தென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு குஞ்சன் நாடார்!
கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைய தமிழ் மக்கள் நடத்திய தெற்கு எல்லைப் போராட்டத்தின் மிக முக்கியமான போராளி குஞ்சன் நாடார். தமிழர் போராட்டத்தின் முதுகெலும்பு. இவர் வழக்கறிஞர், நெய்யாற்றின்கரை தாலுகா திரிபுரம் என்ற ஊரில் 1911-ம் ஆண்டு பிறந்தவர். தென்குரல் என்ற பத்திரிக்கையை தொடங்கியவர். போராட்டத்தின் போது போலீஸார் இவரது ஆணுறுப்பு வழியாக ரத்தம் போகும் அளவுக்கு அடி கொடுத்துள்ளனர். திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாற்றிலேயே அதிக அடி, உதைகளை வாங்கிய இருவரில் ஒருவர் இந்த குஞ்சன் நாடார். மற்றொருவர் காந்திராமன். குஞ்சன் நாடாரின் பேச்சில் மலையாளம் கலந்திருந்தாலும் 'ஞான் தமிழனானு,ஞான் தமிழனானு' என்று சொல்லித் தமிழ் உணர்வோடு போராடியவர்.
காமராஜர் காரில் போகும் போது வழியில் கண்ட குஞ்சன் நாடாரிடம் பேசியதாக வரலாறு உண்டு. ம.பொ.சி.யின்.நண்பர். 1952 ஆம் ஆண்டு பாறசாலை சட்டமன்ற தொகுதியிலிருந்து சுயேட்சையாக வெற்றி பெற்றவர். 1954-ம் ஆண்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.தா.நா.கா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அக்கட்சியின் செயலாளராகவும் பணியாற்றியவர். 1954-ம் ஆண்டில் நேசமணி மூணார் சிறையில் இருக்கும் போது மார்த்தாண்டம், மற்றும் புதுக்கடையில் திருவிதாங்கூர் அரசுக்கு எதிராக ஊர்வலம் நடத்தியவர். அப்போது பட்டம் தாணுபிள்ளை அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் மரணமடைந்தனர். ஊர்வலத்தை தலைமை தாங்கியதற்காக குஞ்சன்நாடாருக்கு 8 மாதம் சிறைதண்டனை அளிக்கப்பட்டது.1962-ம் ஆண்டு சென்னை சட்டசபைக்கு பத்மநாபபுரம் தொகுதியிலிருந்து சுயேட்சையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இவருக்கும் தற்போதைய அரசியல் சூழல் போல சீட் கொடுக்க தி.த.நா.கா. வின் முக்கிய தலைவர்கள் மறுக்கவே சுயேச்சையாக போட்டியிட்டவர். பழவங்காடி மைதானத்தில் அப்போதைய திருவிதாங்கூர் - கொச்சி முதலமைச்சர் பட்டம் தாணுபிள்ளை பேசிய பேச்சு பற்றி குஞ்சன் நாடார் இப்படி கூறினார்.'ஒரு முதல்வர் மலையாளிகளைத் தமிழர்கள் மீது ஏவி விடும் போக்கில் பழவங்காடியில் பேசியிருப்பது வருந்தத்தக்கது. இப்போது ஒன்றை நான் கூறியாக வேண்டியுள்ளது. தென்திருவிதாங்கூரில் உள்ள மலையாளிகள் யாராவது ஒருவர் தமிழர்களால் துன்பப் படுத்தப்பட்டிருப்பரா?. அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை பட்டம் சுட்டிக் காட்ட முடியுமா?. அவருடைய எண்ணத்திற்கு மாறாக தமிழர்களும், மலையாளிகளும் சகோதரர்களாக நிம்மதியாக இருக்கின்றனர். தமிழர்களின் கோரிக்கையில் நியாயம் உள்ளது என்று இன்று மலையாள சகோதரர்கள் கூறுவதை பட்டம் இதுவரை கேட்காதிருந்தால் இனியாவது கேட்டு உள்ள நிலைமையை தெரிந்து கொள்வார் என்று நம்புகின்றேன்' என்றார். (இதற்கு ஆதாரம். ஆகஸ்ட் 8, 1954 தினமலர் செய்தி).
குஞ்சன் நாடார் சிறையில் இருக்கும் போது 'நாஞ்சில் நாட்டை கேரளத்துடன் இணைத்தே வைக்க சதி நடக்கிறது. உடனடியாக மக்கள் விழித்தெழ வேண்டும் 'என்று சொன்னார். இது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது.
அடி,உதை வாங்கிய குஞ்சன் நாடாருக்கு அரசு மரியாதை கிடையாது. மணிமண்டபம் கிடையாது. இவர் இல்லாமல் திருவிதாங்கூர் போராட்ட வரலாறும் கிடையாது. குஞ்சன் நாடார் சிலை நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் அவரது உறவினர்களால் நிறுவப்பட்டுள்ளது. உண்மையான தியாகி குஞ்சன்நாடாருக்கு நாமும் மரியாதை செய்வோம்.
0 Comments