Tamil Sanjikai

இந்தியா -பாகிஸ்தான் இராணுவத்தினரின் மாலைநேர தேசிய கொடியிறக்குச் சடங்கு நடைபெறும் இடம் தான் வாகா. இதுதான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையேயான ஒரே சாலை வழி எல்லையாகும். இது பெரும்தலை நெடுஞ்சாலையில் இந்திய பஞ்சாபின் அமிர்தசரஸிற்கும் பாகிஸ்தான் பஞ்சாபின் லாகூர் நகரத்திற்கும் இடையே அமைந்துள்ளது.அமிர்தசரசிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும் லாகூரிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இது பாகிஸ்தானில் "வாகஹ்" என்று அழைக்கப்படுகிறது. இந்தியப் பிரிவினையின்போது இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கப் போடப்பட்ட சர்ச்சைக்குரிய
ராட்கிளிஃப் கோடு செல்கின்ற சிறிய ஊர் தான் வாகா. 1947-ம் ஆண்டு இந்த வாகா இரண்டாகப் பிரிக்கப்பட்டது. தற்போது கிழக்குப் பகுதியிலுள்ள வாகா கிராமம் இந்தியாவிலும், மேற்கு வாகா கிராமம் பாகிஸ்தானிலும் உள்ளது. தினமும் மாலை 5 மணிக்கு நடைபெறும் விரிவான வாகா எல்லைச் சிறப்பு நிகழ்வுக்கு புகழ் பெற்றது.

இந்த வாகா வாசற்பகுதியின் இரண்டு பக்கத்திலும் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்குரிய அலுவலக கட்டிடங்கள், சோதனைச்சாவடிகள், தடுப்பு அமைப்புகள் போன்றவற்றைகள் அமைந்துள்ளன. "ஸ்வர்ணஜயந்தி" என்று அழைக்கப்படும் இந்த எல்லை வாசலைச்சுற்றிலும் பசுமையான அழகான சூழல் காணப்படுகிறது. ஒவ்வொரு நாளும் சடங்கு நிகழ்ச்சி போன்று இந்த எல்லை வாயிலில் நடத்தப்படும் ராணுவ காவல் அணிவகுப்பை காண்பதற்காகவே பயணிகளும் உள்ளூர் மக்களும் இந்த வாகாவிற்கு ஆர்வத்துடன் வந்து செல்கிறார்கள். அதாவது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தினமும் மாலையில் முரசு மற்றும் ஷாக்ஸ் போன்ற மியூசிக் பின்னணி இசையுடன் அணிவகுப்பு நிகழ்ச்சியை அரை மணி நேரத்துக்கு நடத்துகிறார்கள். பார்வையாளர்களின் உற்சாக கரவொலி மற்றும் மியூசிக் ஒலிகளோடு உணர்ச்சிகரமான வியத்தகு காட்சியாக இந்த அணிவகுப்பு நிகழ்வு தினமும் இரு நாட்டு ராணுவ வீர்களால் நடந்துக் கொண்டிருக்கிறது.

இந்த காட்சியை ஒரு முறை நேரில் பார்க்கும் இரு நாட்டு குடிமக்களுக்கும் பரஸ்பர பகையுணர்வு மனதில் தோன்றவே தோன்றாது என வாகா சென்றவர்கள் சொல்கிறார்கள். பிறகு எப்படி வருகிறது இந்த எல்லைப்பகை என்பது ஆச்சரியம் தான். அமிர்தசரஸ் பொற்கோவில் நகரத்துக்கு வரும்போதும் சுற்றுலா பயணிகள் தவறாமல் போகும் இடம் இந்த வாகா எல்லை ராணுவ அணிவகுப்பு தான். முந்தைய பாரதீய ஜனதாவின் ஆட்சியின் போது வாஜ்பாய் பிரதமராக இருந்தார். அவர் வெளியுறவுத் துறையில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு பல புதிய முயற்சிகளை செய்தார். அப்போது வாஜ்பாய் எலியும்– பூனையுமாய் இருந்த பாகிஸ்தானுடன் நல்லுறவுகள் வளர, வாகா எல்லை முதல் லாகூர் வரை பஸ் சர்வீசை அறிமுகப்படுத்தி புதிய அணுகுமுறையை கடைப்பிடித்தார். ஆனால் பாகிஸ்தானில் உள்ள மதவாதிகள் நல்லுறவுகளை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டாமல் அதை தடுக்க முட்டுக்கட்டைகளை தான் போட்டனர்.

இந்தியா- பாகிஸ்தான் எல்லையான வாகாவில் இருதரப்பு ராணுவ வீரர்களும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருப்பார்கள். தினம் மாலையில் இரு நாட்டு தேசியக்கொடிகளும் இறக்கப்படும்போது அதை ஒரு சடங்காக நடத்துவார்கள். அப்போது ஆக்ரோஷ அணிவகுப்பு நடத்தப்படுவது வழக்கம். ராணுவ வீரர்கள் தங்கள் கால்களை இடுப்பு உயரத்துக்கும் மேலே தூக்கி பூட்ஸ்' கால்களை தரையில் சத்தமிட்டபடி அடிப்பதும், இரு தரப்பினரும் ஒருவர் கண்களை பார்த்து மற்றவர் முறைத்து பார்த்தபடி உடலை இறுக்கமாக வைத்துக்கொண்டு கைகுலுக்குவதும் வழக்கம். இந்த வழக்கம் கடந்த 1960-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்திய எல்லை பாதுகாப்பு படை டைரக்டர் ஜெனரல் ராமன் ஸ்ரீவஸ்தவா சில ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தான் சென்றிருந்தார். அப்போது அவர் பாகிஸ்தான் ராணுவ தளபதிகளை சந்தித்து பேசும் போது வாகா எல்லையில் நிகழும் ஆக்ரோஷ அணிவகுப்பை ரத்து செய்யலாம் என்று இந்தியா சார்பில் ராமன் ஸ்ரீவஸ்தவா எடுத்துக் கூறினார். இதற்கு பாகிஸ்தான் தளபதிகளும் சம்மதித்தார்கள். இந்த முடிவு கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ம் தேதி லாகூரில் எடுக்கப்பட்டது.

ஆனால் வாகா எல்லையில் ஆக்ரோஷ அணிவகுப்பை ரத்து செய்ய பாகிஸ்தான் மறுத்து விட்டது. இதுபற்றி பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் டைரக்டர் ஜெனரல் முகமது யாகூப் அலி கான் வாகா ஆக்ரோஷ அணிவகுப்பு தொடரும் அது போல, இருதரப்பு ராணுவ வீரர்களும் கோபப் பார்வையுடன் ஒருவரை ஒருவர் உற்று நோக்குவது கைவிடப்படுகிறது. கால்களை இடுப்பு உயரத்துக்கு தூக்கி தரையில் சத்தத்துடன் வைக்கும் பழக்கமும் கைவிடப்படுகிறது கூறினார். ஆனால் இப்போதும் அது தொடந்துக் கொண்டு தான் இருக்கிறது. பாகிஸ்தானில் சிவராத்திரி விழாவை கொண்டாட இந்தியாவில் இருந்து இந்துக்கள் வர அனுமதி உண்டு. சிவராத்திரி இந்துக்களின் முக்கிய புனித விழாவாகும். அன்றைக்கு அனைத்து மக்களும் தங்களுடைய குலதெய்வங்களை வழிபடுவது வழக்கம் இதற்காக வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் வசிக்கும் இந்துக்களில் பெரும்பாலானோர் தங்களுடைய குலதெய்வங்களிைன் கோயில் இருக்கும் இடங்களுக்கு சென்று வழிபடுகிறார்கள். பாகிஸ்தானிலும் மிகவும் குறைந்த அளவில் இன்னும் இந்துக்கள் இருக்கிறார்கள். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அருகே சாஹ்வால் மாவட்டத்தில் இந்த கடாஸ் ராஜ் கோயில் இருக்கிறது. சிவராத்திரியையொட்டி இந்த கோயிலில் நடக்கும் வழிபாட்டில் கலந்துகொள்வதற்காக வாகா எல்லை வழியாக இந்தியாவில் இருந்து இந்துக்கள் செல்கிறார்கள். இதற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி உண்டு.

