Tamil Sanjikai

இந்தியாவில், ஆங்கிலேயரிடம் சுதந்திர உரிமைக்காகப் போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, தாழ்த்தபட்ட மக்களின் உரிமைக்கான போராட்டங்களும் நடந்துகொண்டு இருந்தன .அப்போது பல போராட்டங்கள் வெடித்தன. பல தலைவர்கள் படையெடுத்தார்கள். கோயிலினுள் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையக் கூடாது. அது தீட்டு என்று திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உயர் ஜாதியினர் என்று கருத்தப்பட்டவர்கள் சொன்னார்கள். ஆனால் இந்தியாவில் முதல்முதலில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் செல்ல 1936 - ம் ஆண்டு நவம்பர் 12 - ம் தேதி அனுமதி கொடுத்தது திருவிதாங்கூர் அரசு. 2018 நவம்பர் 12 -ம் தேதியான இன்றோடு அனைவருக்கும் ஆலயப் பிரவேச உரிமை கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது . தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக நடந்த ஆலயப் பிரவேச உரிமை போராட்டத்தின் வரலாறு மிக நீளமானது.

வைக்கம் போராட்டம்:

அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் (இன்றைய கேரளா மற்றும் குமரிமாவட்டம்) கோவிலைச் சுற்றி உள்ள சந்நிதித் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளில், தாழ்த்தப்பட்டவர்கள் , வருவதற்கு மிகக் கடுமையான விதிமுறைகள் நடைமுறையில் இருந்தன. தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டத்தகாதவர் என்னும் கொள்கையுடன் உயர் ஜாதியினர் இருந்தனர். ஆனால் பிராமணர் அல்லாத உயர் ஜாதியினர் என்று அழைக்கப்பட்ட வெள்ளாளர், நாயர், செட்டியார் போன்றவர்கள், கோவில் அர்த்த மண்டபம் மற்றும் கற்ப கிரகத்திற்குப் பின்னால் காணப்படுகிற வராந்தா பகுதிவரை அனுமதிக்கப்பட்டனர்.

1924 - ம் ஆண்டு வைக்கம் சத்தியாகிரகம் டி.கே.மாதவன், ஜார்ஜ் ஜோசப் போன்ற பலரால் ஆரம்பிக்கப்பட்டு, இந்தியா கவனிக்கும் முறையில் நடைபெற்றுக் கொண்டிருத்தது .வைக்கம் கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளில் இந்து மதத்திலுள்ள தாழ்த்தப்பட்டவர்கள் நடமாடக் கூடாது என்றிருந்த கொடுமையை அகற்ற, சத்தியாகிரகப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. ஜார்ஜ் ஜோசப்பின் அழைப்பினை ஏற்று பெரியாரும் வைக்கம் போராட்டத்திற்கு வந்தார்.நாஞ்சில் நாட்டில் டாக்டர். நாயுடுவின் தலைமையில் வைக்கம் சென்றனர். வைக்கம் சத்தியாகிரக முகாம் பெரிய மைதானத்தில் ஓலைகளால் பல அறைகளுடன் அழகாக அமைக்கப்பட்டிருந்தது. அதில் தபால் பிரிவு, மருத்துவப் பிரிவு போன்ற பல பிரிவுகள் இருந்தன.

பஞ்சாபிலிருந்து வந்த சீக்கியர்கள் முகாமில் தங்கி சத்தியாகிரகத்தில் ஈடுபட்டவர்களுக்கு உணவளித்து வந்தனர். பெரியார் தலைமையில் போராட்டம் நடந்து கொண்டு இருந்தது. 50 தொண்டர்களுக்கு ஒரு தலைவரும் எல்லா தலைவருக்கும் மேலாக ஒரு தளபதி (தொண்டர் படைத் தலைவர்) கொண்ட போராட்டக் குழு அமைக்கப்பட்டிருந்தது. காலை 7 மணி முதல் தொண்டர்கள் முகாமிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு தாழ்த்தப்பட்டவர்கள் போகக் கூடாது எனத் தடுக்கப்பட்ட இடத்திற்கு பஜனையுடன் ‘ஜே’ முழக்கமிட்டு செல்வார்கள். குறிப்பிட்ட எல்லையை அடையும்போது போலீஸார், தொண்டர்களைக் கைது செய்து கொண்டு போவார்கள். நீதிபதியும் தொண்டர்களுக்கு தண்டனை கொடுத்து சிறைக்கு அனுப்பி விடுவார். கோவிலைச் சுற்றி நாலு பக்கமுள்ள தெருக்களின் எல்லையில்தான் தினமும் சத்தியாகிரகம் நடக்கும். அதாவது வடக்கே இருந்து தெற்கே போக வேண்டியிருந்தாலும், பல மைல் சுற்றித்தான் போக வேண்டும். போராட்டக்காரர்கள் பல மைல்கள் சுற்றி வரும்போது சந்து, பொந்துகளில் உயர்ஜாதித் தலைவர்களின் ஆட்கள் கூட்டமாக நின்று கொண்டு சத்தியாகிரகத் தொண்டர்களைத் தாக்கி உடைகளைக் கிழித்து அனுப்பி விடுவார்கள்.

