Tamil Sanjikai

திரைத்துறையில் மட்டுமல்லாமல் கார் ரேஸ், பைக் ரேஸ் போன்றவற்றில் ஆர்வத்தை காட்டும் அஜித், அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்‌ஷா எனப்படும் ஆளில்லா குட்டி விமான குழுவின் ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார். ஏற்கனவே அஜித்தின் ஆலோசனையின் பேரில் ஆளில்லா குட்டி விமான உருவாக்கத்தில் அந்த குழுவினர் ஈடுபட்டிருந்தனர். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்துமுடிந்த `Medical Express 2018 UAV Challenge’ சர்வதேசப் போட்டியில் தக்‌ஷா அணிக்கு 2-வது இடம் கிடைத்தது.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தக்‌ஷா குழுவினர் சார்பில் வடிவமைக்கப்பட்ட ட்ரோன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர் மாநாட்டில், முதலீடுகளை எதிர்பார்த்து, பல்வேறு நிறுவனங்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை காட்சிக்கு வைத்துள்ள நிலையில் தக்‌ஷா குழுவினரின் இந்த கண்டுபிடிப்பு அனைவரிடமும் பெரும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

பொதுமக்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ட்ரோன் 60 கிலோ எடை கொண்ட பொருட்களை தூக்கிக் கொண்டு, சுமார் 45 நிமிடங்கள் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோனில் பயணிக்க கூடிய நபர், தாம் எங்கே செல்ல வேண்டும் என்பது குறித்த தகவலை, தொடுதிரை மூலமாக பதிவு செய்யும் வசதி உள்ளது.

இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆண்டுகள் உழைப்பில் மாணவர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் அவசர காலத்தில், இந்த ட்ரோனை ஆம்புலன்சாக பயன்படுத்தி, பொதுமக்களை காப்பாற்ற முடியும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அஜித் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை சமூகவலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

0 Comments

Write A Comment