Tamil Sanjikai

அவ்வையார் பிராட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முப்பந்தல், சீதப்பால், குறத்தியறை என மூன்று இடங்களில் வீற்றிருந்து வழிபடப் பாடுகிறார். சீதப்பால் மற்றும் குறத்தியறை ஆகிய ஊர்களில் உள்ள அவ்வையார் கோயில்கள் சமண சமயத்து அவ்வையாரை மூலவராகக் கொண்டவை. அதில் குறத்தியறைக் கோயில் குடவரைக் கோவிலாகும். நாகர்கோவிலிருந்து கடுக்கரை செல்லும் வழியில் அமைந்துள்ள கிராமம் குறத்தியறை. அழகியபாண்டியபுரம் போகும் முன்பு உள்ள கடுக்கரை விலக்கிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் குறத்தியறை ஐந்துகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. மலைச்சரிவில் தெற்குப் பார்வையாக கருவறையில் நின்ற நிலையிலான திருமாலின் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. இருப்பினும் அதற்குச் சிவப்பு பட்டு அணிவித்து அவ்வையாரம்மனாக வழிபடப்படுகிறது. சிற்பத்தின் கையில் சங்கு சக்கரம், வரத, ஊரு ஹஸ்தங்களுடன் கூடிய விஷ்ணுவின் சிற்பமாக உள்ளது. கோவிலுக்கு போகும் பாதைகள் மறைந்து செடிகளும், புற்களும் நிறைந்து காணப்படுகின்றன.

இந்த கோயில் மலையடிவாரத்தில் சுமார் ஆறரை அடி உயரத்தில் நின்றகோலமாக விஷ்ணு சிலை ஒன்று உள்ளது. தற்போது அது வெட்டவெளியில் சுடலைமாடன் பீடத்தோடு அமைத்துக் கிழக்குமுகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுக்கு முன்பு இது கோயில்குகையை ஒட்டியுள்ள பகுதியில் மேற்குமுகமாக அச்சிலை நிறுத்தப்பட்டிருந்ததாம். இச்சிற்பம் மிக நேர்த்தியானது. மேல் வலது கை சக்கரம், இடக்கை சங்கு, முன் வலக்கை, அருள்கை(வரத ஹஸ்தம்), இடக்கை ஊரு ஹஸ்தமாக அமைந்துள்ளது. சக்கரம் பிரயோகச்சக்கரமாக (எய்யப்படும் நிலையில்) நம்மை நோக்கி அமைந்துள்ளது. கிரீடாமகுடம் உடையது. இடத்தோளின் யக்ஞோபவிதம் (பூணூல்) வலது முன்கையின் மீது ஏறிக் கிடக்கிறது. பூணூல் இப்படிஏறிக்கிடந்தால் சிலையின் காலம் எட்டாம் நூற்றாண்டு எனக்கொள்ளலாம். இப்போது மழையும் , வெயிலும் சிலையின் தன்மையையும் அழகையும் சிதைத்துவருகிறது.

இச்சமணக்குடைவறைக்கோயில் 8-ம் நூற்றாண்டில் பிற்காலப்பாண்டியர்களால் விஷ்ணுக்கோயிலாக மாற்றம் செய்யப்பட்டது என்றும், குகைக்குள் உள்ள விஷ்ணுச்சிற்பம் முழுமைப்பெறாதது. கூகைக் கோயிலையும் , வெளியில் நிற்கும் பழங்கால விஷ்ணு சிலையும் பாதுக்காகப் படவேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

0 Comments

Write A Comment