில், தேசிய நீர்வழிப்பாதை- 4ன் கீழ் தீட்டப்பட்டுள்ள காக்கிநாடா-புதுச்சேரி நீர்வழிப்போக்குவரத்து திட்டம் முக்கியமானதாகும். இந்த திட்டத்தின் கீழ், ஆந்திராவில் ஓடும் கோதாவரி, கிருஷ்ணா ஆறுகள், காக்கிநாடாவில் இருந்து புதுச்சேரி வரை கால்வாய் மூலமும் இணைக்கப்படும். இதன் மொத்த நீளம் 1027 கி.மீ. இதில், ஆற்றுப் பகுதி 328 கி.மீ., கால்வாய் பாசனப்பகுதி 302 கி.மீ., உப்புநீர் கால்வாய் பகுதி 397 கி.மீட்டர். வடக்கு மற்றும் தெற்கு பக்கிங்காம் கால்வாய், கம்மாமூர் கால்வாய் மற்றும் கழுவேலி குளம் ஆகியவற்றில் கால்வாய் அமைக்கப்பட்டால், கோதாவரி ஆறு வழியாக நிலக்கரியும், கிருஷ்ணா ஆறு வழியாக சிமென்ட்டும், கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆறு வழியாக அரிசியும் என ஆண்டிற்கு ஒரு கோடியே 10 லட்சம் டன்கள் சரக்குகளைக் கையாள முடியும். மேலும், பக்கிங்காம் கால்வாய் வழியாக ஆந்திரா-தமிழகம்-புதுச்சேரி இடையே சிறப்பான நீர்வழிப் போக்குவரத்து ஏற்பட்டு, இந்த மாநிலங்களுக்கு இடையே சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து சிறப்பாக நடக்கும். அதோடு உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்தை ஏற்படுத்தினால் பல்வேறு நன்மைகளையும் பெற முடியும்.

1700 கி.மீட்டருக்கும் அதிக நீளமான 4 மற்றும் 5 ஆகிய இரண்டு நீர்வழிப்போக்குவரத்து திட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவை கடந்த 2008-ம் ஆண்டு நவம்பரிலேயே அனுமதி அளித்திருந்தது. அந்த நேரத்தில் இந்தத் திட்டத்தை தொடங்கி இருந்தால், 11வது ஐந்தாண்டு திட்டமுடிவில் முடிந்திருக்கும். ஆனால், காக்கிநாடா-புதுச்சேரி நீர்வழிப்போக்குவரத்து உள்ளிட்ட உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து திட்டங்களுக்கு திட்டக்கமிஷன் நிதி ஒதுக்கீடு செய்யாமல் கைவிரித்துவிட்டதால், கடும் நீர் பற்றாக்குறையில் சிக்கி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அதுபோல தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஏ.வி.எம்.கால்வாய் திட்டம். ‘அனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்’ என்பதின் சுருக்கமே ஏ.வி.எம்.கால்வாய். இந்த கால்வாயின் முக்கிய நோக்கம், மன்னர் கால திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தையும், தென் திருவிதாங்கூரின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியையும் நீர்வழி போக்குவரத்தில் இணைப்பது மற்றும் கடல்நீர் உட்புகுவதைத் தடுப்பது தான்.

அனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்

இது உத்திரம் திருநாள் மார்த்தாண்டவர்மா மன்னரால், 1860-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மன்னரும் 1860-ம் ஆண்டுவாக்கில் இறந்துவிட, அவரது வாரிசு மன்னரான ஆயில்யம் திருநாள் ராமவர்மா, இப்பணியைத் தொடர்ந்து செய்து வந்தார் . இதன்முதல் கட்டமாக பூவாரில் இருந்து தேங்காப்பட்டணம் தாமிரபரணி நீர்த்தேக்கம் வரை சுமார் 10 மைல் தூரம் வெட்டப்பட்டு 1864-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போக்குவரத்துக்காகத் திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கால்வாய் குளச்சல்- மண்டைக்காடு கோயில் வளாகம் வரை வெட்டப்பட்டது. 1867-ம் ஆண்டு இத்திட்டம் பல காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது கேரளாவின் வர்க்கலை கால்வாய் பணி தொடங்கி விட்டதால் ஏ.வி.எம். கால்வாய் பணியை திருவிதாங்கூர் அரசு நிறுத்திவிட்டது. இருப்பினும் இந்த கால்வாயின்

தேவையையும், முக்கியத்துவத்தையும் திருவிதாங்கூர் அரசு உணர்ந்திருந்தது.

கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வரையிலும் அங்கிருந்து கொல்லம் வரையிலும், அங்கிருந்து கொச்சி வரையிலும், நீர்வழிப் போக்குவரத்துக்காகவே ஏ.வி.எம் திட்டத்தை திருவிதாங்கூர் மன்னர்கள் தொடங்கியுள்ளார்கள். இந்தத் திட்டத்தை நிறைவேற்றி இருந்தால் இன்று குமரிமாவட்டத்தில் உருவாகியுள்ள போக்குவரத்து நெருக்கடியை, இந்த நீர்வழிப்போக்குவரத்து வசதி தீர்த்து வைத்திருக்கும். இது தவிர சுற்றுலாத்துறையும் மேம்பட்டிருக்கும்.

