Tamil Sanjikai

நான் முதல்வகுப்பு வெள்ளமடம் தொடக்கப்பள்ளியில் படித்தேன். என் அப்பாவின் வேலைநிமித்தம், நாங்கள் வெள்ளமடம் கிராமத்தில் தங்கியிருந்தோம். அது மிகவும் அழகான குக்கிராமம். அந்த தொடக்கப்பள்ளி ஓட்டுக்கூரை கட்டிடம் தான். இன்று அது உயர்நிலைப்பள்ளியாக மாறியிருக்கிறது. அன்று அதை ஒட்டி வீடுகளோ கடைகளோ கிடையாது. அதன் முன்னால், சாலைக்கு அப்புறம் பரந்த வயல்வெளி. சாலையை ஒட்டி ஒரு நீர்க்கேணி இருந்தது. கோடைகாலத்தில் ஆற்றில் தண்ணீர் வற்றினால் (குளியல், குடிநீர் எடுப்பது எல்லாம் ஆற்றில் தான்), ஆற்றுமணலைத்தோண்டி வரும் தண்ணீர் அவ்வளவு சுத்தமில்லாமலிருந்தால் கிராமமக்கள் இந்த கேணியில் தான் தண்ணீர் எடுப்பர்.

வெள்ளமடம் தொடக்கப்பள்ளி, இராமஜெயம்

சாலையில் அவ்வளவு வாகனப்போக்குவரத்து கிடையாது. மாட்டு வண்டிகள் தான் அடிக்கடி போகும். எப்போவாவது ஒரு லாரியோ, பேருந்தோ போகும். ஆகவே, இன்டெர்வல் நேரத்தில் எல்லா மாணவர்களும் அந்த கேணியைச்சுற்றி தும்பிகளையோ, வண்ணத்துப்பூச்சிகளையோ பிடித்து விளையாடிக்கொண்டிருப்பர். இயற்கைச்சூழலில் அந்த வாழ்க்கை எனக்கு Alice in Wonderland-ல் இருப்பது போன்ற உணர்வை கொடுத்தது.

அக்காலத்தில் நாகர்கோவிலிருந்து, ஆரல்வாய்மொழிக்கு ஸ்ரீகணபதி பஸ் சர்வீஸ் இருந்தது. அந்த ரூட்டில் ஓர் அய்யர் ஓட்டுநராக இருந்தார். அவருக்கு நல்ல தேஜஸ்ஸான முகம். பஞ்சு போன்ற வெள்ளை தாடி, குடுமியுடன் வெள்ளை சட்டையணிந்து இருப்பார் --ரவீந்தரநாத் தாகூர் போன்ற தோற்றம். அவர் உருவம் என் மனத்திரையில் இப்போதும் அப்படியே இருக்கிறது.

வெள்ளமடம் தொடக்கப்பள்ளி, இராமஜெயம்

வகுப்பு இடைவெளி நேரத்தின்போது அந்த பேருந்து அங்கே வரும்போது, நாங்கள் பேருந்ததைப்பார்த்து குஷியில் ஆரவாரம் செய்வதுண்டு. எங்களைப்பார்த்ததும் அவர் பேருந்தை சாலையோரத்தில் நிறுத்தி "இராமஜெயம்" என்று உரக்கச்சொல்வார். நாங்களும் பதிலுக்கு "இராமஜெயம்" என்று உரக்க கூவுவதுண்டு. இது தினமும் நடக்கும் சம்பவம்.

என்னுடன் படிக்கும் மாணவன் ஆறுமுகம் (அவன் அப்பா இரும்பு பட்டறை வைத்திருந்தார்) தான் என் உற்ற நண்பன். அவன் வீடு என் வீ ட்டுக்கருகில் இருந்ததால் பள்ளி முடிந்ததும் அவன் கூடத்தான் விளையாடுவேன். அங்கே பாலத்தை அடுத்து ஒரு சுடலைமாடசாமி கோவில் இருந்தது. மாலை நேரத்தில் அங்கே பூஜை நடக்கும் போது கோவில் மணி ஓசை கேட்கும். அப்போது நானும் ஆறுமுகமும் அங்கே போய் கிடைக்கும் சுண்டல், பழம் போன்றவற்றை வாங்கி வருவதுண்டு.

வெள்ளமடம் தொடக்கப்பள்ளி, இராமஜெயம்அடுத்த வருடம் நாங்கள் மீண்டும் நாகர்கோவிலுக்கு குடிமாறினோம்.

இரண்டாம் வகுப்பு, மணிமேடை சந்திப்பின் கீழ் இருந்த Town LPS ல் படிக்க நேர்ந்தது. அப்போது நாகராஜா திடலுக்குப்பக்கத்தில் வீடு. என் பழைய பதிவுகளில் குறிப்பிட்டதைப்போல் நாகராஜா கோவிலில் வளாகத்தில் மாலை நேரங்களில் நண்பர்களுடன் விளையாடுவதுண்டு. பிறகு காலேஜ் ரோட்டில் சார்லஸ் மில்லர் தெருவில் குடிமாறினோம். அப்போது, பக்கத்திலுள்ள கல்கோவிலின் முற்றத்தில் நண்பர்களுடன் விளையாடுவது சகஜமாக இருந்தது. என் பாட்டியின் வீடு தக்கலை பீர்முகம்மது அவுலியா பள்ளியின் எதிரில் இருந்தது. பாட்டிவீட்டுக்குப்போகும்போது அந்த பள்ளியின் வளாகத்தில் உறவினர் சிறுவர்களுடன் விளையாடுவது வழக்கம்.

வெள்ளமடம் தொடக்கப்பள்ளி, இராமஜெயம்

நான் மற்ற மத சிறுவர்களுடன் அவர்கள் வழிபாட்டுத்தலங்களில் விளையாடுவதை என் பெற்றோர் ஒருபோதும் தடுத்ததில்லை. அது என் எண்ணங்களை, மற்றவர்களுடன் நல்லிணக்கத்துடன் பழகும் முறையை, அனுசரித்துப்போகும் பண்பை வடிவமைத்துக்கொடுத்தது. அது என் பாக்கியம் என்றே கூறலாம். எல்லா பெற்றோர்களும் இப்படியிருந்தால் ஊரும் நாடும் சொர்க்கம் தான்.

0 Comments

Write A Comment