Tamil Sanjikai

சமீபத்திய ஐபிசிசி ஆய்வறிக்கை ஒன்றின் முடிவுகள் முந்தைய கணிப்புகளைவிட பூமியின் வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருவதாக கூறியது. இதனை அடிப்டையாகக் கொண்டு போலந்தில் நடைபெற்று வரும் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் விவாதம் நடத்துவதற்கான முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.

பருவநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கு இடையேயான குழுவான ஐபிசிசி, கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றில், பூமியின் வெப்பநிலை தற்போதைய நிலையைவிட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகமானால் ஏற்படுக்கூடிய விளைவுகளை பட்டியலிட்டிருந்தது. அது உலகமெங்கும் அதிர்வலைகளை கிளப்பியிருந்தது. சர்வதேச அளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த அறிக்கை குறித்து விவாதிப்பதற்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் எடுத்திருந்த முயற்சிக்கு அமெரிக்கா,சவுதி அரேபியா, ரஷ்யா, குவைத் உள்ளிட்ட நாடுகள் முட்டுக்கட்டை போட்டுள்ளன.

ஐபிசிசியின் சமீபத்திய அறிக்கையை உருவாக்குவதற்கு கடந்த 2015-ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் குறித்த வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டில் முடிவுசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நூற்றாண்டிற்குள் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் மேலாக உயர்வதை கட்டுப்படுத்த வேண்டுமென்று முன்னர் கூறப்பட்டிருந்த சூழ்நிலையில், உலகம் 3 டிகிரி செல்சியஸ் என்ற அளவை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெப்பமயமாதல் இந்த நூற்றாண்டில் 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றால், 2030-ஆம் ஆண்டிற்குள் கரியமில வாயுவின் வெளியேற்றம் 45சதவீதம் குறைக்கப்பட வேண்டும்.

இந்த ஆய்வறிக்கை கடந்த அக்டோபர் தென்கொரியாவின் இன்சோனில் நகரில் வெளியிடப்பட்டபோது, உடனடி தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், உலகெங்கிலும் உள்ள அரசியல்வாதிகளிடமிருந்து பாராட்டையும், ஆதரவையும் பெற்றது. ஆனால், சவுதி அரேபியா, அமெரிக்கா, ரஷ்யா, குவைத் ஆகிய நாடுகள் இந்த ஆய்வறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எதிர்ப்பு தெரிவிக்கும், நாடுகள் அனைத்தும் இந்த ஆய்வறிக்கையை மையாக கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதிலாக, அது குறித்த 'குறிப்பை' மட்டும் மாநாட்டில் சேர்த்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளன. இந்த ஆய்வறிக்கை தென்கொரியாவில் வெளியிடப்பட்டபோது அதன் முழு முடிவுகள் வெளிவருவதை தடுப்பதற்காக கடைசி நிமிடம் வரை சவுதி அரேபியா போராடியது என்பது அனைவருக்கும் தெரிந்தது. போலந்தில் நடைபெற்று வரும் மாநாட்டில் எதிர்ப்புகளை மீறி ஐபிசிசியின் ஆய்வறிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னெடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்ததால், ஐநாவின் விதிமுறைப்படி அந்த முன்னெடுப்பு கைவிடப்பட்டது. உலகிற்க்கு அச்சுறுத்தலாக இருக்கும் வெப்பமயமாதல் குறித்த முக்கிய கூறுகளை விளக்கும் இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ளும் முயற்சி தோல்வியில் முடிவடைந்ததால், இதுகுறித்து பேச்சுவார்த்தையை ஆவலோடு எதிர்நோக்கியிருந்த பெரும்பாலான நாடுகளின் பிரதிநிதிகள் மட்டுமல்லாது விஞ்ஞானிகளும் கோபமும், வருத்தமும் அடைந்துள்ளனர்.

0 Comments

Write A Comment