Tamil Sanjikai

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை தொடர்பாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி தொழிற்சாலைகளுக்கு, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை, கடந்த ஜூன் 5-ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வர இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இது தொடர்பாக தொழிற்சாலைகளுக்கு, தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், பிளாஸ்டிக் தடை தொடர்பாக, மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தொழிற்சாலைகளும் கமிட்டி அமைத்து, தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக, தொழிற்சாலைகளில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்றும், அதில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட பகுதி என்ற பலகையை ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் வைக்க உத்தரவிட்டுள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த நிகழ்ச்சிகளை நடத்த அறிவுறுத்தியுள்ளது.

இதற்காக தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றலாம் எனக் கூறியுள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது தொடர்பாக உறுதிமொழி எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது. இதை அனைத்தையும் செய்துவிட்டதை அறிக்கையாக தயாரித்து, வரும் 15-ஆம் தேதிக்குள், beattheplasticpollution@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment