இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, உயர்தொழில் நுட்பத்தில் தொலைத்தொடர்புக்கான ஜிசாட்-29 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைகோள் இன்று மாலை 5.08 மணிக்கு, சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிகட்ட பணியான 26 மணி 18 நிமிட நேர 'கவுண்ட் டவுன்' நேற்று மதியம் 2 மணி 50 நிமிடத்தில் தொடங்கியது. இதையடுத்து செயற்கைக்கோளை செலுத்துவதற்கான இறுதிக்கட்ட பணியில் விஞ்ஞானியில் ஈடுபட்டுள்ளனர்.
கடல்சார் ஆராய்ச்சி, தொலைத்தூர தகவல்களை பெறுவது, உயர்நுணுக்கமான தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஜிசாட்-29 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. மூவாயிரத்து 425 கிலோ எடை கொண்ட ஜிசாட்-29 செயற்கைக்கோளில் அதிநவீன சக்தி கொண்ட டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. கனரக வகையை சேர்ந்த இந்த ராக்கெட் மூலம் சுமார் 10 டன் எடை கொண்ட பொருளை எளிதாக விண்ணுக்கு அனுப்ப முடியும். பூமியில் இருந்து 36 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் ஜிசாட்-29 செயற்கைகோளை நிலைநிறுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 67-வது ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 -டி2 என்பது தனிச்சிறப்பு. தகவல் தொடர்புக்காக இஸ்ரோ தயாரித்த 33-வது செயற்கைகோள் ஜிசாட்-29 ஆகும். கஜா புயல் காரணமாக வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையால் ராக்கெட் ஏவப்படாது என்று செய்திகள் வெளியாகின. இதனை மறுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள், ராக்கெட்டும், ஏவுதளமும் அனைத்து விதமான காலநிலையை எதிர்கொள்ளும் சக்தியை கொண்டதால் புயல் பற்றி கவலைப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
0 Comments