ஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருப்பவருக்கு அதிகபட்சம் ரூ.72 லட்சம் பரிசு வழங்குவதாக தனியார் நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. அதற்காக ஒரு போட்டி வைத்து அதில் வெற்றி பெறுபவருக்கு இந்த பரிசுத் தொகையை வழங்க உள்ளது.
இன்றைய நவீன உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் இல்லாமல் 5 நிமிடம் கூட இருக்க முடியாது என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது. பாத்ரூமிற்கு கூட பலர் செல்போனை எடுத்துக் கொண்டு தான் செல்கின்றனர். இந்நிலையில் செல்போனுக்கு அடிமையாவதை தடுக்கும் வகையிலும் தனது நிறுவனத்தை பிரபலப்படுத்திக் கொள்ளும் வகையிலும் விட்டமின்வாட்டர் என்ற தனியார் நிறுவனம் ஒரு வருடத்திற்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருப்பவருக்கு ரூ.72 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் விட்டமின்வாட்டர் நிறுவனத்திடம், ஏன் ஸ்மார்ட்போனிடமிருந்து உங்களுக்கு இடைவெளி வேண்டும் என்பதை விளக்கும் வகையிலும், ஸ்மார்ட்போன் இல்லாத சமயங்களில் என்ன செய்வீர்கள் என்பது குறித்தும் எழுதி ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராமில் அதனை பதிவிட வேண்டும்.
இந்த போட்டியில் பங்கு பெறுபவர்கள் இந்த பதிலுடன் #nophoneforayear மற்றும் #contest என்ற ஹேஷ்டேக்குகளையும் இணைத்து பதிவிட வேண்டும். போட்டியில் கலந்து கொள்ள கடைசி தேதி ஜனவரி 8, 2019. இதற்குள் ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராம் மூலம் பதிவிட வேண்டும். இதன் பிறகு போட்டியில் தேர்வாகும் நபர்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி கொண்ட மொபைல் போன் வழங்கப்படும்.
போட்டியாளர்கள் ஒரு வருடத்திற்கு நிறுவனம் சார்பில் வழங்கப்படும் மொபைல் போனை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் லேப்டாப், டெஸ்க்டாப், அமேசான் அலெக்சா, கூகுள் ஹோம் போன்றவற்றை உபயோகித்துக் கொள்ளலாம். ஆனால், ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் ஆகியவற்றை உபயோகிக்ககூடாது.
வரும் ஜனவரி 22ம் தேதிக்குள் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான மொபைல் போன் வழங்கப்படும். ஒரு வருடம் முற்றிலுமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தவில்லை எனும் சோதனை மேற்கொள்ளப்பட்ட பின் பரிசுத் தொகை வெற்றியாளருக்கு வழங்கப்படும்
0 Comments