Tamil Sanjikai

இயற்கை எழில் கொஞ்சும் அற்புத பூமி கேரளா. அதன் இயற்கை வனப்பும், மரங்களும், தண்ணீர் அமைப்புகளும் வேறு எங்கும் இல்லை என்றே சொல்லலாம். அழகிய கேரளாவில் மிதக்கும் படகு வீடு இன்னொரு அதிசயம். ஆலப்புழா நகரில் உள்ள படகு வீடுகளில் தண்ணீர் மீது தங்கும் அழகிய அனுபவம் வித்தியாசமான சூழலுக்கு நம்மை கடத்திச் செல்கிறது. கிழக்கு வெனிஸ் என்று அழைக்கப்படுகின்ற ஆலப்புழா, கேரள வரலாற்றில் ஒரு சிறப்பான இடத்தில் உள்ளது. படகுப்போட்டிகள், விடுமுறை காயல் படகு வீடுகள், கடற்கரைகள், கடல் உற்பத்திப் பொருட்கள் மற்றும் தேங்காய் நார் தொழிற்சாலைகள் ஆகியவற்றிற்குப் புகழ்பெற்ற இடமாக மாறிவிட்டது. ஆலப்புழா கடற்கரையும் ஒரு முக்கிய கடற்கரை பகுதியாக இருக்கிறது. கடல் வரை பரந்து காணப்படும் ஆலப்புழா கப்பல் துறை 137 வருட பழைமை வாய்ந்தது. ஆலப்புழாவில் இருக்கும்போது அருமையான ஒரு அனுபவம், படகு வீடு பயணமாகும்.

ஆலப்புழாவிலுள்ள காயல்களில் பழையகாலத்து கட்டுவள்ளங்களின் மறுபதிப்புகளைக் இன்றும் காணலாம். அசலான கட்டுவள்ளம் அல்லது அரிசி தோணிகள் டன் கணக்கான அரிசி மற்றும் நறுமணப் பொருட்களைக் கொண்டு செல்லப் பயன்படுவது வழக்கம். கட்டுவள்ளம் அல்லது முடிச்சோடு கூடிய படகு என இவைகளை சொல்கிறார்கள். ஏனென்றால் முழு படகும் கயிற்றினால் மட்டுமே கட்டப்பட்டு ஒரு படகாக உருவாக்கப்பட்டிருக்கும். பின்னர் ஒரு ஹோட்டல் போன்று நன்றாக அலங்கரிக்கப்பட்ட படுக்கை அறைகள், நவீன கழிப்பறைகள், ஆடம்பர வரவேற்பறைகள், சமையலறை மற்றும் அனைத்து பக்கங்களையும் பார்ப்பதற்கு ஏற்ற பால்கனி என அனைத்து வசதிகளையும் கொண்ட படகு வீடுகள் இப்போது வந்துவிட்டன. ஒருவர் படகு இல்லத்தில் இருக்கும்போது காயல் வாழ்க்கை நிகழ்வுகளை எந்தவிதமான இடையூறும் இல்லாமல் கண்டுகளிக்கலாம்.

பாரம்பரியமிக்க வீடு ஒன்று தண்ணீரில் கம்பீரமாக மிதப்பதுபோல் காட்சியளிக்கிறது படகுவீடு. மெல்ல மெல்ல அது நகர்ந்து செல்லும்போது நகரத்து பரபரப்பு, பதற்றம், இரைச்சல், கவலை போன்றவைகளுக்கெல்லாம் விடைகொடுத்துவிட்டு அமைதியையும், ஆனந்தத்தையும் நோக்கி பயணிப்பதுபோல் இருக்கும். மெதுவாக படகு வீடு பயணிக்கிறது.தண்ணீர் பரப்பிலே பாதையை உருவாக்கியிருக்கிறார்கள். கொச்சி முதல் கொல்லம் வரை அந்த பாதை நீளுகிறது. சிவப்பு நிற பில்லர்’ போன்று அந்த பாதை தெரிகிறது. இரவில் அதில் விளக்குகள் எரிகின்றன. இதில் பயணிக்கும்போது கரையோர இயற்கை காட்சிகளை கண் நிறைய அள்ளிக் கொண்டே செல்லலாம். கட்டுமரங்களில் மீன் பிடித்துக்கொண்டிருப்பார்கள். அவைகளை எல்லாம் பார்த்தபடியே, கேரளாவின் கிராமங்களையும், அங்குள்ள மக்களையும் பார்த்துக்கொண்டே செல்லலாம். இதன் அழகால் கவரப்பட்ட வெளிநாட்டினர் சிலர் ஒரு மாதம் முழுக்க படகுவீட்டிலே தங்கி காயல் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தண்ணீர். ஆலப்புழா ஆர்யநாடு படகுதுறையில் இருந்து வேம்பநாடு காயலில் பயணம் செய்யும் படகு இடது புறமாகத் திரும்பினால் குமரக்கோம் தண்ணீர்மூக்கு பகுதி வரும். வலது பக்கத்தில் புன்னமடை- அம்பலபுழா வருகிறது.

