Tamil Sanjikai

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் எனும் ஊரில் அமைந்துள்ள தாணுமாலயன் கோயில் புகழ் பெற்ற தலமாகும் . இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ளது இதன் சிறப்பு ஆகும். சைவமும், வைணவமும் இணைந்து காணப்படும் இடம் சுசீந்திரம். ‘சுசீ’ என்றால் ‘தூய்மை’ என்று பொருள். இந்திரன் இங்கு தூய்மை பெற்றதால் சுசியம், இந்திரனும் இணைந்து சுசீந்திரம் என அழைக்கப்படலாயிற்று. திருமணமான புதுமணத்தம்பதிகள் இங்கு வந்து வழிபடுவது கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கம்.

தல வரலாறு:
அத்திரி முனிவரும் அவருடைய மனைவி அனுசுயாவும் ஞானாரண்யம் எனும் பழம்பெயர்பெற்ற சுசீந்திரத்தில் தவம் செய்தனர். இந்நிலையில், அத்திரி முனிவர் இமயமலை சென்றார். சிவபெருமான், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் அனுசுயாவின் கற்பை சோதிக்க எண்ணி பிராமணர் வேடம் அணிந்து, அவருடைய ஆசிரமத்திற்கு வந்து உணவு தருமாறு வேண்டினர். அனுசுயாவும் உணவு படைக்கத் தொடங்கினார். அப்போது மூவரும், ஆடை அணிந்த ஒருவரால் உணவு பரிமாறப்படுமாயின் உணவு உண்ணல் ஆகாது” என்று கூறினர். இதைக் கேட்டு திடுக்கிட்ட அனுசுயாதேவி, தன் கணவரின் திருவடி கழுவிய நீரை அந்த மூவர் மீதும் தெளித்தார். அவர்கள் மூவரும் பச்சிளங்குழந்தைகளாக மாறினர். பின்பு அந்தப் பச்சிளங்குழந்தைகளுக்கு உணவூட்டி, தொட்டிலிட்டு, தாலாட்டித் தூங்கச் செய்தாள். தங்கள் கணவர்கள் பச்சிளங்குழந்தையாக மாற்றப்பட்டதை அறிந்த மூவரின் தேவியரும் அங்கு வந்து அனுசுயாவிடம், தங்கள் கணவர்களை பழைய உருவிற்கு மாற்றித் தர வேண்டினர். தேவியர்கள் வேண்டுகோளுக்கிணங்கிய அனுசுயா முப்பெரும் கடவுளுக்கும் பழைய உருவைக் கொடுத்தாள். அப்போது திரும்பி வந்த அத்திரி முனிவரும், அனுசுயாவும் இங்குள்ள தல விருட்சமான கொன்றை மரத்தினடியில் நின்று வேண்டவே மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்தனர். இந்நிகழ்ச்சியை நினைவூட்டவே சுசீந்திரம் கோவில் கட்டப்பட்டுள்ளது என்கிறது இதன் தல வரலாறு. சிவன் (தாணு), விஷ்ணு (மால்), பிரம்மா (அயன்) ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒரு முகமாய் எழுந்தருளின காரணத்தால் இத்தல மூர்த்தி தாணுமாலயன் என அழைக்கப்படுகிறார்.

கலை வேலைப்பாடுகள்:
சுசீந்திரம் ஆலயம் திராவிட கட்டிடக் கலையின்படி அமைந்த கோவிலாகும். இதன் கோபுரம் 7 அடுக்குகளை உடையது. 134 அடி 18 அடி உயரமுடைய அனுமன் சிலை மற்றும் 13 அடி உயரமுள்ள நந்தி சிலை இங்கு அமைந்துள்ளது. கணபதியைப் பெண்ணுருவில் செதுக்கியுள்ள சிற்பம் இங்கு உள்ளது. இதை “விக்கினேசுவரி” என அழைக்கிறார்கள். நவக்கிரகங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. இந்த நவக்கிரகங்களின் சிற்பங்கள் ஆலயத்தின் மேற்கூரையில் வரையப் பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் அனைத்தும் சுமார் 115 வகையான மூலிகைச் சாறினைக் கொண்டு வரையப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தில் கலைநயத்துடனான சிற்பங்களுடன் கூடிய செண்பகராமன் மண்டபம், இசைத்தூண்கள் கொண்ட குலசேகர மண்டபம், திருக்கல்யாணம் நடக்கும் ஊஞ்சல் மண்டபம்,வேனிற்காலத்தில் மும்மூர்த்திகள் ஓய்வெடுக்கும் வசந்த மண்டபம்,பல இறையுருக்களின் சிற்பங்களைக்கொண்ட சித்திர சபை ஆகியவை அமைந்துள்ளன.

சுசீந்திரம் ஆலயத்தில் சித்திரை மாதத் தெப்பத்திருவிழா ஏப்ரல் மாதத்தில் துவங்கி பத்து நாட்களும் , ஆவணித் திருவிழா ஆகஸ்ட் மாதம் துவங்கி பத்து நாட்களும், மார்கழித் திருவாதிரைத் திருவிழா டிசம்பர் துவங்கி பத்து நாட்களும் மாசி திருக்கல்யாண திருவிழா மார்ச் துவங்கி பத்து நாட்களும் வெகு விமரிசையாக நடைபெறும்.

இங்கு அதிகாலை 4.30 கோவில் நடை திறந்து மதியம் 11.30 க்கு அடைத்து, மாலை 5.00 நடை திறந்து மாலை 8.30 அடைப்பார்கள். சுசீந்திரம் ஆலயம் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் இருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் வந்து வந்து தாணுமாலையனை தரிசித்துச் செல்கிறார்கள்.

1 Comments

Write A Comment