பாகிஸ்தான் செல்லும் பக்தர்களை வாகா எல்லையில் கடாஸ் ராஜ் கோயில் அறக்கட்டளை வாரிய நிர்வாகிகள் வரவேற்பார்கள். இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் இந்துக்கள் வழிபாடு செய்துவிட்டு பத்திரமாக நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை வாரிய நிர்வாகிகள்தான் செய்திருக்கிறார்கள். சாஹ்வால் நகரில் அவர்கள் இரண்டு நாட்கள் தங்கி அவர்கள் வழிபாடு செய்வார்கள்.இந்திய இந்துக்கள் பத்திரமாக திரும்ப அவர்களுக்கு குண்டுதுளைக்காதபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். கடாஸ் ராஜ் வழிபாட்டிற்கு பின்னர் பக்தர்கள் லாகூர் வருகிறார்கள். அங்கு கிருஷ்ணர் கோயிலில் வழிபாடு நடத்துகிறார்கள். அதன்பின் வாகா எல்லை வழியாக இந்தியா திரும்புகிறார்கள்.

ஒரு முறை பாகிஸ்தானைச் சேர்ந்த உயர் நிலைப் பாதுகாப்பு அதிகாரிகள் 16 பேர் இந்தியாவில் வாகா எல்லை வழியாக 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அவர்கள் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் எல்லைப் பாதுகாப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிப்பது இப்பேச்சுவார்த்தையின் நோக்கம். எல்லையில் இரு நாடுகளின் ராணுவம் நடத்தும் துப்பாக்கிச் சண்டையில் அப்பாவி மக்கள் உயிர் இழப்பதைத் தடுக்கும் வகையிலும், போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தை, ஆண்டுக்கு இரு முறை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் முறையே நடைபெறும் என்றும் சொல்லியிருந்தார்கள். இப்படி எப்போதும் ராணுவ கிடுக்குப்பிடியோடு இருக்கும் வாகா எல்லைக்கு செல்வதற்கு.அமிர்தசரஸில் இருந்து ஆட்டோவிலும், காரிலுல் 28 கிலோமீட்டர் பயணித்தால் வாகா எல்லை வந்துவிடும். அங்கு 4.30 மணிக்கு தான் அனுமதி அளிப்பார்கள். வெளியே மூவர்ணத்தில் ஒருவர் ஐஸ் செய்துவிற்றுக் கொண்டிருப்பார்.

சில சிறுவர்கள் மூவர்ணக்கொடிகளையும், மூவர்ணத்தில் செய்த தொப்பிகளும் கூவி விற்பார்கள். வாகாவில் நடக்கும் முழு அணிவகுப்பு நிகழ்ச்சிகளின் வீடியோ சி.டி 30 ரூபாய்க்கு கிடைக்கிறது. அந்த சி.டி.யில் அமிர்தசரஸின் முக்கியமான இடங்கள் பொற்கோயில் ஜாலியான் வாலாபாக் உட்பட பல இடங்களை காட்டுகிறார்கள். அதனை சுற்றுலா பயணிகளும் ஆர்வத்தோடு வாங்கிச் செலகின்றனர். வெளி வாசல்லிருந்து உள்ளே செல்ல ஒரு கிலோ மீட்டர் நடக்கவேண்டும். இல்லையென்றால் ரிக்க்ஷாவில் செல்லலாம். சில வண்டிகள் மட்டும் அனுமதி பெற்று உள்ளே செல்லலாம். கோயில் திருவிழாவுக்குத்தான் வந்து விட்டோமோ என நினைக்கு அளவுக்கு அங்கங்கே தள்ளு வண்டி கடைகள்.அவித்த கடலை,கிழங்கு,பாப்கார்ன் ஐஸ்கிரீம் வண்டிகள் ஒருபுறம் , போட்டி போட்டுக் கொண்டு சிடியும், போட்டோவும் விற்கும் சிறுவர் கூட்டம் இன்னொருபுறம். ஆண்களும் பெண்களுமாக ஜே ஜே வெனப் போய்க் கொண்டிருப்பார்கள்.

