Tamil Sanjikai

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவனின் காலில் இருந்த 10 கிலோ எடைகொண்ட புற்றுநோய் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சமையல் காரர் ஒருவரின் 15 வயது மகன் அப்துல் காதரின் இடது கால் தொடையில் சார்கோமா புற்றுநோய் கட்டி இருந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக மெல்ல மெல்ல வளர்ந்து நாளிடையில் அந்தக் கட்டி 10 கிலோ எடைக்கு உயர்ந்தது. இதனால், அவரால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பீகாரிலுள்ள மருத்துவமனைகளுக்கு சென்றபோது, காலையே அகற்ற வேண்டும் என்று கூறியதாகத் தெரிகிறது.

இந்த நிலையில் சென்னையிலுள்ள உறவினர் மூலம் ஸ்டான்லி மருத்துவமனை குறித்து கேள்விப்பட்டு சிகிச்சைக்காக அங்கு சேர்த்துள்ளனர்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்துவிட்ட கட்டியை அகற்றுவதில் இருந்த சவாலை எதிர்கொண்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் தொடையில் இருந்த கட்டியை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

பின்னர் அந்த இடத்தில் தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்த நிலையில் சிறுவன் தற்போது புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு நலமுடன் உள்ளார் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தனியார் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டிருந்தால் 2 லட்ச ரூபாய் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது.

0 Comments

Write A Comment