படகு வீடு பயணத்திற்கு வெளிநாட்டு பயணிகள் ஆர்வமுடன் வருவது ஆச்சரியத்தை அளிக்கிறது.எந்த ஒரு இயற்கை காட்சியையும் தவற விட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்தில் அவர்கள் கேமிராவும் கையுமாக காட்சி அளிக்கிறார்கள். தங்கள் கண்களில் சிக்கும் காட்சிகளை எல்லாம் தத்ரூபமாக படம்பிடித்து தள்ளுகிறார்கள். வெளியே இருந்து பார்க்கும்போது எல்லா படகுவீடுகளும் ஒரே மாதிரி தெரிந்தாலும், ஒன்றுக்கொன்று வித்தியாசமாகத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படகு வீட்டிலும் அழகான லிவிங் ரூம், டைல்ஸ் ஒட்டிய சுவருக்கு பின்னால் டைனிங் ஏரியா, பாத் அட்டாச் பெட் ரூம்கள், சமையல் அறை போன்றவை இருக்கின்றன. லிவிங் ரூம் தவிர இதர பகுதிகள் அனைத்தும் ஏ.சி. செய்யப்பட்டிருக்கிறது.

இரண்டு பெட் ரூம்களுடன் கூடிய படகு வீட்டின் வாடகை 8000 ரூபாய் முதல் இருக்கிறது. இந்த படகு வீட்டை இரண்டு பேர் கவனித்து கொள்வார்கள். அவர்களே சமையலும் செய்து கொடுப்பார்கள். மதிய சாப்பாடு நேரத்தில் பயணிகளின் விருப்பத்திற்கேற்ப மெனு சொன்னவுடன் கடல் உணவுகள் மெனுவில் இருந்தால் காயல் கரையோரச் சந்தைப் பகுதியின் முன் படகினை நிறுத்தி அங்கு வித விதமான கடல் மீன்களையும் வாங்கி கொண்டு அதை, பயணிகளுக்கு சுவையான விருந்தாக கொடுக்கிறார்கள். வேம்பநாடு லேக் சுற்றுப் பகுதிகளில் மக்கள் பஸ்க்கு காத்திருப்பது போல் அங்கு படகுக்காக காத்திருந்திருக்கிறார்கள்.

இப்படி பயணிக்கும்போது படகோட்டிகள் மாலை ஆறு மணிக்கு படகை ஒரு இடத்தில நிறுத்தி விடுவார்கள், பின்னர் மறுநாள் காலை ஒன்பது மணிக்குத்தான் பயணம் தொடரும். பின்னர் அங்கு இருக்கும் சிறு கிராமங்களுக்கு சென்று சுற்றுலாப் பயணிகள் தங்களுக்கு வேண்டிய நினைவு பொருட்களை வாங்கி வரலாம். இருள் அடர்ந்த அந்த பொழுதில் இரவு உணவை முடித்துக்கொள்கிறார்கள். அதிகாலையில் அந்த சூரியன் உதிக்கும்போது படகும், தண்ணீரும் ,தங்கமாக மாறுவதுபோல ஒரு தோற்றம். அது ஒரு கண்கொள்ளாத காட்சி. தூங்கி எழுந்த பின் காலை சிற்றுண்டியாக ஆப்பமும், கடலை கறியும் கொடுக்கிறார்கள். ஆலப்புழா மற்றும் குமரக்கோம் இவை இரண்டும் பேக் வாட்டர் மற்றும் படகு சவாரிக்கு மிக புகழ் பெற்றது. இரு இடங்களில் இருந்தும் இரவு நேர படகு சவாரி உண்டு எனினும்- ஆலப்புழா தான் இப்படி ஒரு முழு நாள் சவாரி செல்ல சிறந்தது.

ஆலப்புழாவில் சுமார் 1000 படகு வீடுகள் உள்ளன. இதனால் சவாரிக்கான செலவு கணிசமாக குறைகிறது. குமரக்கோமில் 50க்கும் குறைவான படகுகள் தான் உள்ளன. வெளிநாட்டினர் மற்றும் விபரம் தெரியாதவர்கள் தான் அங்கிருந்து இரவு நேர படகு சவாரி செய்கின்றார்கள். மேலும் ஆலப்புழா படகு சவாரியில், நடுவில் காணும் தண்ணீரை தவிர இரு புற கரைகளிலும் வீடுகள் மற்றும் மனித சஞ்சாரங்களை காணலாம். குமரக்கோமில் மிக அதிகம் நீரை மட்டுமே காண முடியும். கரைகளில் வீடுகளும் குறைவு.

வேம்பு நாடு ஏரியின் இரு கரையிலும் சில நிமிடங்களுக்கு ஒரு முறை ஆங்காங்கு வீடுகள் தென்படும். மிக அரிதாக அடுத்துடுத்து வீடுகள் உள்ளன. விண்ணை தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவை தேடி சிம்பு செல்வாரே அந்த ஊர் தான். திருமணமான புது தம்பதியர்கள் இங்கு தான் ஹனிமூன் கொண்டாட வருகிறார்கள். நல்ல இடம், படகு வீடும் அதன் மிதப்புத்தன்மையும், தண்ணீர் சத்தமும் ஒரு தனி ரம்மியத்தை கொடுக்கும். ஒரு பயணம் கண்களுக்கும், மனதுக்கும் விருந்தாக அமைந்தால் எப்படி இருக்கும் அது போல தான் ஆலப்புழா படகுவீடு பயணம்.

0 Comments

Write A Comment