இந்திய கேட்டில் நமது தேசியக் கொடியும் ஆங்கிலத்தில் இந்தியா என்றும் இந்தியில் பாரத் என்றும் எழுதப் பட்டிருக்கும்.கேட்டை ஒட்டிய தூணில் இந்திய சின்னமான சிங்கமுகம். மேலே ஒரு புறம் இந்திய தேசியக் கொடி.மறுபுறம் பாகிஸ்தான் கொடி பறந்து கொண்டிருக்கும். வழியில் எலக்டிரிக் கம்பி வேலிகள் இரு நாட்டுக்கும் நடுவே செல்வதைக் காணலாம். குதிரைமீது அமர்ந்திருந்து எல்லை பாதுகாப்பு வீரர்கள் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். ஸ்வர்ண ஜெயந்தி வாசலின் முன் இரு கைகள் குலுக்குவதைப் போன்ற சிற்பம் இருக்கும். அங்கு எப்போதுமே இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க கூட்டம் அதிகமாகவும் பாகிஸ்தானில் குறைவாகவும் தான் வருவதாக நமக்கு தோன்றும்.வாகா அருகில் அமிர்தசரஸ் இருப்பதால் இந்திய சுற்றுலா பயணிகள் வருகை அதிக காரணம். நேரடியான பாட்டு நிகழ்ச்சியும் நடக்கும். தேசிய கொடி இறக்கும் காட்சியை ஆரம்பிக்கும் முன் வர்ணனைகளூடான பாடல்கள் மெய்சிலிர்க்க வைக்கும். அப்போது நம் மக்களின் ஆரவாரம் அதிகமாகும். அவரவர் இடத்தில் இருந்து பார்த்தால் கேலரியில் நன்றாகவே தெரியும். ஆனாலும் எழுந்து எழுந்து நின்று கைகளை அசைத்து ஆர்ப்பரிப்பது உணர்ச்சிமிக்க செயலாக இருக்கும். ஜவான்கள் முறை மாற்றி பொறுப்பு எடுத்துக்கொள்வதும் கொடிகளை இரு நாட்டு வீரர்களும் இறக்கி மரியாதையோடு ஒருவருக்கொருவர் சல்யூட் அடித்து கதைவை மூடிக்கொண்டு வருவதையும் தான் பார்த்து மக்கள் உற்சாக சப்தமிடுவர்கள். ராணுவ வீரர்கள் கால்களை அடித்து அடித்து நடை போடும் அவர்களின் வேகம் அசாத்தியமானது.

மக்களை நம் நாட்டின் பெயர் சொல்லி ஜிந்தாபாத் என்று வாழ்த்து மட்டும் சொல்லும்படி மைக்கில் கேட்டுக் கொள்வார்கள். இல்லையென்றால் உணர்ச்சிப் பெருக்கில் நம்மக்கள் பாகிஸ்தான் முராதாபாத் என்று ஒழிக கோசமும் போட்டு விடுவார்களாம். பாடல்கள் சமயத்தில் கட்டுப்படுத்தமுடியாமல் நம் மக்கள் இறங்கி காவலர்களின் அனுமதியோடு பாதை நடுவிலும் ஆடுவார்கள். பாகிஸ்தானியர் கூட்டம் வாகாவில் குறைவாக வரும். அப்படி வரும் ஒரு சிலர் கொஞ்சம் அதீதமாய் செய்வார்கள். பர்தா அணிந்த பெண்களும் அமர்ந்து கொண்டு 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷமிடுவார்கள். நிகழ்வின் உச்சக் கட்டத்தில் ஒரே சமயத்தில் இரண்டு கதவுகளும் படாரெனத் திறக்கப் பட்டும். ராணுவ வீரர்கள் மாறி மாறி கை குலுக்கிக் கொள்வார்கள். அடுத்தடுத்து ராணுவ வீரர்கள் கேட்டை நோக்கிப் போவதும் வருவதுமாக இருப்பார்கள். இரண்டு இரண்டு வீரர்களாகவும் சிலசமயம் நாலு வீரர்களாகவும் இராணுவ நடை நடந்து கேட் அருகில் வந்து காலைத் தூக்கி துக்கி உதைப்பதும் திரும்புவதுமாக இருப்பார்கள். காலைத் தூக்கி என்றால் கிட்டத்தட்ட நெஞ்சுவரை முழங்காலைத் தூக்கி அடிக்கின்றனர். அடுத்து பாகிஸ்தான் பக்கமும் இதுபோல நிகழ்ந்துக் கொண்டிருக்கும்.

