Tamil Sanjikai

பொதிகைமலையில் உற்பத்தியாகி பெருஞ்சாணி அணைக்கு வந்து அங்கிருந்து புறப்பட்டு பல கிளைகளாகப் பிரிந்து பல்வேறு ஊர்களோடே பயணித்து, மக்களின் தேவைகளை நிறைவேற்றி விட்டு இறுதியாக மணக்குடி காயலில் கலந்து கடலோடு கலக்கும் உன்னத நீர்நிலைதான் பழையாறு. ஆறு கடலோடு கலக்கும் பகுதியை பொழிமுகம் ( Estuary ) என்று அழைப்பார்கள்.

மணக்குடி காயலில் அலையாத்திக் காடுகள் எனப்படும் மாங்க்ரோவ் காடுகள் உள்ளன. இந்தக்காடுகள் கடுமையான கடல் சீற்றம் மற்றும் பேரலைகளைத் தடுக்கும் வல்லமை கொண்டவை. அதிக வெப்பம் அதிக மழை இருக்கும் இடங்களில் மட்டுமே அலையாத்தி மரங்கள் வளரும். மற்றும் கடலோர முகத்துவாரப் பகுதிகள் உப்பங்கழிகள் ஆகியவை அலையாத்தி வளர ஏற்ற இடமாகும்.

தமிழ்நாட்டில் முத்துப்பேட்டை, பிச்சாவரம் ஆகிய பகுதிகளிலும் மேற்குவங்கத்தில் கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகளின் முகத்துவாரப் பகுதிகளிலும் இத்தகைய காடுகள் காணப்படுகின்றன. இந்த பகுதிகளில் கடல் நீரோடு ஆற்றுநீர் கலக்கும் போது உப்பின் அளவு குறைகிறது. இது உவர்நீர் எனப்படுகிறது. இந்த நீர் நிறைந்துள்ள உவர் நிலங்களில் அலையாத்தி காடுகள் அடர்ந்து வளர்கின்றன. இந்த அலையாத்தி மரங்களின் வேர்கள் கடலோர மணலை இறுகச் செய்து மணல் அரிப்பைத் தடுக்கிறது.

குமரி மாவட்டத்தில் மணக்குடி பகுதியில் அமைந்துள்ள அலையாத்திக் காடுகள் மிகவும் அழகானவை. அவை சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்து, அந்தப் பகுதிக்குப் படையெடுக்கும் வெளிநாட்டுப் பறவைகளுக்குப் புகலிடமாகத் திகழ்கிறது.

இங்கு மீனவப் பெருமக்கள் பெரும்பாலாக வசித்து வருவதால் இந்தக் காயலில் மீன்பிடி தொழிலும் நடைபெற்று வருகிறது.

சமீப காலமாக இந்தக் காயலில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. காலாவதியான மருந்துப் பொருட்களும், உபயோகப் படுத்தப் பட்ட மருந்துக் குப்பைகளாலும் இந்த மணக்குடி காயல் மிகப் பெரிய ஒரு சுகாதாரச் சீரழிவைச் சந்தித்து வருகிறது. மலையில் உற்பத்தியாகி ஊரெங்கும் ஓடி நகரில் கலக்கும்போதே பல்வேறு மாசுகளை உள்வாங்கிக் கொண்டு பயணிக்கும் ஆறுகள் தங்களுக்குள் வாழும் உயிரினங்களால் மீண்டும் மீண்டும் தங்களைச் சுத்தப் படுத்திக் கொள்கின்றன.

நீர்நிலைகள் குறித்த பொதுமக்களின் துச்சமான எண்ணம் குறித்து எழும் அச்சம் நம்முடைய அடுத்த தலைமுறைகளுக்கானது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆறுகள், குளங்கள், ஏரிகள் ஆகியவை குடிநீர்த் தேவைகள் மற்றும் விவசாய பாசனத் தேவைகளுக்கானது என்ற நிலை தேய்ந்து குப்பைகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியாய் மாறி நிற்கும் அவலத்தை இன்று இந்தியநாடு எதிர்கொண்டு வருகிறது. இது ஒரு ஆபத்தான கட்டம்.

ஒருபுறம் ஆறுகள், குளங்கள், விவசாய நிலங்களை அழித்து சாலைகள் அமைத்தல், அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டுதல், வீட்டுமனைகள் தயார் செய்து விற்பனை செய்தல் என்று பூமியின் இயல்பை அரசும், கார்ப்பொரேட்டுகளும், தனிமனிதர்களும் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறம், எஞ்சியிருக்கும் ஆறுகளும், குளங்களும் இவ்வாறு ரசாயன, மருத்துவ, நகர்ப்புறக் கழிவுகளால் நாசமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது.

கேரளாவில் இருந்து வரும் இறைச்சிக் கழிவுகள் அனைத்தும் லஞ்சலாவண்யங்களால் தமிழகத்துக்குள் நுழைந்து, இங்குள்ள நீர்நிலைகளில் கொட்டப் பட்டு நீராதாரங்களை மாசுபடுத்தி சுகாதார சீர்கேட்டை உருவாக்குவது போதாதென்று மருத்துவக் கழிவுகளால் ஏற்படும் சீர்கேடு மிகவும் ஆபத்தானது.

நன்னீரில் வாழும் மீன் இனங்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் இந்த காலாவதியான மருந்துக் கழிவுகளை உட்கொண்டு செத்துப் போகின்றன. மேலும் அந்த கடல்சார் உயிரினங்களைப் பிடித்து உண்ணும் மனிதர்களும் தங்களுக்கு என்ன நோய் பீடித்திருக்கிறது என்பதையறியாமலேயே நோய் வாய்ப்பட்டு செத்துப் போகிறார்கள்.

குடிமக்களுக்கு தம்முடைய சுற்றுப் புறத்தையும், சூழியலையும் குறித்த போதுமான அறிவு கற்பிக்கப் படாததே இதற்குக் காரணம். ஒருபக்கம் கார்ப்பரேட்டுகள் தெரிந்தே இதைச் செய்கிறார்கள். மற்றொரு பக்கம் தாங்கள் செய்வதையறியாமல் சாமான்யர்கள் செய்கிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் குடிக்க ஒருவாய் நீரின்றி மனிதர்கள் மரிக்கும் சூழ்நிலை வெகுதொலைவில் இல்லை. ஏனென்றால் தங்களுடைய நீர்நிலைகளைப் பாதுகாக்காத மக்களும், அரசும் தாங்கள் வாழும் இந்தப் புவிக்கெதிரானவர்கள். அவர்கள் தங்களது அழிவைத் தாங்களே தேடிக் கொள்வார்கள்.

0 Comments

Write A Comment