காந்தியின் வருகை:

இந்த காலகட்டத்தில் தான் ,காந்தி வைக்கம் போராட்டத்தைக் காண வந்தார். காந்தி வருவதும் அதுவே முதல் முறை. காந்தியின் வருகையை எதிர்பார்த்துப் பலர் வைக்கம் வந்தனர். காந்தி அலங்கரிக்கப்பட்டிருந்த டாக்டர் .எம் .இ. நாயுடுவின் காரில் ஊர்வலமாக சத்தியாகிரக முகாமிற்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் திருவனந்தபுரம், நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்கு காந்தி பயணமானார். நாஞ்சில் நாட்டிலிருந்து சத்தியாகிரகத்தில் கலந்து கொண்ட காந்திதாஸ் முத்துசுவாமி பல துன்பங்களுக்கு ஆளானார். பொதுக்கூட்ட விளம்பரத்திற்கு நோட்டீஸ் கொடுப்பதற்குப் பதிலாக தமுக்கு அடித்துக் கொண்டுப் போவார். எதிரிகள் தமுக்கைப் பிடுங்கிக் கொண்டு அடித்து விரட்டிவிடுவார்கள். போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற ஒரு முஸ்லீம் நாகர்கோயிலைச் சேர்ந்த ரஹிம்சாகிப் என்பவர் தான்.

சீக்கியர்கள் வைக்கம் வந்து இந்துமதத்திற்கு எதிராக கலகம் ஏற்படுத்துகிறார்கள் என உயர்ஜாதி இந்துக்கள் காந்திக்குக் கடிதம் எழுதினார்கள். உடனே காந்தி, இந்துக்கள் அல்லாத மற்ற மதத்தினர் போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என அறிக்கைவிட்டார். அதனால் பலர் சொந்த ஊருக்குத் திரும்பினர். எம்.சிவதாணுப்பிள்ளை மற்றும் டாக்டர்.எம்.இ.நாயுடுவின் தலைமையில் கொஞ்சகாலம் சத்தியாகிரகம் நடந்தது. பெரியார்தான் சத்தியாகிரகத்தின் பொதுத்தலைவர். ராஜாஜி, வரதராஜிலு நாயுடு போன்றோரும் இதில் கலந்து கொண்டனர். திருவிதாங்கூர் அரசு பெரியாரை கோட்டயம் மாவட்டத்தை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என தடைஉத்தரவிட்டது.தடை உத்தரவை ஏற்றுக்கொண்டு பெரியார் தலைமைப் பதவியை டாக்டர்.எம்.இ.நாயுடுவிடம் ஒப்படைத்துவிட்டு, ஈரோடு சென்று விட்டார். நான்கு நாட்கள் கழித்து மனைவி நாகம்மாளுடன் பெரியார் வைக்கம் வந்தார். மீண்டும் பெரியார் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டார். பெரியாருக்கு ஒரு வருட சிறைத் தண்டனை அளிக்கப்பட்டு திருவனந்தபுரம் மத்தியச் சிறைக்குக் கொண்டு போகப்பட்டார். பரபரப்பு உண்டானது. பெரியாரின் மனைவி நாகம்மாள் தலைமையில் பெண்கள் பல நாட்கள் போராட்டம் செய்தனர். சில மாதங்கள் கழித்து நாஞ்சில் நாட்டில் இருந்து போனவர்கள் திரும்பினார்கள்.

