Tamil Sanjikai

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி, வந்த பின் செய்ய வேண்டியது என்ன என்பது நாம் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம் .

பன்றிக்காய்ச்சல் நோய் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் எளிதில் பரவும். ‘‘எச்1 என்1’’ என்ற வைரஸ் கிருமியால் பரவுகிறது. இந்த வைரஸ் உடலில் பரவியதும் சளி பிடிக்கும். உடனே காய்ச்சல் வரும், தொண்டை வலி, சோர்வு, உடல் வலி, பசியின்மை போன்றவை வரும். முதல் 5 நாட்களுக்கு சாதாரண காய்ச்சல் போல இருக்கும். பின்னர் காய்ச்சல் கடுமையாகும். தாங்க முடியாத உடல்வலி, வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படும்.

பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்றாமல் இருக்க சில வழிமுறைகளை கையாள வேண்டுமென சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது. இதன்படி பாதிக்கப்பட்ட நோயாளிகளை உடன் இருந்து பராமரிப்பவர்களும், மருத்துவம் செய்யும் பணியாளர்களும் பன்றிக்காய்ச்சலுக்கான மாத்திரைகளை சாப்பிட வேண்டியது அவசியம் ஆகும். பன்றிக்காய்ச்சல் தொற்று உள்ளவர்கள் பராமரிக்கப்படும் பகுதிக்கு தேவையின்றி செல்வதை தவிர்க்க வேண்டும்.

சளி, இருமல் இருப்பவர்கள் கைக்குட்டையை பயன்படுத்தி தேவைப்படும் போது வாயை மூடிக்கொள்ள வேண்டும். வைரஸ் தொற்று பரவும் காலங்களில் கை குலுக்குவது, தொட்டு பேசுவதை தவிர்க்க வேண்டும்.
சளி, இருமல் இருக்கும் குழந்தைகளை வீட்டிலேயே தனியாக பராமரிக்க வேண்டும். பள்ளிக்கு அனுப்பினால் மேலும் பலருக்கு பரவும் வாய்ப்பு அதிகரிப்பதோடு, குழந்தையும் பலவீனம் அடையும். காய்ச்சல் வந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை கூறியுள்ளது.

பன்றிக்காய்ச்சல் வராமல் இருக்க மத்திய சுகாதாரத்துறை சில வழிகாட்டி நெறிமுறைகளை தெரிவித்துள்ளது. இதன்படி தினமும் குறைந்தபட்சம் ஒரு வேளை சுத்தமான நீரில் குளிக்க வேண்டும். நோய்க்கிருமி எதிர்ப்பு சக்தி கொண்ட சோப்பைக் கொண்டு அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். குழாய் தண்ணீரில் குறைந்த பட்சம் 15 வினாடிகள் கைகளை அலச வேண்டும். வெளியில் சென்று விட்டு வந்ததும் கை, கால், முகம், கழுத்துப் பகுதிகளை சுத்தமான தண்ணீரால் நன்கு கழுவ வேண்டும். இரவில் குறைந்த பட்சம் 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு உறக்கம் அவசியம்.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 10 தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும், சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும். தானிய வகைகள், பசுமையான காய்கறிகள், வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பழங்கள் சாப்பிட வேண்டும். மது அருந்தினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும், இதனால் பன்றி காய்ச்சல் போன்ற நோய்க்கிருமிகள் உடலுக்குள் எளிதாக ஊடுருவும் என்பதால் மது அருந்துவதை தவிர்த்து விட வேண்டும்.

மிதமான உடற்பயிற்சி உடலில் ஆக்சிஜனின் அளவை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் என்பதால், தினசரி 30 முதல் 40 நிமிடம் வேகமான நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இருமுவதன் மூலமும், தும்முவதன் மூலமும் பன்றிக்காய்ச்சல் நோய்க்கிருமி ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் என்பதால், நோய் பாதிப்பு உள்ளவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும், உடல் ரீதியாகவும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பன்றிக்காய்ச்சல் நோய் ஏற்பட்டு இருப்பதை சாதாரண முறை சோதனைகளால் கண்டுப்பிடிக்க முடியாது. பல்வேறு கட்ட சோதனை நடத்தினால்தான் தெரியவரும். தொண்டை பகுதியில் இருந்து எடுக்கப்படும் சளியை பரிசோதித்தால் இந்த வைரஸ் இருப்பதை கண்டுபிடிக்கலாம். இந்த நோய்க்கு 3 நிலைகள் உள்ளன. அவற்றுக்கான அறிகுறிகளும் வேறுபடுகிறது. முதல் நிலையில் லேசான உடல் சூடு, லேசான தொண்டை வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, உடல் சோர்வு காணப்படும். 2–வது நிலையில் கடும் காய்ச்சல், கடும் தொண்டை வலி காணப்படும். 3–வது நிலையில் முதல் இரண்டு நிலைகளின் அறிகுறிகளுடன் மூச்சு திணறல், நெஞ்சு வலி, குறைவான ரத்த அழுத்தம், தலைசுற்றல், மயக்கம், மந்த நிலை, கை–கால்கள் நீலநிறமாகுதல் போன்ற அறிகுறிகள் தென்படும்.

பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் மேலும் பரவாமல் இருக்க முகமூடி அணிந்துதான் வெளியே செல்ல வேண்டும். பன்றிக்காய்ச்சலுக்கான சோதனைக்கு மாதிரிகள் சேகரிக்கப்படும். அப்பொழுது 7 நாட்களுக்கு வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். மாதிரிகள் ஆய்வுக்கு ஒரு நாளில் இருந்து இரு நாட்கள் வரை ஆகும். அதில் பாசிட்டிவ் என தெரியவந்தால் அதன் பிறகு பன்றிக்காய்ச்சல் வைரசுக்கான (ஏ1 N1) சோதனை நடத்தப்படும். அதே சமயத்தில் உடனடியாக மருத்துவமும் தொடங்கப்படும். நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெறலாம் அல்லது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறலாம். 7 நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் மேலும் எதுவும் தென்படாத பட்சத்தில் சிகிச்சை முடிவுக்கு வரும்.

0 Comments

Write A Comment