இறுதியாக இந்திய ராணுவ வீரர் நம் கொடியையும் பாகிஸ்தான் ராணுவ வீரர் பாகிஸ்தான் கொடியையும் மெதுவாக இறக்கிக் கொண்டு வர இந்தியவீரர்கள் அதை இரு கைகளிலும் ஏந்தி ராணுவ மரியாதையோடு கொண்டு செல்வார்கள். சிறிது நேரத்தில் மீண்டும் வாகா கதவுகள் மூடப்பட்டுகின்றன. அன்றைய நிகழ்வில் பங்கு பெற்ற இந்திய வீரர்களுக்கு மற்ற வீரர்கள் கை கொடுத்து வாழ்த்துகின்றனர். 2012-ம் ஆண்டுக்கு முன்பு வரை வாகா நிகழ்வு நடக்கும் போது பாகிஸ்தானைச் சேர்ந்த மெர் தின் என்பவர் முழுவதும் பாகிஸ்தான் கொடி போன்ற ஆடையுடுத்தி பெரிய கொடியை அசைத்தபடியே இருப்பார். தினந்தோறும் மூடுவிழாவின் போது கொடியசைத்து அங்குள்ளவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துவார். இதற்காக அவருக்கு மாதம் 14000 ரூபாய் அங்குள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் வழங்கிவந்தனர். வாகா எல்லையில் பிரபலமான இவரை அங்கிள் பாகிஸ்தான் என்று அனைவரும் கூப்பிடுவார்கள் . காய்கறி வியாபாரம் செய்து பிழைத்து வந்த 90 வயதான அவர் 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இறந்து விட்டார்.சிறந்த நாட்டுபற்றாளனாக சித்திரிக்கப்பட்ட அவரின் இறப்புக்கு எல்லையில் உள்ள காவலர்கள் மரியாதையும் செலுத்தியுள்ளனர்.

பொதுவாக பண்டிகை தினத்தில் வாகா சோதனைச் சாவடியில் இந்திய ராணுவ வீரர்களும், பாகிஸ்தான் படையினரும் பரஸ்பரம் இனிப்புகளை பரிமாறிக் கொள்வது வழக்கம். ஆனால், ஒரு முறை பக்ரீத் பண்டிகையின் போது எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்கள் தொடர்ந்த வண்ணமாக இருந்துள்ளது. பக்ரீத் பண்டிகையையொட்டி, இனிப்புகளை பரிமாறிக் கொள்வதற்கான நேரத்தை நிர்ணயிப்பதற்கும் பாகிஸ்தான் தரப்பு மறுத்துள்ளது எனவே அப்போது இனிப்புகளை வழங்கும் பாரம்பரிய நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. வாகா எல்லைப் பகுதியில் எப்போதும் ரம்ஜான், தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் களைக்கட்டும் இந்தியா- பாகிஸ்தான் வீரர்கள் சுவீட்களை பரிமாறி உற்சாகமாக ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து சந்தோஷமாக கொண்டாடுவார்கள்.தொடர்ந்து மோதல் இருந்தால் வாகா எல்கை பண்டிகையை மறந்து பதற்றமாவே இருக்கும். 2014-ம் ஆண்டு ஜனவரியில் வாகா எல்லைப்பகுதியை வர்த்தகத்திற்காக முழுநேரமும் திறந்து வைத்திருக்க இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் ஒப்புக்கொண்டது.