போராட்டத்தின் விளைவாக அரசின் அப்போதைய அறிக்கையின்படி பிரச்சனைக்குரிய சாலைகள் இந்து அல்லாதவர்களுக்கும் திறக்கப்பட்டது. வைக்கத்திலிருந்து ஒரு பேரணியானது ஒழுங்கு செய்யப்பட்டது. இதே போன்று மற்றொரு பேரணி தென் திருவிதாங்கூர் கோட்டாறிலிருந்து திருவனந்தபுரம்வரை சென்றது. அப்போது வைக்கத்தில் இருந்து வந்த பேரணியும், கோட்டாறிலிருந்து வந்த பேரணியும் ஒன்றிணைந்தது. இவர்கள் ஒரு அஹிம்சை வழி அறிக்கையைத் தயாரித்து திருவிதாங்கூர் மகாராணி சேதுலெட்சுமி பாயிடம் 1924 - ஆம் ஆண்டு நவம்பர் 13 - ம் தேதி சமர்ப்பித்தனர்.

காந்திக்குக் கோவிலில் நுழைய அனுமதி மறுப்பு:

இந்நிலையில் ,1925 மார்ச் மாதம் 10 - ஆம் தேதி மீண்டும் காந்தி வைக்கம் சென்று அங்கு ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அதோடு 14 - ம் தேதி கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்குள் செல்ல காந்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை. காந்தி நாகர்கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தீண்டாமையினால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும், இந்து சமயத்தில் காணப்படும் தீமைகளைக் கண்டித்தும் உரையாற்றினார். பின்பு வைக்கம் கோவிலுக்குச் செல்லும் சுற்றுச் சாலைகள் ஜாதி வேறுபாடின்றி அனைவரும் பொதுவாகப் பயன்படுத்துவதுக்கு திருவிதாங்கூர் மகாராணியால் அறிவிக்கப்பட்டது. இந்தச் சலுகையானது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திருவிதாங்கூரில் உள்ள மற்ற கோவில்களுக்கு வழங்கப் படவில்லை. இதனால் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில் செல்லும் சுற்றுச் சாலைகளைப் பயன்படுத்துவதற்கான திருவிதாங்கூர் தழுவிய போராட்டங்களை சுசீந்திரம் போன்ற இடங்களில் நடத்த ஆலோசித்தனர்.

சுசீந்திரம் போராட்டம் தொடக்கம்:

தென் திருவிதாங்கூரில் கோவில் நுழைவுப் போராட்டம் தொடக்கமாக 1926 ஜனவரி 26 - ஆம் தேதி காந்திதாஸ் முத்துசாமி தலைமையில் சுசீந்திரம் கோயிலுக்குள் செல்ல முயற்சி செய்தனர் . அவர்கள் தடுக்கப்பட்டனர். மீண்டும் ஜனவரி 30 - ம் தேதி, பிப்ரவரி 11 ஆகிய நாட்களிலும் மீண்டும் கோவில் நுழைவுப் போராட்டம் நடந்தது. சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலைச் சுற்றி உள்ள சந்நிதித் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளில் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் வருவதற்கு கடுமையான விதிமுறையில் இருந்தன. தீண்டாமைக்கு எதிராக வைக்கம், குருவாயூர் போன்ற இடங்களில் போராட்டம் தீவிரமடைந்தது. அப்போது கேரள மாகாண காங்கிரஸ் கமிட்டி இந்தத் தீண்டாமைச் செயலைக் கண்டித்து வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதை வழக்கம்போல ஆங்கிலேயர் தடை செய்தனர்.

திருவிதாங்கூரில் உயர் ஜாதியில் பிராமணர்களுக்கு இணையாக நம்பூதிரிகளும் இருந்தனர். ரிஷப மண்டபத்திற்குள் பிராமணர் அல்லாத உயர் ஜாதியினர் மட்டுமே கடவுளை வழிபட அனுமதிக்கப்பட்டனர். இந்த ஜாதிப் பாகுபாடானது குமாரன் ஆசானால் திருவிதாங்கூர் அரசவையின் 12-வது கூட்டத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. சுசீந்திரம் சாலைகளில் நடமாட காணப்படும் ஜாதி பாகுபாடு மற்றும் கோயிலுக்குப் பக்கத்தில் காணப்படும் தாழ்ந்த ஜாதியினரை சாலைகளில் நுழைய விடாமல் தடுக்கக்கூடிய தடுப்புப் பலகைகள், மற்றும் கோயிலின் முக்கியத் தெருக்களின் வாசலில் தாழ்த்தபட்ட ஜாதி மக்களைத் தடுப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் மூங்கில் திரைகள் போன்றவையும் அரசவையின் கவனத்திற்கு சென்றன.

