Tamil Sanjikai

ஐசக் நியூட்டன் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகியோரின் இயற்பியல் கோட்டுபாடுகள் தவறு என்றும் பூமி தன்னை தானே சுற்றுகிறதே தவிர சூரியனை சுற்றி வரவில்லை என்பதை நிரூபிக்க தயார் என தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வரும், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் கண்ணன் ஜெகதளா கிருஷ்ணன் மற்ற விஞ்ஞானிகளுக்கு சவால் விடுத்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள ஜெகதளா பகுதியை சார்ந்தவர் டாக்டர் கண்ணன் ஜெகதளா கிருஷ்ணன். 42 வயதான இவர் இயற்பியல் துறையில் இது வரை 5 முறை டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இவர் இயற்பியல் துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளையும் செய்து வருகிறார்.

குறிப்பாக பூமிக்கு புவி ஈர்ப்பு விசை இல்லை என்றும், அதே போல பூமி தன்னை தானே சுற்றுகிறதே தவிர சூரியனை சுற்றி வருவதில்லை என்பதை கண்டு பிடித்துள்ள கண்ணன் பூமிக்கு ஈர்ப்பு விசை உள்ளதாக கூறிய ஐசக் நியூட்டன் மற்றும், பூமி சூரியனை சுற்றி வருகிறது என்று கூறிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகியோர்களது இயற்பியல் கோட்பாடுகள் தவறு என்று தெரிவித்திருந்தார்.

அதனை பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கடந்த 4-ந்தேதி நடைபெற்ற 106-வது இந்திய அறிவியல் விஞ்ஞானிகள் மாநாட்டில் வெளியிட்டார். இது விஞ்ஞானிகளிடையே பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் டாக்டர் கண்ணன் ஜெகதளா கிருஷ்ணனின் கண்டுபிடிப்பை இந்திய அறிவியல் காங்கிரஸ் அமைப்பின் பொது செயலாளர் மாத்தூர் ஏற்க முடியாது என்று கூறி மறுத்து உள்ளார்.

இதனையடுத்து இன்று உதகையில் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் கண்ணன் ஜெகதளா கிருஷ்ணன் தனது கண்டு பிடிப்புகளை இது வரை 40 நாடுகளில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பி உள்ளதாகவும், அதனை சில விஞ்ஞானிகள் ஏற்று கொண்டுள்ளதாகவும், மற்றவர்கள் எந்த மறுப்பு கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார். மேலும் தனது கண்டுபிடிப்பை நிரூபிக்க தயராக இருப்பதாகவும் சவால் விடுத்தார்.

0 Comments

Write A Comment