Tamil Sanjikai

புதுச்சேரி அருகே முகலாயர்களின் பாணியில் கட்டப்பட்ட கட்டிடம் தற்போது நவீன கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.

கட்டட கலைக்கு பெயர் போனவர்கள் முகலாயர்கள். தாஜ்மஹால், டெல்லி செங்கோட்டை என அவர்களின் கட்டட கலைக்கான எடுத்துக்காட்டுகள் ஏராளம். இப்படி ஒரு கட்டடத்தை இக்காலத்தில் கட்டுவது என்பது இயலாத காரியம் என கூறுபவர்கள் மத்தியில், அதே பாணியில் கட்டடம் ஒன்றை கட்டியுள்ளார் புதுச்சேரியை சேர்ந்த கனகவேல். புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தை சேர்ந்த இவருக்கு கட்டிடக்கலையின் மீது தீராத ஆர்வம் கொண்டதன் வெளிப்பாடாகவே முகலாய மன்னர்கள் வாழ்ந்த அரண்மனையின் அமைப்பையும் அதில் அரசர்கள் வாழ்ந்து பயன்படுத்திய வாழ்க்கை முறையையும் மையமாக கொண்டு தத்ரூபமாக தமது வீட்டை அமைத்துள்ளார்.

இந்த வீட்டின் அமைப்பு குறித்து வீட்டின் உரிமையாளர் தெரிவிக்கையில், இவ்வீட்டின் சிறப்பம்சமாக வீட்டினுள் நுழைந்தவுடன் முப்பரிமாண புத்தர் சிலை, இளைப்பாற பொன்னூஞ்சல் இடம்பெற்றுள்ளது. மணிச்சித்திரத்தாழுடன் வீட்டின் உள்பகுதியில் கட்டிடக்கலையின் ஒரு சிறப்பம்சமாக பண்டைய காலத்தில் அமைக்கப்பட்டதுபோல் 18 இசைத்தூண்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பண்டையகாலத்தில் ராணிகள் பார்வையிட ஏற்படுத்தப்பட்ட முப்பரிகை மண்டபம் சிவப்பு கோமேதக கல்பதிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. மிக முக்கிய அமைப்பாக அரசர்களுக்கான தர்பார் ஹால் எனும் அமைப்பு கொண்டு, ஆண்கள் பேசுவது மட்டும் எதிரொலிக்கும் விதமாக 36°கோணத்தில் பெண்கள் குரல் எதிரொலிக்காத வண்ணம் ஹால் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும்.உறக்கத்திற்கு ஏற்ற அமைதியான மனச்சூழலை தரும் சந்தனம், செம்மரம், கடுக்காய், வாகை எனும் 5 வகையான மூலிகையை பயன்படுத்தி கட்டிலும், ராணிகள் பயன்படுத்தும் பன்னீர், கழுதைப்பால்,ரோஜாப்பூ மற்றும் தண்ணீர் ஆகியவை சேர்த்து நீராடும் குளியல் தொட்டியும் பழங்கால அமைப்பிலேயே அமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி அத்தானை மண்டபம்,கன்னி மாடம் மற்றும் நகைகள் பணம் பாதுகாப்பிற்கென சுரங்க அமைப்புகளையும் இப்பிரம்மாண்ட வீடு கொண்டுள்ளது. இக்கட்டிடத்தை கட்டி முடிக்க ஒன்றரை வருடங்கள் தேவைப்பட்டது என்றும், தமது மனைவின் ஆசைக்காக மட்டுமே இந்த வீட்டை தான் கட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பழங்கால கலாச்சாரமும் கலையும் தற்போதயை நவீன யுகத்தில் மறைந்து வரும் சூழலில் பண்டைய அரசர்களின் வாழ்ந்த விதத்தையும் பயன்படுத்திய பொருட்களின் அமைப்பையும் எடுத்துக்காட்டும் கட்டிக்கலைக்கு இக்கட்டிடம் ஒரு உதாரணமாக திகழ்கின்றது.

0 Comments

Write A Comment