Tamil Sanjikai

உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல மழைக் காடான அமேசான் காடுகளில் அழிக்கப்பட்ட விகிதம்தான், இதுவரை அங்கு நடந்த காடுகள் அழிப்பிலேயே வேகமானது என பிரேசில் அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள அமேசான் காடுகளின் பெரும் பரப்பு பிரேசில் நாட்டு எல்லைக்குள் தான் இருக்கிறது. ஆகஸ்ட் 2017 முதல் ஜூலை 2018 வரையிலான ஓராண்டு காலகட்டத்தில் மட்டும், பிரேசிலில் உள்ள சுமார் 7,900 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள அமேசான் மழைக்காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. சட்ட விரோதமாக மரங்கள் வெட்டப்படுவதே இதற்குக் காரணம் என பிரேசில் சுற்றுக்சூழல் அமைச்சர் எட்சன் துவார்த்தே தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பிரேசில் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற சயீர் பொல்சனாரூ, மரங்கள் வெட்டப்படுவதற்கு விதிக்கப்படும் அபாரதத் தொகையையும், அரசு சுற்றுச்சூழல் அமைப்புகளின் அதிகாரத்தையும் குறைப்பதாக உறுதி அளித்திருந்த்தார். அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்கள் ஒன்றாக இணைக்கப்படும் என்று கூறியிருந்தார். இது அமேசான் மழைக்காடுகளுக்கு ஆபத்தான முடிவு என சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் கூறியிருந்தனர்.

செயற்கைக்கோள் கண்காணிப்பு மூலம் பிரேசில் அரசு சமீபத்திய தகவல்களை சேகரித்தது. இந்தநிலையில் மாடோ கிராசோ மற்றும் பாரா ஆகிய மாகாணங்களில் காடுகள் அழிப்பு கடந்த ஆண்டைவிட 13.7 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மாடோ கிராசோ மாகாணம் பிரேசில் நாட்டில் அதிகம் தானிய உற்பத்தி செய்யும் மாகாணமாகும். அங்கு வேளாண்மை நடவடிக்கைகளை விரிவாக்குவது அமேசான் காடுகளை அழிக்க வழிவகுக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

1965-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் ஒன்றின் படி வேளாண் நில உரிமையாளர்கள் தங்கள் நிலத்தின் ஒரு பகுதியை காடுகளாகவே வைத்திருக்க வேண்டும். பிரேசிலில் காடுகள் அழிப்பை தடுக்கும் நடவடிக்கைகளை 2004-ஆம் ஆண்டு தொடங்கியது. கடந்த ஆண்டை விட காடுகள் அழிக்கப்படும் விகிதம் அதிகமாக இருந்தாலும், 2004-ஆம் ஆண்டைவிட தற்போது 72சதவிகிதம் காடுகள் அழிக்கப்படுவது குறைவாகவே உள்ளது.

0 Comments

Write A Comment