Tamil Sanjikai

இந்தியாவின் மிகப் பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் உள்நாட்டு விமானப் பயணிகளுக்கு எக்கானமி வகுப்பில் வழங்கி வந்த இலவச உணவினை நிறுத்த முடிவு செய்துள்ளது. நஷ்டம், கடன் போன்றவற்றில் சிக்கித் தவித்து வரும் ஜெட் ஏர்வேஸ் செலவுகளைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுமட்டுமல்ல அதன் பங்குகளை டாடா குழுமம் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களுக்கு விற்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஜெட் ஏர்வேஸ் பங்குகளை டாடா குழுமம் வாங்க விருப்பம் தெரிவித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஆனாலும் ஜெட் ஏர்வேஸில் 23 சதவீத பங்குகளை வைத்துள்ள எத்தியாட் ஏர்வேஸ்க்கு டாடா குழுமத்துடனான இணைவில் விருப்பம் இல்லை. இதனால் இழுபறி நீடிக்கிறது.

மறுபக்கம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தால் தங்களது சேவையைத் தொடர்ந்து வழங்குவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் திங்கட்கிழமை 14 விமானங்களை ரத்து செய்தது மட்டும் இல்லாமல் ஊழியர்களின் சம்பளத்தினையும் வழங்க முடியாத சூழலில் உள்ளது. கடந்த சில மாதங்களாகவே ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தால் தங்களது ஊழியர்களுக்குச் சரியான நேரத்தில் சம்பளம் கொடுக்க முடியவில்லை. தற்போது தங்களது செலவுகளைக் குறைக்கும் அடுத்தகட்ட நடவடிக்கையாக, உள்நாட்டு விமானப் பயணங்களின் போது எக்கானமி வகுப்பு பயணிகளுக்கு வழங்கி வந்த இலவச உணவு சேவையை நிறுத்தியுள்ளது.

நரேஷ் கோயலால் தொடங்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 25 ஆண்டுகளாக வெற்றிகரமாக விமானப் போக்குவரத்து சேவையை வழங்கி வந்தது. ஆனால் விமான எரிபொருள் விலை உயர்வு போன்ற காரணத்தால் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது. ஜெட் ஏர்வேஸ் மட்டும் இல்லாமல் பிற விமானப் போக்குவரத்து நிறுவனங்களும் கடந்த சில காலாண்டுகளாக நஷ்டம் அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசிடம் விமான எரிபொருள் விலையைக் குறைக்க பல முறை கோரிக்கை வைத்துள்ள போதும் இது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஆனால் விமான எரிபொருளில் எத்தனால் கலந்து பயன்படுத்துவது குறித்த சோதனையிலும் இந்தியா வெற்றிபெற்றுள்ள நிலையில், இதனைப் பயன்படுத்தியாவது விமான எரிபொருள் விலை குறையுமா, நட்டத்தில் இருந்து விமான நிறுவனங்கள் மீண்டும் எழுமா என்ற கேள்வியும் தற்போது எழுகிறது.

0 Comments

Write A Comment