இதுதொடர்பாக டெல்லியில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மாவும், பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் குர்ராம் தஸ்தகீர் கானும் கலந்துகொண்டனர். இதில், இரு நாடுகளுக்கும் இடையே ஆண்டு முழுவதும் வர்த்தகம் நடத்த அனுமதிப்பது குறித்து விவாதிக்கப் பட்டது. மிகவும் நட்பு நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவுக்கு வழங்குமாறு பேச்சு வார்த்தையின்போது ஆனந்த் சர்மா வலியுறுத்தியதாகவும் அதனை பாகிஸ்தான் தரப் பில் ஏற்க மறுத்ததாகவும் கூறப்பட்டது. 2014- ம் ஆண்டு நவம்பரில் வாகா எல்லைப்பகுதியின் பாகிஸ்தான் புறத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் ஒன்றால் 60 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். 110 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். மாலையில் வாகா எல்லைச் சடங்கு முடிந்த பின்னர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. பாகிஸ்தானின் ஜுன்டால்லா என்ற தடைசெய்யப்பட்ட அமைப்பு இந்த தற்கொலைத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டது. இதே அமைப்பு நடத்திய செப்டம்பர் தாக்குதலில் பெஷாவர் நகரில் உள்ள கிறித்தவ தேவாலயத்தில் 78 கிறித்தவர்கள் இறந்து போனார்கள்.

2016-ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் சிறையிலிருந்து இந்திய மீனவர்கள் 86 பேர் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் வாகா எல்லையில் இந்திய ராணுவத்திடம்
பாகிஸ்தான் கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக, இந்திய மீனவர்களை பாகிஸ்தான் நாட்டு கடலோரக் காவல்படையினர் கைது செய்து கராச்சியின் லாந்தி சிறையில் அடைத்திருந்தனர். அவ்வப்போது நல்லெண்ண அடிப்படையில் இருநாட்டு சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலை செய்யபட்டனர். கடந்த ஆண்டு ஜனவரியில் பாகிஸ்தான் ராணுவத்தில் இருக்கும் சீக்கியர் அமர்ஜித் சிங் என்பவர் பாகிஸ்தான் சார்பில் இந்த வாகா எல்லை அணிவகுப்பில் பங்கேற்றார். அப்போது, இந்திய வீரர்களுக்கு அமர்ஜித் சிங் கைகுலுக்கியபோது அங்கிருந்தவர்கள் கைதட்டி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பாகிஸ்தான் ராணுவத்தில் பணிபுரியும் சீக்கியர் ஒருவர் இந்த அணிவகுப்பில் பங்கேற்பது அதுவே முதல்முறையாகும்.

பாகிஸ்தானின் லாகூருக்கு அருகே அமர்ஜித் சிங் வசித்து வருகிறார். அவர் 2005-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்தார். வாகா எல்லையில் நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சிக்காக கடந்த ஓராண்டாக பயிற்சி எடுத்து அதன் பின் தான் வாகா அணிவகுப்பில் கலந்துக் கொண்டார். பாகிஸ்தான் ராணுவத்தில் பணிபுரிவதை பெருமையாக கருதும் அமர்ஜித் சிங், நாட்டுக்காக உழைப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பின் பஞ்சாபை சேர்ந்த ஏராளமான சீக்கியர்கள் பாகிஸ்தானில் குடியேறினார்கள். இருந்தாலும் இந்தியர்கள் சீக்கியர் ஒருவரை இங்கு முதல்முறை பார்த்தால் சற்று அதிர்ச்சியும், ஆச்சரியமடைந்தனர். கிட்ட தட்ட ராணுவ முகாமாக, பதற்றமாக இருக்கும் வாகா எல்கைக்கு சென்று வரும் போது தான் ராணுவ வீரர்களின் நாட்டை காக்கும் பற்றும்,பார்ப்பவர்களுக்கு இந்திய தேசீயத்தின் மீதான நன்மதிப்பு, பாசம் அபரிவிதமாக பொங்கும்.தன் வாழ்நாளில் இந்தியாவின் ஒவ்வொரு மகனும் பார்க்க வேண்டிய இடம் வாகா.

0 Comments

Write A Comment