Tamil Sanjikai

இத்தாலி நாட்டின் மிலன் நகரில் நடந்துவரும் ஐக்மா சர்வதேச மோட்டார் சைக்கிள் கண்காட்சியில், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 836சிசி திறன் கொண்ட புதிய மோட்டார்சைக்கிளின் கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . பாரம்பரியமான ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய ரக மோட்டார் சைக்கிள் மாடல்களை தயாரிப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. கான்டினென்டல் ஜிடி, ஹிமாலயன், இன்டர்செப்டார் 650 மாடல்கள் வரிசையில், தற்போது பாபர் ரக மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் ஈடுபடுவதற்கான முயற்சியில் இறங்கி உள்ளது . இதற்கு முன்னோட்டமாக ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில், KX என்ற புத்தம் புதிய மோட்டார்சைக்கிள் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பெருமையை வெளிப்படுத்தும் விதமாக, பிரம்மாண்டமான இந்த மோட்டார் சைக்கிள் கான்செப்ட்டை வடிவமைத்துள்ளது. 1937-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ராயல் என்பீல்டு KX மோட்டார் சைக்கிளின் அடிப்படையில் நவீன கால டிசைனுக்கு ஒத்துப்போகும் வகையில், இந்த மோட்டார் சைக்கிள் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. வெறும் 6 மாதங்களில் இந்த மோட்டார் சைக்கிள் வரைபட நிலையில் இருந்து கான்செப்ட் நிலைக்கு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. 1937-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 1140 KX மோட்டார் சைக்கிளானது Ultimate Luxury Motorcycle என்ற கொள்கையில் பிரபலப்படுத்தப்பட்டது. அந்த மோட்டார்சைக்கிளில் 1,140 சிசி ட்வின் சிலிண்டர் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு இருந்தது.

அதே பாணியில் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் புதிய KX மோட்டார்சைக்கிளை உருவாக்கி இருக்கிறது. பாரம்பரியமான பாபர் ரக வடிவமைப்பில் இப்புதிய மோட்டார்சைக்கிள் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் வட்ட வடிவிலான பகல்நேர விளக்குகளுடன்கூடிய எல்இடி ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது. பழைய 1140 KX மாடலைப்போன்றே, கர்டர் போர்க்குகள் அமைப்பு கொண்ட முன்புற சஸ்பென்ஷன் சிறப்பாக உள்ளது. முன்புறத்தில் பிரம்மாண்டமான அலாய் வீல்கள் மற்றும் டயர்கள், கீழே இப்புதிய ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளில் வி-ட்வின் சிலிண்டர் அமைப்புடைய 836 சிசி ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ராயல் என்பீல்டு மற்றும் போலரிஸ் நிறுவனங்களின் கூட்டணியில் இப்புதிய 836சிசி இன்ஜின் உருவாக்கப்பட்டு இருப்பது சிறப்பு. பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ள இப்புதிய மோட்டார்சைக்கிள் கான்செப்ட் அடுத்த ஆண்டு தயாரிப்பு நிலைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments

Write A Comment