1970, 80 களில் பிறந்தவர்களுக்கு கண்டிப்பாக ஜாவா இருசக்கர வாகனம் பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை இந்தியாவில் 1970-களில் இருசக்கர வாகன ஓட்டிகளின் மனதை கவர்ந்த வாகனங்களில் முக்கியமானது ஜாவா. சீறிப் பாயும் ஜாவாவுக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது. ஆனால் பிற்காலத்தில் ஜாவா மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுத்தப்பட்டது.
இருபத்தியிரண்டு வருடங்களுக்கு பின் இந்தியாவில் மிக ஆர்வமுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜாவா இருசக்கர வாகனம் இன்று (நவம்பர் 15) மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மோட்டார் சைக்கிளை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கிறது.அதன் விலை மற்றும் மாடல்களின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் புதிய ஜாவா மோட்டார் சைக்கிள் 293 சிசி திறன் இன்ஜினுடன் 6 கியர்கள் கொண்டது. 27 பிஎச்பி திறனுடன், பியூயல் இன்ஜக்ஷன் தொழில்நுட்பம் கையாளப்பட்டுள்ளது. ஜாவா மற்றும் ஜாவா 42 என இரண்டு பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டன. இவை மொத்தம் 9 கலர்களில் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜாவா பைக்கின் விலை 1.64 லட்சம் ரூபாயாகவும், ஜாவா 42 பைக்கின் விலை ரூ. 1.55 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச விலை ரூ. 1.89 லட்சமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும், டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை அடிப்படையில் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடங்களுக்கு தகுந்தவாறு விலையில் மாற்றம் இருக்கும்.
ஜாவா பைக் விற்பனைக்காக புதிய டீலர்களையும், விற்பனையாளர்களையும் நியமிக்க உள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. டிசம்பர் முதல் முழு அளவில் விற்பனை தொடங்கும் என தெரிகிறது. அதுபோலவே இன்று முதல் முன்பதிவும் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments