Tamil Sanjikai

33 ஆண்டு அரசுப் பணி,33 ஆண்டு படிப்பும்,ஆராய்ச்சி என இருந்தவர் தமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை. நுட்பமான சில ஆராய்ச்சி நூற்களை வெளியிட்டவர் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு. தென் ஆற்காடு பகுதியில் மஞ்சள் குப்பம் கிராமத்தில் வடக்கு பட்டு சுப்பிரமணிய பிள்ளை என்பவர் இருந்தார். சைவத்திருமறைகளை ஓதியவர், நீதிமன்ற எழுத்தர், சிறந்த சிவபக்தர்,அருணகிரிநாதரின் திருப்புகழைத் தேடி எடுத்து பதிப்பித்தவர். மரபு வழி புராணங்களைச் சேகரித்தவர். இவரின் வீட்டில் பழைய தலபுராண ஏடுகளும்,இலக்கிய ஏடுகளும் இருந்துள்ளன. இந்த சுப்பிரமணியபிள்ளையின் மகன் தான் வ.சு.செங்கல்வராய பிள்ளை.1883 -ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி பிறந்தார்.ஆண்டுக்கு ஒரு முறை தந்தைக்கு பணிமாறுதல் கிடைக்கும் போது கும்பகோணம்,நாமக்கல்,மதுரை திருவாரூர் என செங்கல்வராய பிள்ளையின் கல்வி தளமும் மாறிக் கொண்டு இருந்தது. படிப்பில் படு கொட்டியான செங்கல்வராய பிள்ளை மெட்டிரிக்குலேஷன் படிப்பில் முதல் மதிப்பெண் பெற்றதால் ராமநாதபுரம் ராணி பெயரில் உள்ள உதவித் தொகையை பெற்றுருக்கிறார். பி.ஏ. படிப்பில் மாநிலத்தில் முதல் நிலை பெற்றதற்காக Frankilin Gell Gold Medal வாங்கி இருக்கிறார். மதுரை நேடிங் பள்ளியில் F.A படித்த போது சொந்தக் காரர் ஒருவருடைய தூண்டுதலால் சென்னை மில்லர் கல்லூரிக்கு எம்.ஏ. படிக்க சென்றார். அதான் இப்போதைய தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி. தத்துவத்தை 1901-ம் ஆண்டு முடித்தார். அதனை தொடர்ந்து மலையாளமும்,தமிழும் பாடமாக எடுத்து எம்.ஏ. முடித்தார். இவர் எம்.ஏ படித்துக் கொண்டிருந்த போது எழுதிய ஆய்வுக் கட்டுரை History of Tamil prose literature என்கிற பெயரில் 1921-ம் ஆண்டு புத்தகமாக வெளிவந்தது.

சென்னை மில்லர் கல்லூரியில் படிக்கும் போது செங்கல்வராய பிள்ளையின் பேராசிரியர்களாக பரிதிமாற்கலைஞரும், மறைமலையடிகளும் இருந்தனர். கல்லூரி படிக்கும் போது இலக்கண இலக்கியங்களை கற்றுத் தேர்ந்திருக்கிறார்.இவரது படிப்பு எல்லை சைவம் சார்ந்து இருந்தாலும் பழம் இலக்கியங்களையும் படித்திருக்கிறார். எம்.ஏ. முடித்த உடன் பத்திர பதிவு அலுவலகத்தில் உதவியாளராகச் சேர்ந்து கடைசியில் சென்னை மாநில பத்திரப் பதிவுத்துறை துணைக் கண்காணிப்பாளராக இருந்து 1938-ம் ஆண்டு ஒய்வு பெற்றிருக்கிறார். அப்போது அவருக்கு சம்பளம் 600 ருபாய். சென்னைக்கும் ஆந்திராவுக்குமாக பணிக் காரணமாக போனாலும்.அவரோடு புத்தகங்களும் ஏடுகளும் கூடவே சேர்ந்து போய் இருக்கிறது.

