Tamil Sanjikai

1950-ஆண்டு வாக்கில் 68 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்புடன் உலகின் நான்காவது மிகப்பெரிய ஏரியாக இருந்த ஏரல் கடல், அதன் நீராதாரமாக விளங்கிய ஆறுகள் பாசனத்திற்கு திருப்பி விடப்பட்டதால், அதன் மொத்த அளவில் 10 சதவீதமாக சுருங்கிவிட்டது. உலகின் நான்காவது மிகப்பெரிய ஏரி, நான்கு சிறு ஏரிகளாக சுருங்கியது. உலகின் மிகமோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் ஒன்றாக குறிப்பிடப்படும் ஏரல் கடலின் சிதைவு ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து,தற்போது கஜகஸ்தான் நாடு மீண்டு வருகிறது. கஜகஸ்தான்-உஸ்பெக்கிஸ்தான் இடையே அமைந்துள்ளது ஏரல் கடல். பெயரில் கடல் என்று இருந்தாலும் உண்மையில் இது ஒரு ஏரியாகும்.

உலகின் மிகமோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் ஒன்றாக குறிப்பிடப்படும் ஏரல் கடலின் சிதைவு, அதன் இருபுறமும் வாழ்ந்து வந்த கஜகஸ்தான் மற்றும் உஸ்பெக்கிஸ்தான் மக்களின் வாழ்விலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஏரல் கடலின் கிழக்குப் பகுதி முற்றிலும் வற்றி இன்று ஏரல்கும் பாலைவனம் என அழைக்கப்படுகிறது. 1995-ஆம் ஆண்டில் ஆய்வாளர்கள் மதிப்பீட்டின்படி, ஆண்டுதோறும் 10 கோடி டன் நச்சு மணல், வாரியிறைக்கப்பட்டது. சுவாசக் கோளாறுகள், தொண்டைப் புற்றுநோயால், படுகை அருகே வசிக்கும் மக்களின் சராசரி ஆயுள் காலத்தில் 20 ஆண்டுகளை குறைத்து விட்டது. குழந்தைகள் இறப்பு விகிதம் சராசரியை விட 4 மடங்கு அதிகமாக இருந்தது.

சைர் மற்றும் அமு ஆறுகளால் வளம்பெற்ற ஏரல் கடல், கரையோரத்தில் வாழ்ந்த மத்திய கஜகஸ்தான் மற்றும் உஸ்பெக்கிஸ்தான் மக்களுக்கு மீன்பிடித் தொழில் மூலம் உணவையும் வேலைவாய்ப்பையும் வழங்கியது. ஆனால் ஏரல் வற்றி, உப்பும், மணலும், உரங்களும், பூச்சி கொல்லிகளும் கலந்த மணல் பாலைவனமாக இன்று காட்சியளிக்கிறது. அடிக்கடி வீசும் காற்று, மெல்ல மெல்ல வலுப்பெற்று புழுதிப் புயலாக மாறும்போது அங்கு வசிக்கும் மக்களுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்துகிறது. மணல் புயலால் வாரியிறைக்கப்படும் நச்சுப் புழுதிக்கு அஞ்சி மக்கள் ஊரை காலி செய்து வெளியேறினார்கள்.

கஜகஸ்தானில் 1988-ஆம் ஆண்டுக்குப் பிறகு மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. தனிநபர்கள், வனத்துறையினர் முயற்சி காரணமாக, நச்சு புழுதியை வாரித்தூற்றும் ஏரல் படுகையில், சாக்சால் எனப்படும் புதர் மரங்களை நட்டு வளர்க்கத் தொடங்கினார்கள். வெளிநாட்டு நிதியுதவியுடன் சுஸ்போவ் என்பவரது குழுவினர் ஓராண்டில் 2500 ஏக்கரை பசுமையாக மாற்றினார்கள். இது அங்கிருந்து வெளியேறிச் சென்றவர்கள் மீண்டும் திரும்பவும் வழிவகை செய்தது. 1990-ஆம் ஆண்டு தொடக்கத்தில் 1 லட்சத்து 63 ஆயிரம் ஹெக்டேர் பரப்பு பசுமையாக்கப்பட்டுள்ளது. இது, மணல் புயல் வீசுவதை முற்றிலும் தடுத்துவிடாது என்றாலும், அதன் பாதிப்புகளை குறைக்கும் என மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். உஸ்பெக்கிஸ்தானிலும் இந்த முயற்சி நடைபெறுகிறது என்றாலும் நிதிப் பற்றாக்குறை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏரல் கடல் வற்றி உருவான மணல் பாலைவனத்தின் புழுதிப் புயலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பசுமைப் போர்வையை உருவாக்கியது போலவே, மீண்டும் ஏரல் கடலை உயிர்ப்பிக்கும் முயற்சிகளும் நடைபெறுகின்றன. பாலைவனம் போல காட்சியளிக்கும் இந்த பகுதி கராட்டரன் என்று அழைக்கப்படுகிறது. வளப்படுத்தும் ஆறுகளை திருப்பி விட்டதால் ஆண்டுகள் செல்லச் செல்ல கடல் வற்றி, உப்புத்தன்மை அதிகரித்து மீன்கள் மொத்தமும் செத்து மடிந்தன. 2005-ஆம் ஆண்டில் உலக வங்கி நிதியுதவிடன், கோக்கரல் என்ற அணை கட்டப்பட்டது. கஜகஸ்தான் பகுதியில் எஞ்சியுள்ள ஏரல் கடலை காக்கும் இறுதி முயற்சியாக இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த அணை, குட்டி ஏரலின் நீர்மட்டம் 4 மீட்டர் அளவுக்கு உயர உதவியதோடு, மீன்பிடித் தொழிலுக்கு உகந்த சூழலை மேம்படுத்தியது. 1990 -ஆம் ஆண்டுக்குப் பிறகு மீன்பிடி அளவு 5 மடங்கு உயர்ந்துள்ளது. கராட்டரன் நகரில் இருந்து வெளியேறிச் சென்றவர்கள் திரும்பத் தொடங்கினர். தொலைநோக்குப் பார்வையில்லாமல் ஆறுகளை திருப்பிவிடும்போது ஏற்படும் சுற்றுச்சூழல் பேரழிவுக்கு உதாரணமாக இருக்கும் ஏரல் கடல், தொலைநோக்குப் பார்வை, உரிய திட்டமிடலும் கூடிய முயற்சிகள் மூலம் மீட்சிக்கு வழியுண்டு என்பதற்கும் உதாரணமாக உள்ளது.

0 Comments

Write A Comment