Tamil Sanjikai

இயற்கை ஆராதிக்கும் முட்டம்!

கன்னியாகுமரி மாவட்டம் என்றாலே சுற்றுலா தான். அதில் முக்கியமான இடம் முட்டம். பல திரைப்படங்களில் அழகாகக் காண்பிக்கப்பட்டதும், 'கடலோரக் கவிதைகள்' படத்தின் கதைக்களமாய் அமைந்ததும், அந்தப் படத்தில் சத்யராஜ் மீன் பிடித்து வந்து கொடுத்த இடமும் முட்டம் தான். இந்தக் கடற்கரையில் தான் ஜெனிபர் டீச்சரான ரேகா குடை பிடித்தவாறு நடந்து வருவார். 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் சின்னப் பசங்ககூட கார்த்திக்கும், ராதாவும் ஒளிந்து விளையாடும் இடமும் முட்டம் தான். இது தவிர தனுஷ் நடித்த மரியான், குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் என நிறைய படங்களின் ஷூட்டிங் இங்கே தான் நடந்தது. சினிமாவில் காட்டியதை விடவும் நேரில் முட்டம் இன்னும் பல மடங்கு அழகு. முட்டம் கடற்கரையை நெருங்கும் போதே வரிசையாய் நூற்று கணக்கான தென்னை மரங்கள் தூரத்தில் தெரியும். வெவ்வேறு வடிவத்தில் வளைந்து இருக்கும் இந்த மரங்களை சாலையில் நீங்கள் சற்று உயரத்திலிருந்து பார்க்கலாம் உயரத்தில் சாலை, கீழே நூற்றுகணக்கில் மரங்கள் மற்றும் அழகிய கடற்கரை. இந்த காட்சி தான் முட்டம் சுற்றுலா பயணிகளை வரவேற்கிறது.

நாகர்கோவிலில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் முட்டம் கடற்கரை கிராமம் இருக்கிறது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சகல புனிதர் தேவாலயம், ஜேப்பியார் மீன்பிடித் துறைமுகம், முட்டத்தின் அடையாளமாக மாறிக் கொண்டிருக்கிறது.

முட்டம் கடற்கரைக்குப் போகிற வழியில் செம்மண் தேரி இருக்கிறது. செக்கச் செவேலென்று பார்க்கவே அழகாக இருக்கும். அதைத் தாண்டிப் போகும் போது பழமையான கலங்கரை விளக்கம் உயர்ந்து நிற்கும். தமிழகத்தில் அமைந்த முதல் கலங்கரை விளக்கம் என்ற பெருமை முட்டம் கலங்கரை விளக்கத்திற்கு உண்டு. 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதிக்கு முன்புவரை இந்த முட்டம் பகுதியும், குமரி மாவட்டமும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது.

18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் முட்டத்தில் கலங்கரை விளக்கம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்தனர். 1875 -ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு 1882 -ம் ஆண்டு முதல் முட்டம் கலங்கரை விளக்கம் செயல்படத் தொடங்கியது. 1910-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முறையாக செயல்பட்டது. அன்று முதல் 1963-ல் மின்சாரம் கண்டு பிடிப்பது வரை, அதிக சக்தி கொண்ட பெட்ரோமாக்ஸ் லைட் பயன்படுத்தப்பட்டு வந்தது. பல்வேறு மாற்றங்ளுக்குப் பிறகு 1994-ம் ஆண்டு நவம்பர் 30-ல் பி.வி.பர்னர் லைட் 12யு, 100 டபிள்யூ ஆல்சன் விளக்கு உலோக ஹாலைடு விளக்காக மாற்றப்பட்டது. 1996 ஏப்ரலுக்கு பின் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டது. இப்போது நவீன ரேகான் எனும் மற்றொரு கருவி பொருத்தப்பட்டிருக்கிறது.

இந்தக் கருவி பகல் நேரத்தில் கப்பல் ஓட்டும் மாலுமிகளுக்கு வழிகாட்டியாக இருக்கும். இது இரவு நேரங்களில் தீடீர் என்று கலங்கரை விளக்கில் பழுது ஏற்பட்டால் மாற்றாகச் செயல்படும். பகல் நேரத்தில் சூரிய ஒளியால் லென்சுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வெள்ளைத் துணியால் மூடி வைக்கப்படும். முட்டம், கலங்கரை விளக்கம் செங்குத்தான குன்றின் மேல் அமைந்துள்ளது. இந்தக் கலங்கரை விளக்கம் கடல் மட்டத்தில் இருந்து 43 மீட்டர் உயரத்திலும் 20 மீட்டர் உயர அறுங்கோண கோபுரம் கருப்பு வெள்ளை நிறத்திலும் காட்சி அளிக்கிறது.

1993-ம் ஆண்டு முதல் கலங்கரை விளக்கிற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மீண்டும் 2012-ம் ஆண்டு செப்பம்பர் முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இதில் இந்தியாவில் முதன்முதலாக 13 கலங்கரை விளக்கங்கள் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. இதில் ராமேஸ்வரம், முட்டம், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள கலங்கரை விளக்கமும் அடங்கும். முட்டம் கடற்கரையில் கால் நனைக்க பயணிகள் செல்வார்கள். அங்கேயே சிறு சிறு பாறைகள் உள்ளன. அதன் மேல் ஏறி நின்று கொண்டால் மனிதர்களை தாண்டி அலை அடிக்கும்.

தமிழகத்தின் மற்ற கடற்கரை போல குளிப்பதற்கு ஏற்ற கடற்கரையாக முட்டம் இல்லை. காரணம் இங்கு அலையின் வேகம் அதிகம்.பெரிய பெரிய அலைகளாக, ஆள் உயர அலைகளாக வருகிறது. அலைகள் ஒவ்வொன்றும் ஆக்ரோஷமாக இருக்கும். பார்ப்பதற்கே பயமாகவும் இருக்கும் அதையும் தாண்டி தைரியமாக கடலில் கால் நனைக்கப் போனால், அது சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பாக இருக்காது. முட்டம் கடற்கரையில் குளிப்பதற்காக வந்து அடிக்கடி, கடலில் மூழ்கி இறந்து போகிறார்கள்.

ஓங்கி எழுந்து அடிக்கும் அலைகளின் சீற்றத்தினால், கடலுக்குள் பயணிகள் போகக்கூடாது என்பதற்காக சில இடங்களில் இரும்புக் கம்பியால் வேலிகள் போடப்பட்டிருக்கிறது. அந்த வலிமையான இரும்புக் கம்பிகள் வளைந்தும், உடைந்தும் போயிருக்கிறது. கரையிலிருந்து கடலைப் பார்க்க, நிறைய சிமென்ட் பெஞ்சுகள் அழகாக கட்டப்பட்டிருக்கின்றன. குடில்கள்போல அமைத்து, அதில் வட்ட வடிவ பெஞ்சுகள் கட்டி இருக்கிறார்கள். இதனால் கடற்கரை அழகாகவும், சுத்தமாகவும் இருக்கிறது. முட்டத்துக்கு செல்ல சரியான நேரம் காலை தான். வெய்யில் இல்லாததால் கடற்கரை அழகை நன்றாக ரசிக்கலாம்.

0 Comments

Write A Comment