பன்னிருத்திருமறைகளையும்,திருப்புகழையும் படித்து குறிப்பு எடுப்பதை வழக்கமாக செய்து வந்திருக்கிறார். இவரின் குடும்ப வாழ்க்கை சோகங்கள் நிறைந்தது.1907-ம் ஆண்டு தனுக்கொடி என்ற பெண்ணை திருமணம் செய்தார்.அந்த பெண் சில ஆண்டுகளில் அகால மரணம் அடைந்தார்.அதன் பின் இரண்டாவது திருமணம் செய்தார்.அந்த பெண்ணும் மரணம் அடைந்தார். தனது 47 வயதில் மூன்றாவது திருமணம் செய்தார்.இவருக்கு நான்கு பிள்ளைகள்.செங்கல்வராய பிள்ளை மொத்தம் 43 புத்தகங்கள் எழுதி இருக்கிறார். தேவாரம் பாடல்கள் தொடர்பாக இவர் எழுதிய ஒளிநெறி புத்தகங்களின் தர அடிப்படையில் பார்த்தால் இவரது கடுமையான உழைப்பு தெரியும்.துதிப்பாடல்கள் அதிகமாக எழுதி இருக்கிறார். திருத்தணிகை பிள்ளைத் தமிழ்,தணிகை முப்பூ இரண்டும் திருத்தணிகை முருகனை பற்றியவை.இவை தவிர சோழிக்கொடி,மந்ஞைப் பாட்டு போன்று 25 தலைப்புகளில் இவரது துதிப்பாடல்கள் வெளி வந்துள்ளன.

கரீணக குல திலக அந்திய பூபான் என்பவர் எழுதிய அந்தர விலாசம் என்கிற நாடகத்தை ஓலைச்சுவடியில் இருந்து பதிப்பித்தார்.அதனோடு விரிவான ஆராய்ச்சி கட்டுரையும் எழுதி இருக்கிறார். அருணகிரி நாதர் வரலாறும் நுலாராய்ச்சியும்,முருகரும் தமிழும்,திருமந்திர ஆராய்ச்சியும் ஒப்புமைப் பகுதியும் ,திருக்கோவையார் உரைநடை ஆகிய நான்கு நூற்களும் செங்கல்வராய பிள்ளையின் திறனாய்வு புத்தகங்கள்.இவரின் தேவார ஒளி நெறிக் கட்டுரைகள் மொத்தம் ஆறு பகுதிகளை கொண்டது. இந்த நூற்களை தேவாரப் பாடல்களின் கலைக் களஞ்சியம் என்று கூறலாம். சில ஆய்வு தலைப்புகளுக்கு புராணக் கதைகளை சுருக்கமாக எழுதிருக்கிறார். இதனை பேராசிரியர் மருததுரை ' பரந்து பட்ட தமிழ் இலக்கிய இலக்கண சாத்திரம் புலமையும் அனுபவ அறிவும் இணைந்த இந்த ஆராய்ச்சிக்கு ஈடு இணை இல்லை என்கிறார்.

செங்கல்வராய பிள்ளையின் ஆய்வு பகுப்பாய்வு நெறிக்கு உட்பட்டது.தேவாரத்தில் மறைந்தும் வெளிப்படையாக காணப்படும் செய்திகளை தொகுத்து தருவது இவரது நோக்கமாக இருந்திருக்கிறது. இவரின் இன்னொரு மிகமுக்கியமான பணி 1325 பாடல்களை கொண்ட அருணகிரி நாதரின் திருப்புகழுக்கு உரை எழுதியது. இந்த உரை மாதம் தோறும் இதழ் வடிவில் வெளி வந்துள்ளது. திருப்புகழ் உரை 30 இதழ்களாக வெளிவந்து பின் 6 தொகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ளது.

செங்கல்வராய பிள்ளை வாழும் போது பல பாரட்டுகளையும், சித்தாந்த கலாநிதி,செந்தமிழ்மாமதி,தணிகை மணி போன்ற பட்டங்களையும்,விருதுகளையும் பெற்றிருக்கிறார். பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இவர் வேலை செய்யும் போது ,இவரின் நேர்மையை பாராட்டி ராவ்சாகிப்,ராவ்பகதூர் ஆகிய பட்டங்களை அரசு கொடுத்துள்ளது. தெ.பொ.மீ யின் பரிந்துரையின் பேரில் 1969-ம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைகழகம் இவருக்கு பி.லிட் பட்டம் அளித்து கௌரவித்தது. 90 வயது வரை வாழ்ந்த்த செங்கல்வராய பிள்ளை கடைசி வரை செயல்பட்டுக் கொண்டு தான் இருந்திருக்கிறார். 1971-ம் ஆண்டு ஆகஸ்ட் 25- ம் தேதி இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் திருவிசைப்பா பற்றி ஆராய்ச்சி நூலை வெளியிட்டிருக்கிறார். வ.சு. செங்கல்வராய பிள்ளை கடைசி வரை படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் தான் இருந்திருக்கிறார்.

-த.ராம்

0 Comments

Write A Comment