Tamil Sanjikai

மனிதனின் அன்றாட வாழ்கையின் அடிப்படை தேவை தண்ணீர். நீர் இல்லை என்றால் எந்த உயிரினங்களுக்கும் வாழ்க்கை இல்லை.இந்த பிரபஞ்சத்தில் பூமியில் மட்டும் தான் தண்ணீர் உள்ளது.வேறு கிரகங்களில் தண்ணீர் இருப்பதாக இதுவரை கண்டுபிடிக்கப்பட வில்லை.தண்ணீரை எங்கிருந்தும் கொண்டு வரவும் முடியாது.தமிழகத்திலும் இப்போதும் தண்ணீருக்காக பல கிலோமீட்டர் போகிறார் .இலவசமாக கிடைத்த தண்ணீரை இப்போது விலை கொடுத்து வாங்குகிறோம். அரசும் தண்ணீர் வியாபாரத்தில் இறங்கி விட்டது. இன்றைய சூழலில் தண்ணீர் தான் பிரச்சனை முக்கியமாக பார்க்கப்படுகிறது.

நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஏனோ தமிழகத்தின் தண்ணீர் பஞ்சத்தை போக்க முழு அளவில் இதுவரை முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக தமிழகத்தில் சுமார் 4 கோடி மக்களுக்கு குடிப்பதற்கு நன்னீர் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் வீணாகும் வெள்ள நீரின் மூலம் சுமார் 30 லட்சம் கோடி மதிப்புள்ள நெல் உற்பத்தி செய்ய முடியுமாம்.இந்த நீர் தமிழக மக்களின் தினசரி பயன்பாட்டிற்கு 476 ஆண்டுகளுக்கு போதுமானது. புவி வெப்பமயமாதல் ,பருவநிலைமாற்றம் ,வனங்கள் அழிக்கப்படுவது உட்பட பல காரணங்களால் மழைப்பொழிவு குறைந்து தண்ணீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தனி மனித பிரச்சனையோ, மாநில பிரச்சனையோ ,ஒரு நாட்டு பிரச்சனையோ இல்லை. இது ஓர் உலக பிரச்சனை . லண்டனில் உள்ள தன்னார்வ நிறுவனமான "வாட்டர் எய்டு " பல்வேறு நாடுகளைச் சார்ந்த மக்களுக்கு கிடைக்கப்படும்.சுத்தமான குடிநீர் பற்றி ஆய்வை நடத்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் ' உலகிலேயே அதிகமான மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா தான் இருந்தது . இந்திய மக்கள் தொகையில் 5 சதவீதம் பேருக்கு ,அதாவது 7.6 கோடி பேருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை .தண்ணீர் பிரச்சனையால் உண்டாகக்கூடிய வயிற்றுப்போக்கின் காரணமாக ஆண்டுதோறும் 1.4 லட்சம் குழந்தைகள் இறக்கின்றனர். குடிப்பதற்கே தண்ணீர் கிடைப்பது சிரமம் என்றால் எதிர்காலத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் எப்படி கிடைக்கும் ?. இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாநிலத்தில் ஒன்று தமிழ்நாடு. தமிழகத்தின் ஆண்டு சராசரி மழையளவு 958.5 மில்லிமீட்டர். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது இது குறைவு தான். இது தவிர தமிழ்நாட்டுக்கென்று வற்றாத ஜீவநதிகள் எதுவும் கிடையாது.

தமிழகத்தில் இப்போதும் தண்ணீர் பஞ்சம் தான் நிலவுகிறது. தமிழகத்திற்கு ஓர் ஆண்டில் கிடைக்கும் நீர்வளம் 1,643 டி.எம்.சி. என மதிப்பிடப்பட்டுகிறது. இந்த நீர்வளத்தை மாநிலத்தில் உள்ள சுமார் 7 கோடியே 70 லட்சம் பேருக்கு பகிர்ந்தளித்தால் ,ஒரு நபருக்கு அவரது பயன்பாட்டுக்காக ஓராண்டில் கிடைக்கும் தண்ணீரின் அளவு 6 லட்சத்து 7 ஆயிரம் லிட்டர். அதாவது ஒரு ஆண்டில் அந்த நபர் குளிக்க,குடிக்க ,துணி துவைக்க உள்ளிட்ட உபயோகங்களுக்காக 6 லட்சத்து 7 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது என்று அர்த்தம். இன்னும் 34 ஆண்டுகள் கழித்து ,அதாவது 2050 -ல் தமிழகத்தின் மக்கள் தொகை 10 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அப்போதும் இதே 1,643 டி.எம் சி.தண்ணீரை எல்லோருக்கும் பகிர்ந்துக் கொடுத்தாலும் ஒரு நபருக்கு ஆண்டுக்கு 4 லட்சத்து 40 ஆயிரம் லிட்டர் தண்ணீரே கிடைக்கும். ஆண்டுக்கு ஒரு நபருக்கான தண்ணீரின் தேவை 17' லட்சம் லிட்டர்.அதிலும் கண்டிப்பாக 10 லட்சம் லிட்டராவது தேவைப்படும். இப்போது தமிழக மக்களுக்கு 2,707 டி.எம்.சி. தண்ணீர் தேவை. ஆனால் தமிழ்நாட்டின் நீர்வளம் 1,643 டி.எம். சி. தான். இப்போதே 1,064 டி.எம்.சி. தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை டெல்டா பகுதி ,கர்நாடகத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆற்றை நம்பி இருக்கிறது. காவிரியின் மூலம் தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை ஒவ்வொரு ஆண்டும் போராடி தான் பெறுகிறோம். நம் தமிழகம் மட்டும் பக்கத்து மாநிலங்களோடு தண்ணீருக்காக போராடுகிறது என நினைப்பது தவறு . இந்தியா- பாகிஸ்தான் இடையே மட்டுமல்லாமல் வேறு பல நாடுகளுக்கு இடையேயும் தண்ணீர் பங்கீடு தாவா இருந்து வருவது நம்மில் பலருக்கும் தெரியாது.

