Tamil Sanjikai

மாருதி சுசூகி நிறுவனம் மாருதி ஆல்டோ 800 கார் உற்பத்தியை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . பல மக்களின் கார் கனவை நனவாக்கியதில் மாருதி நிறுவனத்துக்கு மிக முக்கிய பங்கு உண்டு. சிறிய ரக கார் சந்தையில் மாருதி 800 முன்னணியில் இருந்தது. அதன்பிறகு மாருதி 800 கார் மாடலில் மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய மாடல்கள் களம் இறக்கப்பட்டன. மாருதி 800 உற்பத்தி நிறுத்திய பிறகு, ஆல்டோ 800 பெயரில் இதே ரகத்தில் புதிய காரை மாருதி சுசூகி நிறுவனம் அறிமுகம் செய்தது. இதில் 796 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிஎஸ்6 தர இன்ஜின்களை 2020-ஆம் ஆண்டில் இருந்து செயல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாருதி ஆல்டோ மற்றும் ஓம்னியில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜின்களை பிஎஸ் 6 தரத்துக்கு ஏற்ப மாற்ற முடியாது. அதோடு கிராஷ் டெஸ்ட்க்கு ஏற்ப மாற்றங்கள் செய்ய அடுத்த ஆண்டு ஜூலை வரை கெடு உள்ளது. இவற்றையும் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. மேற்கண்ட மாடல்கள் எதிர்வரும் புதிய தர விதிகளுக்கு ஏற்ப மாற்ற முடியாததால் அவற்றின் உற்பத்தியை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மாருதி சுசூகி நிறுவனத்தின் பெரும்பாலான கார்கள் புதிய தர விதிகளுக்கு உட்பட்டு உள்ளன. பிற வாகனங்களிலும் இதற்கான மாற்றங்களை மாருதி நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது. மாருதி 800 கார் 1983-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் மூன்று தலைமுறை மாற்றங்கள் செய்யப்பட்டு, ஆல்டோ 800 2012-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பேஸ்லிப்ட் மாடல் 2016-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், அடுத்த நிதியாண்டின் 3-ம் காலாண்டுக்குள் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்படலாம் என தெரிகிறது.

0 Comments

Write A Comment