இந்தியாவில் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் கேரளா முதல் இடத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் இந்த கால்வாய்களும், அதில் மிதக்கின்ற உல்லாசப் படகுகளும், படகுவீடுகளும் தான். காஷ்மீரின் படகுவீடு கலாச்சாரத்தை கேரளா இன்று தனக்கு சாத்தியப் படுத்திக் கொண்டதால் கேரளாவில் சுற்றுலாத்துறை பல மடங்கு வளர்ந்துள்ளது. இதுபோலவே கன்னியாகுமரி மாவட்டத்திலும் உல்லாசப் படகு சவாரியை ஊக்குவிப்பதற்கும் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கவும் நின்றுபோன இந்த ஏ.வி.எம். கால்வாய் திட்டத்தை மீண்டும் தொடங்கி, கால்வாயைத் தொடர்ந்து வெட்டி கன்னியாகுமரி வரை கொண்டு செல்ல வேண்டும். தேவைப்பட்டால் இந்த கால்வாயை கன்னியாகுமரியில் இருந்து தூத்துக்குடி மற்றும் நெல்லை தாமிரபரணி ஆறு கடலில் சங்கமிக்கும் இடமான காயல்பட்டிணம் வரை நீட்டுவதற்கும் வாய்ப்பு உண்டு என நீர்வழிப்போக்குவரத்து ஆர்வலர்கள் சொல்கின்றனர்.

அனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்

ஏ.வி.எம்.கால்வாய் நீர்வழிப்போக்குவரத்து இன்று திருவனந்தபுரம் வரை நன்றாக உள்ளது. தேங்காப்பட்டணத்தில் இருந்து குளச்சல் வரை நன்றாக இல்லை. தூர்வாராமல் போட்டுப் பலரும் ஆக்கிரமித்து விட்டனர். ஏ.வி.எம்.கால்வாயை தூர்வாரி சீர்படுத்திப் பயன் பாட்டுக்குக் கொண்டு வந்தால் நிலத்தடி நீரின் மட்டம் உயர்ந்து கடல் நீர் உட்புகுவதை தடுத்து நிறுத்தி நன்னீர் விவசாயத்தை வளரச் செய்ய முடியும். குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நீக்கப்பட்டு உப்பு இல்லாத நல்ல குடிநீர் கிடைக்கும். கடல் அரிப்புகளும் இயற்கையாகவே குறைந்து விடும்.

ஏ.வி.எம். கால்வாயை தேங்காப்பட்டணத்திலிருந்து மீண்டும் விரிவாக வெட்டி முதல் கட்டமாக கன்னியாகுமரி மணக்குடி வரை சுற்றுலாவுக்காக ஏ.வி.எம் கால்வாயில் படகு சவாரி ஏற்படுத்தலாம். ஏ.வி.எம். கால்வாய் நீர்வழிப்போக்குவரத்துத் திட்டம் என்பதால் இதை மத்திய அரசு கப்பல் போக்குவரத்து துறையை கொண்டு நிறைவேற்றிட முடியும். கடலில் கலக்கும் குழித்துறை தாமிரபரணி, குளச்சல் பாம்பூரி வாய்க்கால், இரணியல் வள்ளியாறு, பன்றிகால்வாய், பழையாறு போன்ற அந்தந்த பகுதி ஆறுகளை ஏ.வி.எம்., கால்வாயுடன் இணைத்தால் நீர்வளம் மேம்பட்டு நிலத்தடி நீரும் உயரும் . நீர்வழி போக்குவரத்து சீராகும். இதனால் குமரி மாவட்டத்தில் வேலையில்லாத ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், விவசாய வளர்ச்சியும் பெருகும்.

மாநில நதிகளை இணைத்து பாசன ஆதாரத்தைப் பெருக்கி, வெள்ளப் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த கால்வாய்களை நீர்வழிப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப் போவதாக ஏற்கெனவே அரசு கூறியிருந்தது. குமரியில் ஏ.வி.எம்.கால்வாய் பயன்பாட்டில் இருந்த போது பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணியும் அணைகள் கிடையாது . அதுபோல இப்போது உள்ள சிறுசிறு அணைகளும் குமரிமாவட்டத்தில் இல்லை. மழை பொழிவு அதிகமாகும் போது குழித்துறை தாமிரபரணி ஆற்றில் பொங்கும் நீரை ஏ.வி.எம்.கால்வாய்க்கு திருப்பி விட்டுள்ளனர். பேச்சிப்பாறை அணை கட்டிய பின் தண்ணீர் வரத்தும் ஏவி.எம்.கால்வாய்க்கு வருவது குறைந்து விட்டது. இதுகுறித்து குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் சட்ட சபையில் பல வருஷமாக கவன ஈர்ப்பு தீர்மானத்தில் ஏ.வி.எம்.கால்வாயைச் சுத்தப் படுத்த வேண்டும். மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் .நிலத்தடி நீரில் கடல்நீர் கலக்காதவாறு நிலத்தடி நீரை காக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததில் கடந்த ஆட்சியில் கடைசி சட்டமன்றத் தொடரில் நிதி அமைச்சர் பன்னீர் செல்வம் சம்மதித்தார். நிதி ஒதுக்குகிறோம் என்று பதிலும் அளித்தார். ஆனால் இப்போதுவரை அதற்கான நடவடிக்கைகள் எதும் எடுக்கப்படவில்லை.

0 Comments

Write A Comment