இணையதளத்தில் பேஸ்புக் எனப்படும் முகநூல் தளத்தை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கையை விட டிக்டாக் செயலியை பார்த்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் 31 வரையான காலத்தில் உலகெங்கும் 18.80 கோடி பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
சீனாவைச் சேர்ந்த பைட் டான்ஸ் என்ற நிறுவனம் 2016-ம் ஆண்டில் உருவாக்கிய செயலிதான் இது. இந்த செயலியில் உபயோகிப்பாளர் 3 வினாடி முதல் 15 வினாடி வரையிலான சிறிய இசை வீடியோவை பதிவேற்றம் செய்யலாம். அதேபோல 3 வினாடி முதல் 60 வினாடி வரையான இணைப்பு வீடியோ பதிவை இணைக்க முடியும்.
ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் செயல்படக்கூடிய இந்த செயலி . 75 சர்வதேச மொழிகளில் உள்ளது. உலகம் முழுவதும் 80 கோடி உபயோகிப்பாளர்கள் உள்ளனர். 200 நாளில் இந்த செயலி உருவாக்கப்பட்டது. ஒரு நாளைக்கு 100 கோடி வீடியோ பதிவுகள் இதில் பார்க்கப்படுகின்றன. அமெரிக்காவில் 8 கோடி தடவை இந்த செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செயலியானது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் (ஏ.ஐ.) செயல்படுகிறது. இதனால் தனி நபரின் ஆசை, விருப்பம் ஆகியவற்றை அறிந்து அதற்கேற்ற வீடியோ பதிவுகளை அளிக்கிறது. உலகிலேயே பி.யு.பி.ஜி. மொபைல், யூ டியூப், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்பவர்களின் எண்ணிக்கையை விட டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்வோர் எண்ணிக்கை அதிகம்.
இந்தியாவில் 20 கோடி பேர் டிக்டாக் செயலியை பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் இந்த செயலி மூலம் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் செய்வதாக புகார் எழுந்தது. இதனால் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதில் ஏப்ரல் மாதம் தடை விதிக்கப்பட்டது. ஆபாச வீடியோ உள்ளிட்ட தவறான தகவல் பரப்புவதை கட்டுப்படுத்துவதாக நிறுவனம் அளித்த உறுதிமொழியின் பேரில் இம்மாதம் தடை நீக்கப்பட்டது.
13 வகையான பாதுகாப்பு அம்சங்கள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. உபயோகிப்பாளர்கள் மத்தியில் செயலியை பயன்படுத்துவதில் உள்ள வழிகாட்டு நெறிகளை நிறுவனம் வெளியிட்டது. ஆங்கிலம் மட்டுமின்றி இந்தி, தமிழ் உட்பட 10 பிராந்திய மொழிகளில் வழிகாட்டு விதிமுறைகளை வெளியிட்டது. குழந்தைகளிடம் தவறான தகவல் பரவுவதாக நினைத்தால் பெற்றோர்களே அதை தடுக்கும் வசதி (ரெஸ்ட்ரிக்டர் மோட்) செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு எத்தனை முறை தங்கள் குழந்தைகள் இந்த செயலியை பயன்படுத்த வேண்டும் என்பதை கட்டுப்படுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. அதேபோல 13 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர் என்பதற்கான வயது வரம்பு கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. ரிஸ்க் வார்னிங் டாக் எனப்படும் புதிய நடைமுறை புகுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பாக இந்த செயலியை பயன்படுத்த முடியும்.
வீடியோ பதிவை மற்றவர்கள் பார்வையிட்டு உங்களைத் தொடர வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம். மோசமான விமர்சனங்களை வடிகட்டும் வசதி (பில்டர்) உருவாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மையம் இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை டிக்டாக் உபயோகிப்பாளர்கள் பயன்படுத்த முடியும். உங்களைப் பற்றிய தகவலை மற்றவர்கள் அறிந்து கொள்வதை எப்படி தடுப்பது, உங்கள் கடவுச் சொல்லை (பாஸ்வேர்டு) மேலும் வலுவானதாக மாற்றுவது எப்படி, தனிப்பட்ட விஷயங்கள் பரவாமல் தடுப்பது எப்படி என்பன போன்ற விவரங்களும் இதில் உள்ளன. பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதன் மூலம் மீண்டும் வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது டிக் டாக்.
0 Comments