1926 பிப்ரவரி 19 - ம் தேதி சுசீந்திரத்தில் கோவில் நுழைவுப் போராட்டத்தை டாக்டர்.எம்.இ.நாயுடு, எம்.சிவதாணுபிள்ளை, செய்குதம்பிப்பாவலர், ரகீம் சாயுபு, பெருமாள் பணிக்கர், முத்துக்கருப்பப் பிள்ளை, காந்திராமன் போன்ற பலர் சேர்ந்துத் தொடங்கினர். மறுநாள் பெரியாரும் கலந்துக் கொண்டார்.கோவில் நுழைவுக்கு எதிராக நாஞ்சில் நாட்டின் 12 பிடாகைக்காரர்களும் சுசீந்திரத்தில் வைதீக நெறியின் காவலர்கள் போல் மேல்கரை மாதேவன் பிள்ளையின் தலைமையில் கூடி ஆலோசித்தனர்.

'சுசீந்திரம் வீதிகளை மக்கள் வரிப்பணத்தில் அரசு சீரமைக்கிறது. தெருக்களில் இரவு வெளிச்சத்திற்கு விளக்குகள் அமைப்பதும், துப்புரவு பணி செய்வதும் மக்கள் வரிப்பணம் தான். ஜாதி, மத வேறுபாடுகளின்றி அரசு ஊழியர்கள் சுசீந்திரம் வீதிகளில் செல்கின்றனர். அப்போது ஏற்படாத தீட்டு இப்போது எங்கிருந்து வந்தது? இந்து மதத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களை வீதிகளில் நடமாடத் தடுக்கும் பீடாகைக்காரர்களின் தீர்மானத்தை எதிர்க்கிறோம்' என காந்திராமனும் சிவதாணுப்பிள்ளையும் எதிர்த்தனர். அதன்பின் சத்தியாகிரகம் தொடர்ந்தது. அதுவரை சுசீந்திரம் வடக்குவீதி நுழைவில்தான், சத்தியாகிரகம் நடந்தது. பின்பு சன்னதி தெருவிலும், நுழைவிலும் சத்தியாகிரகம் ஆரம்பமானது.


தமிழ்நாட்டிலிருந்து கல்லிடைக்குறிச்சி லட்சுமி அம்மாள் அவரது கணவர் சங்கர அய்யரும் போராட்ட முகாமுக்கு வந்தனர். சத்தியாகிரகம் சூடு பிடிக்கத் தொடங்கியது, எதிர்ப்பும் கிளம்பியது. சுசீந்திரத்தை அடுத்துள்ள கற்காட்டில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களை அடித்து விரட்ட வேண்டும் என்பது பிடாகைக்காரர்களின் திட்டம் கற்காடு மக்கள்தான் அதிகளவில் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். எதிர்ப்பாளர்கள் ஆயுதங்களோடு தாக்கத் தயாராக, கற்காடு மக்களும் எதிர்த் தாக்குதலுக்குத் தயாரானார்கள்.

இந்தச் செய்தி டாக்டர். எம். இ நாயுடுவுக்குத் தெரியவர காந்திராமனையும், ஜீவாவையும் கற்காட்டிற்கு அனுப்பினார். இருவரும் ரகசியமாக கற்காட்டில் நுழைந்தனர். கற்காடு மக்களை அமைதியாக்க காந்திராமனும், எதிர்ப்பாளர்களை அமைதியாக்க ஜீவாவும் தனித்தனியே பிரிந்து சென்றனர். கற்காடு மக்கள் காந்திராமனின் பேச்சுக்குக் கட்டுப்பட்டனர். எதிர்ப்பாளர்களை ஜீவா அமைதியாக்கினார்.

காந்தி சுசீந்திரம் வருகை:

சுசீந்திரத்தில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், தாழ்த்தப்பட்ட மக்களில் சிலர் இஸ்லாமியராக, கிறிஸ்தவராக வேஷம் போட்டுக் கொண்டு வீதிகளில் திரிந்தனர். சுசீந்திரம் கற்காடு பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் காளை வண்டிகளில் சுசீந்திரம் சாலையைக் கடந்து செல்ல வேண்டுமானால், அதனை உயர்ஜாதி இந்து மதத்தைைைச்ச சார்ந்தவர்கள் கையில் ஒப்படைத்து நான்கு அணா என்கிற திருவிதாங்கூர் அரசு நாணயத்தை மாமூலாக கொடுத்தால்தான் அவர்கள் காளை வண்டிகளை சாலையை கடத்தி கொண்டு சென்று ஒப்படைப்பார்கள். இதுவே வழக்கமாக நடந்து வந்தது.