ஆழ்குழாய் அறிமுகமான பின் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பது வழக்கமாகி விட்டது. இது எவ்வளவு பெரிய ஆபத்தானது என மக்கள் இன்னும் உணரவில்லை. அவர்களுக்கு விழிப்புணர்வு தேவை. இந்தியாவிலும் 1995 ஆம் ஆண்டு வாக்கில் 89 சதவீத நிலப்பகுதியில் போதிய அளவுக்கு நிலத்தடி நீர் இருந்தது. 2004 -ம் ஆண்டு அது 52 சதவீத நிலப்பகுதியாக குறைந்து விட்டது. அதுபோல கிராமப்புறங்களின் நீரின் தேவையில் 85 சதவீதமும் ,நகர்புறங்களுக்கு தேவையான நீரில் 55 சதவீதமும் ,தொழிற்சாலைகளுக்கு தேவையான நீர் 50 சதவீதமும் நிலத்தடி நீரின் மூலம் தான் பூர்த்தி செய்யப்படுகிறது. இப்படி இருக்கும் போது தண்ணீரை எவ்வளவு ஆழத்துக்கு தோண்டி ஆழ்குழாய் மூலம் எடுக்க முடியுமோ அவ்வளவோ தூரம் எடுக்கிறோம். ஒரு கட்டத்தில் நிலத்தடி நீரே தீர்ந்து விடும். அப்போது நாம் என்ன செய்வோம் ?. இப்போதும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் நிலத்தடி நீர் இல்லாதது பலருக்கும் தெரியவில்லை.

நீர் பற்றாக்குறையை சாமாளிக்க நீர் மேலாண்மை வழிகளில் தமிழகத்தின் நீர்வளத்தை பெருக்கவும்,தற்போது கிடைக்கும் நீரை சேமிக்கவும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக நாம் எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். தமிழக நதிகளில் இருந்து 1977,2005,2007,2015 ஆகிய ஆண்டுகளில் மட்டும் 500 முதல் 1000 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றுள்ளது.காவிரி ஆற்றிப்படுகையில் 1991 முதல் 2005 வரை சுமார் 1,039 டி.எம்.சி. தண்ணீர் வீணாக சென்று கடலில் கலந்துள்ளது. இந்த நீரின் மூலம் மட்டும் 51 ஆயிரத்து 950 கோடி மதிப்புள்ள நெல் உற்பத்தி செய்திருக்க முடியும்.

தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் ,டிசம்பர் மாதங்களில் பெய்த பெரும் மழையின் போது மட்டும் 500 டி.எம்.சி.தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றுள்ளது. இதுபோல நீர் இழப்பு ஏற்படாமல் இருக்க நாம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயமே கண்மாய்,குளம்,ஏரி, போன்ற நீர் நிலைகளையும் அவற்றிற்கு தண்ணீர் வரத்துக் கால்வாய்களையும் பழுது பார்த்து ,பாதுகாத்து ,பராமரிக்க வேண்டும் என்பதாகும். ஆண்டுக்காண்டு பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப நீர்வளம் அதிகரிப்பது இல்லை.இன்னும் சொல்லப் போனால் தண்ணீர் வளம் குறைந்துக் கொண்டு தான் வருகிறது. இந்த சூழலில் நாம் இருக்கும் போது நீரை வீணாக்கமல் காப்பாற்றி பயன்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். இது ஒவ்வொரு மனிதனின் கடமை.அரசோ ,தன்னார்வ தொண்டு நிறுவனங்ளோ ,போராட்ட குழுக்களோ தண்ணீரை காத்திட முடியாது . ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தண்ணீரை காப்பாற்ற வேண்டும்,, பாதுகாக்க வேண்டும் , சேமிக்க வேண்டும் என்கிற அர்பணிப்பு இருந்தால் மட்டுமே நாம் நீர் வளத்தை தக்க வைக்கமுடியும்.

நீரின்றி அமையாது உலகு. இனி நீரின்றி அணைந்த உலகாக மாறாமல் காப்பது மானிடப்பிறப்பின் முக்கிய சேவையாகும்!.

-த.ராம்

1 Comments

Write A Comment