1927 அக்டோபர் 8 - ம் தேதி திருவிதாங்கூர் வந்த காந்தி, ராணி சேதுலட்சுமிபாயிடம் இதுபற்றிப் பேசினார். காந்தியின் வருகையானது சுசீந்திரம் சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட மக்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. இந்த சுற்றுப்பயணத்தின்போது காந்தி ஆற்றிய உரையில், மக்கள் சட்டத்திற்கு உட்பட்டு போராட்டத்தைத் தொடருமாறு வலிவுறுத்தினார்.

போராட்டத்தை நிறுத்த பல நாட்கள் பேச்சுவார்த்தை நடந்தது. இறுதியாக சுசீந்திரம் வடக்கு ரதவீதியில் கோவிலின் வடக்கு வாசலிலும், அதற்கு நேர் எதிரே வடபுறம் மடப்பள்ளி வழியாக தெப்பக்குளத்து நீர் சுவாமி அபிஷேகத்திற்குக் கொண்டு வரவேண்டி இருப்பதால், அந்த இடத்திலிருந்து 60 அடி கிழக்கு, மேற்கு தூரத்துக்குள் நீங்கலாக அனைத்து தெருவீதிகளிலும் எல்லோரும் நடமாடலாம் என திருவிதாங்கூர் அரசு சொன்னது. ஆனால் அது அரசு ஆணையாக பல மாதம் கழித்தும் வெளிவரவில்லை. தொண்டர்கள் பலர் தங்கள் ஊருக்கும் கிளம்பி போய் விட்டனர். அரசின் தந்திரம் வென்றது. சத்தியாகிரகமும் நின்றது.ஆனாலும் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் சாலைகளில் நடமாட அரசு அனுமதித்ததுபோல கோயில் வளாகத்திற்குள் சென்று சாமியை தரிசிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. காந்திராமன் தலைமையில் 1930 - ம் ஆண்டு மே மாதம் 12 - ம் தேதி சுசீந்திரம் சத்தியாகிரகம் மீண்டும் தொடங்கியது.போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவிலில் நுழைய அனுமதி கிடைத்தது:

சத்தியாகிரகத்திற்குப் பிறகு உயர்நீதிமன்றமானது, மனித உரிமையின் பேரில் சுசீந்திரம் கோவில் தெருக்களை எந்தவிதமான ஜாதி வேறுபாடின்றி அனைவருக்கும் திறந்துவிட உத்தரவிட்டது.மீண்டும் காந்திராமன் தலைமையில் 1931 - ம் ஆண்டு பிப்ரவரி 9 - ம் தேதி சத்தியாகிரகப் போராட்டம் தொடங்கியது. அதன்பின் திருவிதாங்கூர் அரசானது 1932 - ம் ஆண்டு நவம்பர் 8 - ம் தேதி ஒரு குழுவை நியமித்து, கோவில் நுழைவுப் போராட்டத்தைப் பற்றி விசாரித்து ஆலயப் பிரவேசம் பற்றி அறிக்கை சமர்ப்பிக்கும் முடிவை அறிவித்தது. அந்தக் குழு தனது அறிக்கையை 1934 - ம் ஆண்டு ஜனவரி 11 - ம் தேதி தாக்கல் செய்தது. அடுத்தகட்ட நடவடிக்கையாக திருவிதாங்கூர் அரசு இந்த விஷயத்தில் சமஸ்தானம் முழுவதும் ஒரு மக்கள் தீர்ப்புக்கான வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டது. இதன் விளைவாக பெருவாரியான உயர்ஜாதி இந்துக்கள், தாழ்த்தப்பட்டவர்கள் கோவில்களுக்குள் நுழைய தங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று தெரிவித்தனர். இறுதியில் 1936 - ம் ஆண்டு நவம்பர் 12 - ம் தேதி திருவிதாங்கூர் மகாராஜா சித்திரைத் திருநாள் ராமவர்மா வெளியிட்ட உத்தரவின் பேரில் அனைத்து ஜாதி மக்களும் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி கிடைத்தது.இதற்கு பிறகு தான் தமிழகத்தில் அனைவருக்கும் கோவிலில் நுழைய அனுமதி கிடைத்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இந்த ஆண்டோடு ஆலயப்பிரவேச உரிமை கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது.

-த.ராம்

0 Comments

Write A Comment